ராமநாதபுரம்: தமிழகத்தின் முதல்வராக, வரும் மே 7ம் தேதி ஸ்டாலின் பதவி ஏற்கவுள்ள நிலையில், அவருக்காக ஒரு பெண் தனது நாக்கை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணி 159 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பின் தனிப் பெரும்பான்மையோடு தி.மு.க., ஆட்சி அமைக்க உள்ளது. 50 ஆண்டுகாலமாக அரசியலில் இருக்கும் ஸ்டாலின் முதல் முறையாக முதல்வராக பதவி ஏற்கவுள்ளதை அடுத்து தி.மு.க.,வினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவகுடியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி வனிதா, 32. தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக வேண்டியுள்ளார்.
அதன்படி இன்று காலை பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலில் தனது நாக்கை கத்தியால் அறுத்துள்ளார். கோவில் திறக்காததால் நாக்கினை வாசல்படியில் வைத்துவிட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். அந்த பெண்ணை பொதுமக்கள் மீட்டு, பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பகுத்தறிவு பிரசாரம் செய்யும் ஸ்டாலின் முதல்வராவதற்காக பெண் நாக்கை அறுத்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.