அதிமுக கோட்டையில் திமுக கொடி… ஸ்டாலினிடம் சபாஷ் வாங்கிய திமுக மாவட்டச் செயலாளர்..!

0
9
dmk

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 3 தொகுதிகளையும் கைப்பற்றி ஸ்டாலினின் நன்மதிப்பை பெற்றிருக்கிறார் திமுக மாவட்டப் பொறுப்பாளர் ராஜேஷ்குமார்.

திமுக இளைஞரணியில் மாவட்ட அமைப்பாளராக இருந்த ராஜேஷ்குமார், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக புரோமோஷன் செய்யப்பட்டார். இதையடுத்து சின்னப்பையனுக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியா என உள்ளூர் கட்சிக்காரர்கள் சிலர் அவரை கேலியும் கிண்டலும் செய்யத் தொடங்கினர்.

இதனிடையே அதனை பொருட்படுத்தாத ராஜேஷ்குமார், தம் மீது ஸ்டாலின் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற ஒற்றை அஜெண்டாவோடு கொரோனா காலத்திலும் திமுக நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். மேலும், நாமக்கல் அல்லது திருச்செங்கோடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட விரும்பி அதற்கான நேர்காணலிலும் கலந்துகொண்டார். கடைசியாக அவர் போட்டியிட விரும்பிய திருச்செங்கோடு தொகுதி கூட்டணிக் கட்சியான கொ.ம.தே.க.வுக்கு சென்றுவிட்டது. நாமக்கல் தொகுதி புதுமுகமான ராமலிங்கத்துக்கு கொடுக்கப்பட்டது.

அரசியல் என்றாலே காழ்ப்புணர்ச்சியும், உள்ளடி வேலைகளும் இருக்கும் இந்தக் காலத்தில், தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படாத நிலையிலும் தனது நிர்வாகத்தின் கீழ் வரும் 3 தொகுதிகளிலும் உதயசூரியனை உதிக்க வைத்துள்ளார் ராஜேஷ்குமார் குறிப்பாக ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் சரோஜாவை வீழ்த்தி அங்கு திமுக வேட்பாளர் டாக்டர் மதிவேந்தனை வெற்றி பெற வைத்திருக்கிறார்.

இதேபோல் அதிமுகவின் கோட்டையாக திகழ்ந்த சேந்தமங்கலம் தொகுதியை இந்த முறை மீட்டு ஸ்டாலின் வசம் ஒப்படைத்திருக்கிறார். இது ஸ்டாலினை பெரிதும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. மேலும், நாமக்கல் தொகுதியில் அதிமுக தான் வெற்றிபெறும் என கருத்துக் கணிப்புகள் உறுதியாக கூறிய போதும், அங்கும் புதுமுக திமுக வேட்பாளரான ராமலிங்கம் வெற்றிக் கொடி நாட்டியுள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், சில மாவட்டச் செயலாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமலும் போகலாம். ஆனால் அதற்காக அவர்கள் சுணங்கிவிடக் கூடாது என அறிவுரை நல்கியிருந்தது கவனிக்கத்தக்கது.

இதனிடையே 1967-ம் திருச்செங்கோடு நாடாளுமன்ற தொகுதியில் பேராசிரியர் அன்பழகன் வெற்றிக்காக உழைத்த ராஜேஷ்குமாரின் தாத்தா ராமசாமி, அண்ணாவின் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்போது தாத்தாவை போல் பேரனும் பிறரது வெற்றிக்காக உழைத்து ஸ்டாலினிடம் பாராட்டை பெற்றிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here