நடிகர் விவேக்குக்கு ஏற்பட்ட 100% ரத்தக்குழாய் அடைப்பு… யாருக்கு, எப்போது ஏற்படலாம்?

0
297
vivek

ரத்தக்குழாயில் 100 சதவிகிதம் அடைப்பு என்பது யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

சின்னக் கலைவாணர் நடிகர் விவேக் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி நம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. குறிப்பாக மாரடைப்பால் அவர் காலமானார் என்ற செய்தி நம்முள் கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள் இதய ரத்தக்குழாயில் 100 சதவிகிதம் அடைப்பு ஏற்பட்டிருந்தது என்று தெரிவித்தனர். ரத்தக்குழாய்களில் அடைப்பு என்பதை சாதாரணமாகக் கேள்விப்பட்டிருப்போம். அதென்ன 100 சதவிகித அடைப்பு என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.

ரத்தக்குழாயில் 100 சதவிகிதம் அடைப்பு என்பது யாருக்கெல்லாம் ஏற்படலாம் என்ற கேள்வியோடு இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் E.பாபுவிடம் பேசினோம்:

“100% அடைப்பு என்பது இரண்டு விதமாக ஏற்படும். திடீரென்று 100 சதவிகித ரத்தக்குழாயிலும் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும். அதை Acute Myocardial Infarction என்கிறோம். இதயத்துக்குச் செல்லும் மூன்று பிரதான ரத்தக்குழாய்களில் ஏதாவது ஒன்றில் ஏற்கெனவே படிந்திருக்கும். கொழுப்பின் மீது திடீரென்று சிறிய காயம் போன்ற சிதைவு ஏற்பட்டு அந்த இடத்திலேயே ரத்தம் உறைந்து அடைப்பை ஏற்படுத்திவிடும்.

இதனால் இதயத்தில் ரத்த ஓட்டம் ஏற்படாமல் மாரடைப்பு ஏற்படும். இதுபோன்ற மாரடைப்பு ஏற்படுபவர்களில் 85% பேருக்கு ரத்தக்குழாய்களில் ஏற்கெனவே கொழுப்பு படிந்திருக்கும். அதில் திடீரென உறைவு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும். சிலருக்கு அடைப்பு இல்லாமலேயேகூட திடீரென்று அடைப்பு ஏற்படலாம். ரத்தக்குழாய்களில் படிப்படியாக அடைப்பு ஏற்பட்டு 100% அடைப்பு ஏற்படுவதை Chronic Total Occlusion (CTO) என்கிறோம்.

நடிகர் விவேக்குக்கு இடதுபக்கத்திலுள்ள பிரதான ரத்தக்குழாயில்தான் 100% அடைப்பு ஏற்பட்டிருந்ததாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. இதயத்துக்கு பிரதானமாக ரத்தத்தை விநியோகிக்கும் பணியை அந்த ரத்தக்குழாய்தான் செய்கிறது. அதேபோல ரத்தக் குழாயில் எந்த இடத்தில் அடைப்பு ஏற்படுகிறது என்பதைப் பொறுத்து அதன் பாதிப்பு வேறுபடும்.

ரத்தக்குழாய் தொடங்கும் இடத்தில் அடைப்பு ஏற்பட்டால் இதயத்தின் பெரும்பாலான பகுதியில் உள்ள தசை பாதிக்கப்படும். ரத்தக்குழாய் முடியும் இடத்தில் அடைப்பு இருந்தால் வலி ஏற்படும். ஆனால் இதயத் தசையில் பாதிப்பு குறைவாக இருக்கும்.

100% பாதிப்பு இருந்தால்தான் மாரடைப்பு!

இதய ரத்தக்குழாய்களில் 100% அடைப்பு ஏற்பட்டால்தான் அதை மாரடைப்பு என்கிறோம். அடைப்பு வீதம் 100% சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்தால் 60, 70, 80 சதவிகித அடைப்பு இருந்தால் அது கரோனரி ஆர்ட்டரி டிசீஸ் (Coronary Artery Disease) என்று அழைக்கப்படும். மாரடைப்பு ஏற்பட்டு ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சையைத் தொடங்கிவிட்டால் பாதிப்பை சரிசெய்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிடலாம். தாமதிக்க தாமதிக்க இதயத்தசையின் செயல்பாடு குறைந்து முழுவதுமாக சீராக்குவதற்கான வாய்ப்பு குறையும்.

Interventional Cardiologist Dr E Babu

இதய ரத்தக்குழாய்கள் அடைப்பு என்பது பெரும்பாலும் நம் எல்லாருக்குமே இருக்க வாய்ப்புள்ளது. ஒரு குழந்தை தாய்ப்பாலுக்குப் பிறகு வேறு உணவு சாப்பிட ஆரம்பித்ததில் இருந்து, ஒரு குழந்தை 10 கிலோ எடையிலிருக்கும்போதிலிருந்தே ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிய ஆரம்பிக்கலாம். ஆனால், அது அன்றாட வாழ்க்கையைத் தொந்தரவு செய்வதில்லை. 50 சதவிகிதத்தைத் தாண்டும்போதுதான் அது நோயாகக் கருதப்படும். 50 சதவிகிதத்துக்கும் குறைவான அடைப்பு இருக்கும்போது அது பரிசோதனையில்கூட தெரியாது.

யாருக்கு வரலாம்?

மாரடைப்பைப் பொறுத்தவரை வயதுதான் முக்கியமான காரணி. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற வாழ்வியல் சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, புகைபிடிப்பவர்களுக்கு இளவயதிலேயே மாரடைப்பு ஏற்படலாம். மனஅழுத்தம், உடல் பருமன், உடல் இயக்கம் இல்லாமல் இருப்பது, துரித உணவுகள், அதிக கொழுப்புச்சத்து, இனிப்புச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்பவர்களுக்கும் இது ஏற்படலாம். இதுதவிர, 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மத்தியில் இந்தப் பிரச்னை பொதுவாகக் காணப்படும்.

பெண்களுக்கு மெனோபாஸுக்குப் பிறகு ஏற்படலாம். பெண்களுக்கும் மெனோபாஸுக்கு முன்னதாக வாழ்வியல் சார்ந்த நோய்கள் இருந்தால் அதற்கு முன்பாகவேகூட மாரடைப்பு ஏற்படலாம். குடும்பத்தில் யாருக்கேனும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் வாரிசுகளுக்கு, உடன் பிறந்தவர்களுக்கு வரலாம்.

தவிர்க்க முடியும்!

இதில் வயது, பாலினம், குடும்ப வரவாறு போன்ற காரணிகளைத் தவிர்க்க முடியாது. ஆனால், பிற காரணங்கள் அனைத்தையும் சரிசெய்ய முடியும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வதன் மூலம் வாழ்வியல் சார்ந்த நோய்களைத் தடுப்பதோடு மாரடைப்பு ஏற்படுவதையும் தவிர்க்கலாம். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுதோறும் அடிப்படை மருத்துவ பரிசோதனை செய்வதன் மூலம் இதயத்தில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று கண்டறிய முடியும். குடும்ப வரலாறு, வாழ்வியல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் 35 வயதுக்கு மேல் ஆண்டுதோறும் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here