தூத்துக்குடியில் குடோனில் தீ விபத்து – பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஏற்றுமதி துணி, டாய்ஸ் எரிந்து நாசம்

0
85
fire

தூத்துக்குடி, ஏப்.9-

தூத்துக்குடி தனியார் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள துணி, டாய்ஸ் உள்ளிட்டபொருட்கள் எரிந்து நாசமானது.

தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் சிப்காட் வளாகம் அருகே சிகால் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்துக்கு சொந்தமான குடோன் அமைந்து உள்ளது. இங்கு பல்வேறு நிறுவனங்கள் சார்பில் ஏற்றுமதிக்கான பொருட்களை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். பின்னர் அவைகளை கண்டெய்னர்களில் ஏற்றி துறைமுகத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து கப்பல்கள் மூலம் சம்பந்தபட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது வழக்கமாகும்.

அதன்படி ஈரோடு, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏற்றுமதிக்காக பல்வேறு நிறுவனங்களின் ஜவுளிகள், ரெடிமேட் ஆடைகள், டாய்ஸ், பேப்பர் ரீல் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மதியம் திடீரென அந்த குடோனில் தீ பற்றி எரிந்தது. இந்த தீ மளமளவென குடோன் முழுவதும் வேகமாக பரவியது. இதுகுறித்து தகவலறிந்த ஆய்வு பணிக்காக தூத்துக்குடிக்கு வந்திருந்த தீயணைப்புத் துறை துணை இயக்குநர் விஜயகுமார், தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி, தெர்மல் நகர், சிப்காட், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இதேபோன்று 4 தனியார் நிறுவனங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைக்கும் பணி தீவிரமாக நடந்தது. இதில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தாசில்தார் ஜஸ்டின்செல்லத்துரை, சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் கூறும்போது, இந்த குடோனில் பல்வேறு நிறுவனங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த ஏராளமான பொருட்கள் தீப்பற்றி எரிந்து உள்ளது. தற்போது காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் குடோனில் உள்ள பொருள்கள் வேகமாக தீப்பற்றி எரிகின்றன. ஆனாலும் 12 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடந்து உள்ளது. சேதவிபரம் உடனடியாக தெரியவில்லை என்றார்.

இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here