பாஜகவிற்கு தோல்வி இல்லை – அப்படியொரு தோற்றம் உருவாக்கப்படுகிறது

0
113
bjp

இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் கட்சி பாஜக. அனைத்து மாநிலங்களிலும் தனது ஆட்சியை கொண்டு வர செயல்பட்டுக் கொண்டிருக்கிறது அது. கர்நாடகம்,உ.பி உள்பட பல மாநிலங்களில் பாஜக ஆட்சி இருக்கும் நிலையில், நுழையவே விடமாட்டோம் என சொல்லி வந்த தமிழ்நாட்டிலும் 4 எம்.எல்.ஏக்களை தற்போது பெற்றிருக்கிறது பாஜக.

மேற்கு வங்கத்தில் கடந்த முறை வெறும் 3 எம்.எல்.ஏக்களை பெற்ற பாஜக, இந்த முறை 77 எம்.எல்.ஏக்களை பெற்றிருக்கிறது. அதேபோல் கேரளம் தவிர அஸ்ஸாமில் ஆட்சியை தக்க வைத்திருக்கிறது.

தமிழகத்தில் ஆதரித்த அதிமுக அரசு மீண்டும் வரமுடியாமல் போனது, எப்படியும் ஆட்சியை பிடித்தே தீரவேண்டும் என கங்கணம் கட்டியும் மம்தாவோடு போராடி வெற்றி பெறமுடியாமல் போனது போன்ற காரணங்களால் பாஜக வெற்றியை கொண்டாட முடியவில்லை.

அதேவேளை, அதன் கடந்த கால நிலையில் இருந்து அக்கட்சி முன்னேறியிருக்கிறது என்பதை அரசியல் தெரியாதவர்கள் கூட அறிந்திருக்கிறார்கள். ஆனால் பாஜகவை விரும்பாத கட்சியினரும், விரும்பாத எதிர்ப்பாளர்களும் பாஜக கடுமையாக தோற்றுவிட்டது என்பதுபோல் சித்தரிக்கிறார்கள்.

இது வெறும் பேச்சல்ல, வேணுமென்றே பேசப்படும் பேச்சுதான். பாஜக முன்னேறியிருக்கிறது என்கிற பார்வை உருவானால் அதுவே வேகமான வளர்ச்சிக்கு ஊந்துகோளாக அமைந்துவிடும் என எதிர்ப்பாளர்கள் கருதுகிறார்கள் என்றே தெரிகிறது.

தமிழகத்தில் அதிமுக அணிக்கு கிடைத்திருக்கும் 75 சீட்டும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சாதனை, சாணக்கயத்தனத்திற்கு கிடைத்த வெற்றி என்று மட்டும் சொல்லிவிட முடியாது. தமிழகத்தில் பாஜக நடத்திய அரசியலுக்கும் கிடைத்த வெற்றிதான் அது. தன்னிலை அறியாது, அமமுக,தேமுதிக போன்ற கட்சிகளை ஏற்காத நிலையில் நிலைகுலைந்த அதிமுகவுக்கு, பாஜகவிற்கான ஓட்டுவங்கியும் கை கொடுத்திருக்கிறது என்பதும் உண்மையே.

பாஜகவை கூட்டணியில் சேர்த்ததால்தான் அதிமுக ஆட்சியை இழந்தது என சிலர் சொல்லி வருவதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை. கடந்த 10 வருட ஆட்சியில் எடப்பாடியார் செய்த சாதனைகள் சிறப்பானதுதான். ஆனால் திமுகவினர் செய்த எதிர்ப்பு அரசியல் அவரின் சாதனையை அடித்துவிட்டது. அந்த நேரத்தில் பாஜகவின் அரசியலே திமுகவை நிலை குலைய வைத்தது. அந்த வகையில் இந்த அளவிற்கு அதிமுக அணி வெற்றி பெற பாஜகவின் அரசியலும் காரணம் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

அதை ஒத்துக் கொண்டால் பாஜகவின் வளர்ச்சிக்கு அது வாய்க்காலாக அமைந்துவிடும் என அனைத்து கட்சியுமே கணக்கு போடுகின்றன. அதனால்தான் பாஜகவால் எல்லாமே போச்சு என்று விளம்பரம் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் இவர்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பாஜக வளர்ந்திருக்கிறது.

அதற்கு 4 எம்.எல்.ஏக்களே சாட்சி. இனிமேல் பாஜகவிற்கு தமிழகத்தில் வளர்முகம்தான். திமுக ஆட்சியே அதற்கு உரம் போடும். பாஜகவினர் தனியாக வலுவான அரசியல் களம் அமைத்தால் நிச்சயமாக முன்னேறலாம்.

நடுநிலை.காம் ஆர்.எஸ்.சரணப்பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here