தூத்துக்குடி,ஜூலை16:
தூத்துக்குடியில் துடிசியா மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து நடத்தும் தொழில் சேவை மையத்தினை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார்.
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமும், தூத்துக்குடி மாவட்ட சிறு தொழில் சங்கமான துடிசியாவும்,மாவட்ட தொழில் மையமும் இணைந்து தொழில் முனைவோர் சேவை மையத்தை ராம்நகரில் உள்ள துடிசியா அரங்கத்தில் தொடங்கி உள்ளது இதனை கலெக்டர் செந்தில் ராஜ் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் முதன்முறையாக தூத்துக்குடியில் துடிசியா உதவியுடன் தொழில் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள், திட்டமதிப்பீடு,அரசு வழங்கும் 50 ஆயிரம் முதல் 5 கோடி வரையில் உள்ள மானிய திட்டங்களான வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், மூலம் கடன் உதவி பெறும் வழிமுறைகள், இளம் மற்றும் புதிய தொழில் முனைவோர்கள் அந்த தொழிலில் வெற்றி பெறும் வரையிலும் வெற்றி பெற்ற தொழில் முனைவோர்களால் ஆலோசனை வழங்கப்படுகிறது.
மேலும் இச்சேவை தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்கும், தொழிலை விரிவாக்கம் செய்வதற்கும், பேரிடர் சமயத்தில் நல்வழி காட்டுவதற்கு பயன்பெறும் வகையில் அமைக்கப்படுள்ளது. வாரம் தோறும் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை எட்டையபுரம் ரோடு ராம் நகரில் அமைந்துள்ள துடிசியா அரங்கத்தில் நடைபெறும் என்றார். விழாவில், மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் ஸவர்ணலதா, துடிசியா தலைவர் நேரு பிரகாஷ், பொது செயலாளர் ராஜ்செல்வின், பொருளாளர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.