கொரோனா ஊரடங்கு காலத்தில் கடன் தவணையினை செலுத்துமாறு நெருக்கடி தரக்கூடாது – கலெக்டர் அட்வைஸ்

0
7
collector

தூத்துக்குடி,ஜூன்.8:

கொரோனா ஊரடங்கு காலத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது மக்களிடம் கடன் தவணையினை செலுத்துமாறு தனியார் நிதிநிறுவனங்கள் நெருக்கடி தரக்கூடாது என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கேட்டுக் கொண்டார்.

கொரோனா பெருந்தொற்று அதிகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் கடந்த 24 ம்தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் அவசரதேவைக்கென தனியார் நிதி நிறுவனங்களை நாடி கடன் பெற்ற மக்களிடம் மேற்படி கடன் மற்றும் வட்டி தொகையை உடனடியாக செலுத்த கோரி சில நிறுவனங்கள் மிரட்டுவதாகவும், பல்வேறு வழிகளில் துன்புறுத்துவதாகவும் புகார் வரப்பெற்றது. அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து மண்டல வங்கியாளர், நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் மேலாளர்களின் கூட்டம் நடைபெற்றது.

கோவிட் காலத்தில் பொது மக்கள் தொழில் செய்வோர் மற்றும் சுயஉதவி குழுவினர் தவணை தொகையை திருப்பி செலுத்துவதில் சிரமம் உள்ளதால், அவர்களை வற்புறுத்தி தொகையினை செலுத்த அறிவுறுத்தப்படவில்லை என வங்கியாளர்களால் தெரிவிக்கப்பட்டது. மேலும் நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதிநிறுவனங்கள் மேலாளர்களும் வழக்கமாக பொதுமக்கள், சுயஉதவிக்குழுக்கள் கடன் தவணை தொகையினை தவணை தவறாமல் திருப்பி செலுத்தும் பழக்கத்தினை கடைப்பிடித்து வருகின்றனர் எனவும், கொரனோ நோய் பெருந்தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தவணை தொகை செலுத்த முடியாதவர்களை வற்புறுத்தி தவணை தொகை செலுத்திட வேண்டும் என நெருக்கடி தரவில்லை என தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ் பேசும்போது, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மகளிர் குழுக்கள் மற்றும் பொதுமக்கள் பெற்ற கடனுக்கான தவணை தொகையினை திரும்ப செலுத்துமாறு தனியார் நிதிநிறுவனங்கள் நெருக்கடி தரக்கூடாது எனவும், எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்காத வகையில் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here