தூத்துக்குடி அருகே நெற்பயிரும் உப்பளமும் ஒரே இடத்தில்..

0
118
arumuganeri

உப்பு விளையும் உப்பளம் அருகே முற்செடிகளை தவிர வேறு எந்த தாவரமும் வளராது என்பார்கள். ஆனால் ஒரு குடும்பத்தினர் உப்பளத்திற்கு மிக அருகில் நெல் பயிரை வளர்த்து கோட்டை கணக்கில் நெல்லை விளைவித்து வருகிறார்கள் என்றால் அது அதிசயம்தானே..!

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி ஊரை சேர்ந்தவர் எஸ்.வி.எம்.கிருஷ்ணவேல். இவரது மகன் எஸ்.வி.எம்.கே.சுதாகர். இவர்தான் நெற்பயிரையும், உப்பளத்தையும் ஒரே இடத்தில் அமைத்து சாதனை படைத்து வருகிறார். அறிதான காரியங்களை செய்வதில் ஆறுமுகநேரிக்காரர்கள் கெட்டிக்காரர்கள். தூத்துக்குடி மாவட்ட விடுதலை போராட்ட வீரர்கள் லிஸ்ட்டில் இந்த ஊரைச்சேர்ந்தவர்களின் பெயர்கள் ஏராளம் இருக்கிறது. அந்த வகையில் அவர்களில் பலர் சாதானையாளர்கள்தான்.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரையில் நஞ்சை விவசாயம், புஞ்சை விவசாயம், உப்பளம் மற்றும் மீன்பிடித்தல் இவைகளே பிரதான தொழிலாகும். அடுத்தடுத்து வந்ததுதான் தொழிற்சாலைகள் மூலமான பல்வேறு உற்பத்தி தொழில்கள். மாவட்டத்தின் வடக்கு பகுதியில் மானாவாரி விவசாயமும், வைப்பார் ஆற்றுபாசனமும் இருக்கிறது. மாவட்டத்தின் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் பிரதான விவசாயம் தாமிரபரணி ஆறும் அதன் தொடர்ச்சியான குளங்கள் மூலமாகும் நடைபெறுகிறது. நெல், வாழை, வெற்றிலை, தென்னை போன்றவை இங்கு சாகுபடி செய்யப்படுகிறது.

தாமிரபரணி ஆற்றின் கடைசி பாசன எல்லைப்பகுதியாக ஆறுமுகநேரி இருந்து வருகிறது. ஆறுமுகநேரி, காயல்பட்டணம் பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களுக்கு ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டில் இருந்து தென்கால் வாய்க்கால் வழியாக ஆத்தூர் கீரனூர் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அந்த தண்ணீர் அப்பகுதியிலுள்ள சுமார் 2ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த பகுதியில் நெல் விவசாயம் செய்து கோட்டை கோட்டையாக நெல் அறுவடை செய்வதில் எந்த வியப்போ ஆச்சர்யமோ இல்லை. அந்த அளவிற்கு சுற்றி நல்ல தண்ணீர் வசதி இருக்கிறது. ஆனால் அதே பகுதியில் டன் கணக்கில் உப்பும் உற்பத்தி ஆகுகிறது என்பதுதான் ஆச்சர்யமாகும்.

தாமிரபரணி ஆற்றின் கடைசி எல்லையாக இருக்கும் அதேவேளை, கடல் எல்லையின் தொடக்கமும் அதுதான். அதாவது வடக்கு பகுதியில் விவசாயமும், கீழக்குபகுதியில் உப்பளமும் அமையப்பெற்றிருக்கிறது ஆறுமுகநேரி. அந்த ஊரை சேர்ந்தவர்கள் உப்பள உரிமையாளராகவும், விவசாய நிலங்களை கொண்ட நிலக்கிழாராகவும் விளங்கி வருகிறார்கள். அதில் ஆறுமுகநேரி ஸ்ரீமுத்துமாலையம்மன் என்கிற பெயரில் உப்பு, நெற்பயிர் என இரண்டையும் ஒரே இடத்தில் விளையவித்து அசத்தி வருகிறார்கள் கிருஷ்ணவேல் குடும்பத்தினர்.

இது குறித்து விவசாயியான சுதாகரிடம் பேசினோம், ‘’எனது தாத்தா வழியில், எனது அப்பா கிருஷ்ணவேல் ஆலோசனையின் பேரில் உப்பளத்தையும், வயலையும் ஒரே இடத்தில் அமைத்து விவசாயம் செய்து வருகிறோம். இரண்டையும் பக்கத்தில் வைத்தால் ஒன்றுக்கொன்று சரிவராது என சிலர் சொல்வாங்க. ஆனால் அது அப்படி அல்ல. இரண்டையும் பக்கம் பக்கமாக வைத்தாலும் முறையாக செயல்பட்டால் ஒன்றையொன்று பாதிக்காது. அதற்கு நாங்க செய்யும் தொழிலே சாட்சி.

நல்ல தண்ணீரில் விளையும் நெல்பயிர் உப்பு தண்ணீர் புகுந்தால் கெட்டுப்போகும் என்றும் நல்ல தண்ணீர் உப்பளத்துக்குள் புகுந்தால் டிகிரி குறைந்து உப்பு உற்பத்தி ஆகாது என்றும் ஐயப்படுவது இயல்புதான். ஆனால் அதையும் மாற்றி அமைக்க முடியும். உப்பளத்தில் நாம் கொடுக்கிற இறுக்கம், உப்பு தண்ணீரை வெளியில் போகவிடாது. அதுபோல் நல்ல தண்ணீரை உள்ளே போகவிடாது. அந்த கலையை கையாண்டால் எந்த விவசாயத்தையும் எதிலும் செய்யலாம்.

நெல்பயிர் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் ஆத்தூர் கால்வாய் மூலம் எங்களுக்கு தாராளமாக கிடைக்கிறது. அதன் வாய்க்கால் எங்கள் உப்பளம் அருகில் வரை வருகிறது. இருந்தாலும் நாங்கள் உப்பு உற்பத்தியில் டாப்லதான் இருக்கிறோம். இங்கே விளைந்திருக்கும் நெல்லை பாருங்க. அதே மாதிரி இங்கே விளைந்திருக்கும் உப்பையும் பாருங்கள். எதாவது சொத்தையாக இருக்கிறதா வளமாகத்தான் இருக்கிறது. இதிலிருந்து என்ன புரிஞ்சுக்க முடியும் என்றால் வெவ்வேறு தன்மையுள்ள தண்ணீரை கொண்டு அருகருகே கூட விவசாயம் பார்க்கலாம். அதற்கு முறையான கண்காணிப்பு வேண்டும் அவ்வளவுதான்’’ என்றார்.

கண்ணும் கருத்துமாக இருந்தால், கடலில் கூட நெல்விளைவிக்கலாம் போல.

– நடுநிலை.காம் ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here