ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எஸ்.பி. சண்முகநாதன் வேட்பாளர் ! – பெரியதாழையில் அதிமுகவினர் கொண்டாட்டம்

0
33
s.p.shanmuganathan

தூத்துக்குடி,மார்ச்.05:-

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வேட்பாளராக எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதனை வரவேற்று பெரியதாழையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியலிலை தலைமை இன்று அறிவித்தது. எடப்பாடியில் முதல்வர் பழனிசாமியும், போடிநாயகனூரில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரும், விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகமும், நிலக்கோட்டை(தனி)யில் தேன்மொழியும், ஸ்ரீவைகுண்டத்தில் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏவும் போட்டியிடுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏவுமான எஸ்.பி.சண்முகநாதனுக்கு 66 வயதாகுகிறது. 10ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். 1972ம் ஆண்டு முதல் அதிமுகவில் உறுப்பினராக இருந்து வரும் இவர், கிளை அமைப்பாளர், கிளை செயலாளர், பெருங்குளம் டவுன் பஞ்சாயத்து தலைவர், பண்டாரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

கடந்த 2000, 2009, 2010, 2013, 2015ம் ஆண்டுகளில் மாவட்ட செயலாளராக இருந்த இவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் தற்போது வரை தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., கடந்த 2001, 2011, 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று கைத்தறித்துறை, இந்துசமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, பால்வளத்துறை அமைச்சராக இருந்துள்ளார். 5வது முறையாக எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்தநிலையில் இதனை வரவேற்று சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழையில் அங்குள்ள எம்ஜிஆர் சிலை முன்பு அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here