அதிமுக, திமுக இதில் எது ஆட்சிக்கு வந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினாலும் தமிழகம் திவாலே !

0
61
admk - dmk

2021 சட்ட சபைத் தேர்தலில் அதிமுக, திமுக என இரு கழகங்களும் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற எவ்வளவு நிதி தேவையாக இருக்கும் என்பதை பார்ப்போம். வாக்குறுதிகளுக்குத் தேவையான தோராயமான நிதியை அடைப்புக்குறிக்குள் காணலாம்.

அதிமுக :

இல்லத்தரசிகளுக்கு தலா மாதம் ரூ.1500(ஆண்டுக்கு ரூ.36,000 கோடி), ஆண்டுக்கு 6 இலவச காஸ் சிலிண்டர்கள்(ஆண்டுக்கு ரூ.10,000 கோடி), வாஷிங் மெஷின் (ஒருமுறை வழங்க ரூ.2 லட்சம் கோடி), சோலார் குக்கர் (ஒரு முறை வழங்க ரூ.12,000 கோடி), மொத்தம் ரூ.2.58 லட்சம் கோடி.

திமுக :

இல்லத்தரசிகளுக்கு தலா மாதம் ரூ.1000 கோடி(ஆண்டுக்கு ரூ.24,000 கோடி), கொரோனா நிவாரணம் ரூ.4,000 (ஒரு முறை ரூ.80,000 கோடி), சமையல் காஸ் மானியம் ரூ.100 (ஆண்டுக்கு ரூ.2,000 கோடி), சேஷத்ராடனம் செய்யும் 1 லட்சம் பேருக்கு ரூ.25,000 மானியம் (ஆண்டுக்கு ரூ.250 கோடி), பெட்ரோல் மானியம் லிட்டருக்கு ரூ.5, டீஸல் மானியம் லிட்டருக்கு ரூ.4 (சுமாராஹ ஆண்டுக்கு ரூ.6,750 கோடி), இவை தவிர கடன் தள்ளுபடி அறிவிப்புகள். அவற்றை சேர்க்காமல் மொத்தம் ரூ.1.13 லட்சம் கோடி.

நடப்பு நிதி ஆண்டான 2021 22 தமிழக அரசின் வருவாய் ரூபாய் 2.19 லட்சம் கோடி. செலவு ரூபாய் 2.60 லட்சம் கோடி. பற்றாக்குறை ரூபாய் 41 ஆயிரம் கோடி. இது தவிர, இந்த ஆண்டு கொடுக்க வேண்டிய கடன் தவணை ரூபாய் 20 ஆயிரம் கோடி. மூலதன கணக்குகளை சேர்த்தால், மொத்த பட்ஜெட் பற்றாக்குறை ரூபாய் 97 ஆயிரம் கோடி. இதுதவிர தமிழக ஜிடிபியில் 5 சதவிதம்.

இந்தநிலையில், வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றால் அதிமுக ஆண்டுக்கு ரூபாய் 46 ஆயிரம் கோடி திமுக ஆண்டுக்கு ரூபாய் 31 ஆயிரம் கோடியும் கூடுதலாக செலவு செய்ய வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழக பட்ஜெட் துண்டு 7.4 சதவீதம் ஆகும். திமுக ஆட்சிக்கு வந்தால் 6.6 சதவீதம் ஆகும். இத்துடன் ஒருமுறை செலவை சேர்த்தால் அதிமுக ஆட்சியில், நடப்பு நிதி ஆண்டில் பட்ஜெட் துண்டு 18 சதவீதம் ஆகும். திமுக ஆட்சிக்கு வந்தால் 10.75 சதவீதமாகும்.

இது சாத்தியமே அல்ல. காரணம், ரிசர்வ் வங்கியின் விதிப்படி பட்ஜெட் பற்றாக்குறை 3 சதவிதத்தை மீறினால் மாநில அரசினால் கடன் வாங்க முடியாமல் போகும் (கொரோனா பாதிப்பினால்தான் கடந்த, நடப்பு ஆண்டுகள் 3 சதவீத கட்டுப்பாடு தளர்த்தப்பட்டிருக்கிறது). இந்தச் செலவுகளை பகிர்ந்து, வரும் ஆண்டுகளில் செலவழித்தால் கூட, பட்ஜெட்டில் விழும் துண்டு கட்டுக்கடங்காது. அதற்கு மேல், நடப்பு ஆண்டு முடிவில் தமிழக கடன் ரூபாய் 5.7 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கும். தேர்தல் வாக்குறுதி செலவுகளைச் சேர்த்தால், அதிமுக வாக்குறுதிகளில் ஒருமுறை செய்யும் செலவினத்திற்கு கடன் ரூ. 8 லட்சம் கோடியாக உயரும். இதுதவிர ஆண்டுக்காண்டு ரூ.46 ஆயிரம் கோடி கடன் அதிகமாகும்.

திமுக வாக்குறுதிகளில், ஒருமுறை செய்யும் செலவினத்தால் கடன் ரூபாய் 6.6 லட்சம் கோடியாக உயரும். அது தவிர, கடன் ஆண்டுக்காண்டு ரூ.31 ஆயிரம் கோடி அதிகமாகும். தமிழக அரசின் நிதிநிலை, அதன் கடன் வாங்கும் தகுதி இரண்டையும் கழகங்களின் வாக்குறுதிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், எந்த கழகம் ஆட்சிக்கு வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றமுற்பட்டாலும் தமிழகம் திவால் ஆவது உறுதி. அந்த வகையில் அமையப் போகும் கழக அரசு எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்பது மிகப் பெரிய கேள்விக் குறியே !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here