தூத்துக்குடி ஸ்டெர்லைட் 2வது யூனிட்டில் ஆக்சிஜன் உற்பத்தி

0
16
sterlite

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் தற்போதுள்ள சூழ்நிலையில் கொரோனா நோயாளிகள் பயன்பெறும் வகையில் உச்ச நீதிமன்றம் மற்றும் அரசின் அனுமதி பெற்று ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணிகள் மே மாதம் முதல் வாரத்தில் இருந்து துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த உற்பத்தி பணியில் முதல் நாளில் உற்பத்தி செய்யப்பட்ட 4.8 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் மூலமாக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, அரசின் வழிகாட்டுதல்படி மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போதுள்ள நிலவரப்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் 329 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆக்சிஜன் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கும் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையிலுள்ள 2-வது ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் நேற்று முதல் ஆக்சிஜன் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக தொடங்கியது.

இரண்டாவது ஆக்சிஜன் உற்பத்தி பிரிவில், ஒரு பிரிவில் மட்டுமே தற்போது ஆக்சிஜன் உற்பத்தி நடந்து வருகிறது. இந்நிலையில் 2-வது உற்பத்தி பிரிவிலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு நேற்று மதியம் முதல் சோதனை ஓட்டம் அடிப்படையில் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சோதனை ஓட்டம் அனைத்தும் முழுமையாக முடிந்தபிறகு மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. 2 உற்பத்தி பிரிவுகளிலும் மொத்தம் 70 டன் திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும்.

மீதம் உள்ள ஆக்சிஜனை, வாயு நிலையிலேயே சிலிண்டர்களில் அடைப்பதற்கான உபகரணங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தப்பணிகள் முடிக்கப்பட்டு ஒரு வாரத்துக்குள் சிலிண்டர்களிலும் ஆக்சிஜன் நிரப்பும் பணி தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள மற்றொரு ஆக்சிஜன் உற்பத்தி அலகிலும் தற்போது ஆக்சிஜன் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது என்றும், விரைவில் இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு அந்த அலகில் இருந்து 30 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here