மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என கூறி சிறுமைப்படுத்த கூடாது: ஓபிஎஸ்

0
40
ops news

சென்னை: இந்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்வது நமது இந்தியத் திருநாட்டைக் கொச்சைப்படுத்துவது போல் சிறுமைப்படுத்துவது போல் அமைந்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று கூறிய முத்துராமலிங்கம் பிறந்த தமிழகத்தில் தேசியத்திற்கு எதிரான செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது தமிழகம் திசைமாறிச் செல்கிறது என்கிற எண்ணம் மக்களிடையே மேலோங்கி நிற்கிறது. 2019-ம் ஆண்டு, ஜூலை 19-ல் சட்டசபையில் பேசிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால், வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வோம் என்று கூறினார்.

ஒருவேளை அந்தச் சொல்லாததில் ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையும் ‘ஜெய்ஹிந்த்’ என்ற சொல் ஆளுநர் உரையில் இடம் பெறாததால் தமிழகம் தலைநிமிர்ந்துவிட்டது என்ற வாசகமும் அடங்கி உள்ளது போலும். திமுக ஆட்சி தமிழகத்தில் அமைத்ததில் இருந்து மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. அதற்கான காரணத்தைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அளித்திருப்பது விசித்திரமாக இருக்கிறது.

அதிலே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரி இந்தியா அதாவது பாரதம் மாநிலங்களைக் கொண்ட ஒரு ஒன்றியமாக இருக்கும் என்று குறிப்பிட்டு இருப்பதாக சுட்டிக்காட்டி அதைத்தான் பயன்படுத்துகிறோம் என்றும், ஒன்றியம் என்பது மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது என்பதே அதன் பொருள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது பொருளல்ல. சட்டமேதை அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி 5-ன் படி யூனியன் என்றால் பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய இந்திய நாட்டைக் குறிக்கும் சொல்லே தவிர இந்திய அரசைக் குறிக்கும் சொல் அல்ல.

யூனியன் ஆப் ஸ்டேட் என்பதற்குப் பொருள் மாநிலங்களை உள்ளடக்கிய யூனியன் என்பதுதான். கூட்டாட்சி தத்துவம் குறித்து தலைவர்கள் கூறிய வார்த்தைகளை வைத்து இந்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிடுகிறோம் என்பதில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. எந்தத் தலைவரும் மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று கூறவில்லை. அதே சமயத்தில் இந்திய அரசைப் பற்றி குறிப்பிடும்போது கவர்மெண்ட் ஆப் இந்தியா என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.

இந்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்வது நமது இந்தியத் திருநாட்டைக் கொச்சைப்படுத்துவது போல் சிறுமைப்படுத்துவது போல் அமைந்துள்ளது என்று தமிழக மக்கள் நினைக்கிறார்கள் என்பதை முதலில் முதல்வருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மத்திய அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து தமிழகத்தின் உரிமைகளை, கோரிக்கைகளை, வாழ்வாதாரப் பிரச்னைகளை, நலன்களை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்காமல் இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல என்பதையும் இதுபோன்ற செயல் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here