ஆக்சிஜன் தயாரிக்கும் அனுமதியை மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்க கோரிய ஸ்டெர்லைட் மனு – 22-ம் தேதி விசாரணைக்கு வருகிறது

0
15
sterlite news

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அளித்த அனுமதியை மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்க கோரிய மனு 22-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி அளித்து, கடந்த ஏப்ரல் 28-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதி உத்தரவு ஜூலை 31-ம் தேதிவரை அமலில் இருக்கும். மேலும், பின்னர் நிலவும் பேரிடரை பொறுத்து முடிவெடுக்கப்படும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அளித்த அனுமதியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது: மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களின்படி, கொரோனா மூன்றாவது அலையின் விளிம்பில் நாடு உள்ளது. மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியுள்ளது. முக்கியமாக, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியுள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் இறப்புகளை தவிர்க்க, நாடு முழுவதும் போதுமான ஆக்சிஜன் உற்பத்தியை தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும். எனவே, நாட்டின் நலன் கருதி, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அளித்த அனுமதியை மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்க வேண்டும். இந்த புதிய இடைக்கால மனுவை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு முன்பு, வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வே, மனுவை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முறையிட்டார். இதை பரிசீலித்த நீதிபதிகள், மனுவை ஜூலை22-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here