ஈரோட்டில் ஆதியோகி ரதத்துக்கு உற்சாக வரவேற்பு – ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம்

0
93
isha

கோவையில் இருந்து ஈரோடு வந்தடைந்த ஆதியோகி ரதத்துக்கு பல்வேறு இடங்களில் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் ஆதியோகியை தரிசித்து அவரின் அருளை பெற்றனர்.

மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு கோவையில் உள்ள 112 அடி ஆதியோகியில் இருந்து 4 ஆதியோகி ரதங்கள் கடந்த ஜனவரி 1-ம் தேதி புறப்பட்டன. இதில் ஒரு ரதம் ஜனவரி 5-ம் தேதி ஈரோடு வந்தது.

இந்த ரதம் ஜனவரி, 5, 6, 7 ஆகிய 3 நாட்கள் ஈரோடு நகரின் பல்வேறு இடங்களுக்கு சென்றது. பின்னர், ஜனவரி 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை கோபியில் பல்வேறு இடங்களுக்கும் 13-ம் தேதி அந்தியூருக்கும் சென்றது. இன்று (ஜனவரி 14) காலை பவானியில் உள்ள கே.பி. பாளையத்தில் இருந்து புறப்பட்ட ரதம், சித்தர் மாரியம்மன் கோயில், லட்சுமி நாராயணன் பெருமாள் கோயில், ஈஸ்வரன் கோயில், ஒலகடம், சடயம்பாளையம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றது. பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் ஆதியோகியை தரிசித்து அருள் பெற்றனர்.

கோவைக்கு வந்து ஆதியோகியை தரிசிக்க இயலாத மக்கள் தங்கள் ஊர்களிலேயே தரிசிப்பதற்கு இந்த ரத யாத்திரை ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது. மேலும், இதன்மூலம் மஹாசிவராத்திரி விழாவுக்கும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

பவானியில் இருந்து நாளை சத்தியமங்கலம் செல்லும் இந்த ரதம், மேட்டூர், சேலம், திருப்பூர், ஊட்டி, கூடலூர் வழியாக மஹாசிவராத்திரியன்று கோவை சென்றடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here