’ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் நெல்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறுங்கள்’ என தெரிவிக்கிறார் அதிகாரி

0
94
srivai news

ஸ்ரீவைகுண்டம், ஜன.10

ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் நெல்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ”பயிர் காப்பீடு” செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஊமைத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் தாமிரபரணி பாசனத்தின் மூலமாக நெல்பயிர் சாகுபடி என்பது பாரம்பரியமாக காலகாலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தவகையில் தற்போது ராபி பருவத்தில் விவசாயிகள் அதிகளவில் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர்.

புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைச்சீற்றங்களின் மூலமாக பயிர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும்பொழுதும், பூச்சி, நோய் தாக்குதல்களால் பயிர்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்படும்போதும், பயிர்களில் மகசூல் குறைவு ஏற்படும்போதும் விவசாயிகளை பாதுகாத்திடும் நோக்கத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிடும் பொருட்டு ”பயிர் காப்பீடு திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்ததிட்டத்தில் பயிர்கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறாத அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே பிரிமீயத்தொகை மற்றும் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரத மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பிரிமீயம் கட்டும் காலத்திற்கு ஏற்றவாறு விதைக்க இயலாத சூழ்நிலை, விதைப்பு பொய்த்தல், மகசூல் இழப்பு ஆகிய நிலைகளில் பயிர் இழப்பீடு பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

இந்தவகையில் தற்போதைய ராபி பருவ நெல் பயிருக்கு 15.02.2020க்குள் ”பயிர் காப்பீட்டுக்கான பிரிமீயம்” செலுத்தினால் மகசூல் இழப்பு ஏற்படும்பட்சத்தில், பயிர் அறுவடை பரிசோதனை அடிப்படையில் விதிமுறைகளுக்கேற்ப இழப்பீடு பெற வழி உள்ளது. நெல் பயிரில் ராபி பருவம் என்பது டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை நடவு செய்துள்ள பயிர்களாகும்.

விவசாயிகள் பயிர் காப்பீடு பிரியமாக ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு ரூ.404 மட்டும் செலுத்தவேண்டும். இது கடன்பெறும் மற்றும் கடன்பெறாத சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகள் அனைவருக்கும் பொருந்தும். காப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.26ஆயிரத்து 900ம் வரை கிடைத்திட வாய்ப்பு உள்ளது.

விவசாயிகள் பிரிமீயம் கட்டணத்தை தங்களுக்கு தொடர்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது இ-சேவை மையங்களிலும் நில அடங்கல், ஆதார் கார்டு நகல், வங்கிகணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் செலுத்திடுதல் வேண்டும்.

பயிர்காப்பீடு செலுத்துவதினால் ஏற்படும் பயன்கள் குறித்து அனைத்துப்பகுதி விவசாயிகளுக்கும் வேளாண்மைத்துறை விரிவாக்க அலுவலர்கள் மூலமாக விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி அதன்மூலமாக எடுத்து சொல்லப்பட்டும் வருகிறது.

இது தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை விவசாயிகள் தங்கள் பகுதிகளிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், வட்டார வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்புகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here