புதிய கல்விக்கொள்கைக்கான ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்திருக்கிறது

0
77
kalvi news

சென்னை: புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுடனான ஆலோசனையை தமிழக அரசு புறக்கணித்துள்ளது.

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் இன்று (மே 17) காணொலியில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கல்வி அமைச்சர்களுடனும் மத்திய அரசு கலந்து ஆலோசனை நடத்த வேண்டும் என தமிழக அரசு சார்பில் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை மத்திய அரசிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.

இதனையடுத்து புதிய கல்வி கொள்கையை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசின் சார்பாக கல்வித் துறை செயலாளர்கள் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நுழைக்க முடியாது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துவதை விட கல்வித்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துங்கள் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதினோம். அந்தக் கடிதத்திற்கு பதில் ஏதும் வரவில்லை. எனவே அவர்கள் நடத்தும் கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை. மும்மொழி கொள்கையில் சமஸ்கிருதம், இந்தி என திணிப்பு நடப்பதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here