”வாயைகட்டி வயித்தை கட்டி படிக்க வைச்ச மகளை பறிகொடுத்துவிட்டேன்” – தூத்துக்குடி பெண்ணின் தந்தை கதறல்

0
695
crime news

தூத்துக்குடி,ஜூன்.1:

வாயைகட்டி வயித்தை கட்டி படிக்க வைச்ச என் அருமை மகளை பறிகொடுத்துவிட்டேனே என்று தூத்துக்குடியில் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலியான பெண்ணின் தந்தை கதறி அழுதார்.

தூத்துக்குடி, கிருஷ்ணராஜபுரம் கிழக்கு 7வது தெருவில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான காம்வுண்டு வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர் ராஜமுருகன். தச்சு தொழிலாளியான இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், பரமேஸ்வரி(22) என்ற மகளும், சுந்தர்(21) என்ற மகனும் உண்டு. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர் குடியிருக்கும் வீட்டில் மேற்கூரையில் சிமெண்ட் பூச்சு சேடமடைந்திருந்தது. அதனை வீட்டின் உரிமையாளர் சிமெண்ட் வைத்து பூசி சீர் செய்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்று இரவு ராஜமுருகன் தனது குடும்பத்தினருடன் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டின் மேற்கூரை உற்பகுதி இடிந்து விழுந்தது. அதில் பரமேஸ்வரி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தம்பி சுந்தரும் படுகாயமடைந்தார். சுந்தர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ராஜமுருகன் நம்மிடம், ‘’என் பிள்ளைகளின் படிப்பைத்தான் வாழ்நாள் குறிக்கோளாக நெனைத்திருந்தேன். அதனால்தான் வறுமையில் என் குடும்பம் தவித்தாலும் என் பிள்ளைங்களின் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தேன். வாயைக் கட்டி வயித்தை கட்டி அவங்களை படிக்க வைத்தேன். பொறியியல்(பி.இ)படித்த என் மகள் பரமேஸ்வரி கடந்த 6 மாசமாகத்தான் ஒரு கம்பெனியில் வேலைக்கு போனாள். என் மகனும் டிப்ளமோ படித்துக் கொண்டிருக்கிறான்.

படிப்பெல்லாம் முடிந்து அவர்கள் வேலைக்கு போனபிறகு எங்கள் கஷ்டம் தீரும் என நினைத்தோம். அதெல்லாம் வீணா போச்சு. நேற்று இரவு வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கினோம். நாங்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தபோது மேல் கூரையில் பூச்சு பெயர்ந்து விழுந்துவிட்டது. நேரடியாக என் மகள் மீது விழுந்ததில் அவள் அந்த இடத்திலேயே படுகாயம் அடைந்து மூச்சில்லாமல் போய்விட்டாள். அவளிடமிருந்து எந்த சப்தமும் வரவில்லை. என்மகன் மீதும் விழுந்ததில் அவன் சப்தம்போட்டான். என் மீதும் விழுந்தது. நான் ஒரு சிலாப்பிற்கு கீழ் பகுதியில் படுத்திருந்ததால் நான் தப்பித்தேன். அக்காளை பாருங்கனு என் மகன் கத்தினான். நாங்க கற்களை பெயர்த்து பார்க்கும்போது என் மகள் உயிரோடு இல்லை’’ என்றவர் தொடர்ந்து பேசமுடியாமல் தவித்தார்.

மீண்டும் தொடர்ந்தவர், ’’அந்த மேற்கூரை ஏற்கனவே பெயர்ந்திருந்தது. வீட்டு ஓனர் அதற்கு மேல் பூசி, வெள்ளையடித்துவிட்டு சமாளித்துவிட்டார். இதற்கிடையே நேற்று பக்கத்து வீட்டில் சீரமைப்பு வேலை நடத்தினார்கள். அங்கே கட்டிடம் இடிக்கப்பட்டது. அந்த அதிர்வில் நாங்கள் குடியிருந்த வீட்டின் கூரை பெயர்ந்துவிட்டது என நினைக்கிறேன். அதனால் என் உயிருக்கு உயிரான மகளின் உயிர் போய்விட்டது. இப்போ என் மகன் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் இருக்கிறான்’’ என்றார் கண்ணீர் மல்க.

இந்த சம்பவம் குறித்து வடபாகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சம்பவ இடத்தை எஸ்.பி ஜெயக்குமார், டிஎஸ்பி கணேஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இது குறித்து வடபாகம் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்சிங், தனிப்பிரிவு ஏட்டு நாகராஜன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகம் முழுவதிலும் உள்ள கொரோனா நெருக்கடிக்கும், வறுமைக்கும் நடுவில் பட்டதாரி மகளை இழந்திருக்கும் குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here