இந்த மண்ணில் தோன்றுகிற அனைத்தும் முக்காலத்துக்கும் நல்லவையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நெறிப்படுத்தும் கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த கட்டுப்பாடுகள் வரையறை செய்யப்பட்ட சட்டங்கள் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இது உலகம் முழுவதும் இருக்க கூடியதுதான். நாட்டுக்கு நாடு தேசத்துக்கு தேசம் சற்று மாறுபடலாம் அவ்வளவுதான்.

எக்காலத்தையும் நெறியோடு கடப்பதுதான் நமது நாட்டின் கலாசாரம். நெறி தவறுவோருக்கு இங்கே மதிப்பு கிடையாது. எத்தனையோ தடைகளுக்கு பிறகும் இந்த இந்திய நாடு தனது சிரத்தன்மையை இழக்காமல் செயல்பட்டுக் கொண்டிருப்பதற்கு சட்டத்தை பாதுகாக்கிற அந்த நெறிதான்.
ஆனால் தற்போது சிலர் அந்த நெறியோடு விளையாடுகிறார்கள். ’நீண்ட நிம்மதி இருந்தால் அசாதாரத்தின் அடிப்படை மறந்து போகும்’ என்பதற்கு உதாரணமாக சில அநியாங்கள் சமீபகாலத்தில் நியாங்களாக பார்க்கப்படுகிறது. அரசின் தவறுகளை தட்டி கேட்கிறோம் என்கிற பெயரில் நடத்தப்படும் உரிமை போராட்டங்கள் சில வரம்பு மீறியதாகவே பார்க்க முடிகிறது.
அரசுக்கு எதிராக ஒரு அலையை உருவாக்கும் திட்டமே பல போராட்டங்களுக்கு அடிப்படையோ என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு சம்பவங்கள் நடந்து வருகிறது. அரசுக்கு எதிராக மக்களை திருப்பும் செயலுக்கு அரசு திட்டங்கள் பகடை காயாக இருக்கிறது. கொண்டு வரும் திட்டங்கள் சரியானது அல்ல என்பது போலவே சித்தரிப்பதாகவே தெரிகிறது. திட்டத்தில் உள்ள குறைகள் மட்டும் சுட்டிக்காட்டப்படுகிறது. நிறைகள் விளக்கபடுவதில்லை.
அந்த வரிசையில் குடியுரிமை சட்ட மசோதாவும் அல்லோலப்படுகிறது. மசோதா குறித்து மக்களிட அச்ச உணர்வு ஊட்டப்படுவதாகவே தெரிகிறது. குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக பாளையங்கோட்டையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பட்டி மன்ற பேச்சாளரும் காங்கிரஸ் கட்சி பிரமுகரான நெல்லை கண்ணன், சர்ச்சைக்குறிய வார்த்தையை பயன்படுத்தி பேசிவிட்டார். பொது வெளியில் ‘நாட்டின் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை இன்னும் ஏன் கொல்லாமல் வைத்திருக்கிறீர்கள்’ என்கிற அர்த்தமுள்ள வார்த்தையை உதிர்த்துவிட்டார்.
இஸ்லாமிய மக்களில் சிலர் ஏற்பாடு செய்திருந்த அந்த நிகழ்ச்சியில் அப்படியொரு வார்த்தையை பிரயோகம் செய்ததால், அந்த மக்களை எதோ ஒரு வகையில் குற்றம் செய்கிறவர்கள் போலவும் அவர்களை கொலைக்கு தூண்டுவது போலவும் இருக்கிறது என்று பாஜக அமைப்பை சேர்ந்தவர்கள் போலீஸில் புகார் செய்தனர். நெல்லை கண்ணனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என போராட்டமும் நடத்தினர்.
வேறு வழியில்லாமல் போலீஸாரும் நெல்லை கண்ணன் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைதும் செய்திருக்கிறார்கள். இப்போது சிறையில் அடைக்கப்பட்ட நெல்லைக்கண்ணனுக்கு ஆதரவாக சில அமைப்புகள் குரல் எழுப்ப துவங்கியிருக்கிறார்கள். ’நெல்லை கண்ணன் ஒரு தமிழ் கடல்’ என அவரின் புகழ்பாடும் அமைப்பினர் சமுக வலைதளங்களில் வரிந்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக எதாவது சர்ச்சையில் சிக்குவோர் மீது வழக்குபதிவு செய்யப்படும். அவர் நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைக்கப்படுவதும் விடுதலைசெய்யப்படுவதும் எதாவது ஒன்று இருக்கும். ஆனால் நாட்டின் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் கொலை செய்யுங்கள் என்பது போல் அர்த்த வார்த்தைகளை பிரயோக செய்தவருக்கு ஆதரவாக சில அமைப்பினர் கச்சை கட்டி ஆடுவது வேடிக்கையானதாக இல்லை வேதனையானதாக இருக்கிறது.
எதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் எதற்கு ஆதரவு கொடுக்க கூடாது என்கிற வறைமுறை வேண்டாமா? சில அமைப்பினர் இதுபோன்ற தவறுகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இது ஏற்றுக் கொள்ள கூடாது வாதம். எதிர் காலத்தில் எதாவது அசாதார சூழல் வரக் கூடாது என்பதற்காகவே தற்போதைய தவறுகளுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.
நெல்லை கண்ணன் தவறு செய்திருக்கிறார் என்பதற்கு வீடியோ ஆதாரம் இருக்கிறது அப்படி தெரிந்தும் அவருக்கு ஆதரவாக சிலர் குரல் கொடுப்பது எதிர் கால சிரத்தன்மைக்கு உகந்தது அல்ல. உப்பு திண்றவர் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். அவர் தவறு செய்திருக்கிறார் அல்லது தவறு செய்ய வில்லை என்று நீதிமன்றம் முடிவு சொல்லட்டும். அதற்குள் அவரைவிட வேண்டும் என்று போராடுவது விசித்திரமானதாக இருக்கிறது. சிலர் நெல்லைக்கண்ணை தமிழ் கடல், தமிழ் அறிஞர் அதனால அவரை விடுங்கள் என்பதுபோல் வாதிடுகிறார்கள்.
அப்படியானால் தமிழ் அறிஞர் என்றால் எந்த தவறும் செய்துவிடலாமா? அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாதா? என்கிற கேள்வியும் எழுகிறது. இப்படி தேவையில்லாத விசயங்களுக்கெல்லாம் ஆதரவாக குரல் கொடுத்து குரல் கொடுத்து உங்களின் தரத்தை குறைக்காதீர்கள் நண்பர்களே !
நெல்லை கண்ணன் பேசியிருப்பது தவறென்றால் அவரை ஆதரித்து பேசுவது அதைவிட பெரிய தவறு – நடுநிலை.காம் எஸ்.சரவணப்பெருமாள்