5 வயது மகளை காப்பாற்ற சிறுத்தையை மூங்கில் குச்சியால் அடித்து துரத்திய வீரத் தாய்

0
356
news

சந்திராபூர்: மஹாராஷ்டிராவில் வனப்பகுதி ஒன்றில் தன் 5 வயது மகளை தாக்கிய சிறுத்தையை, சிறுமியின் தாய் துணிச்சலுடன் மூங்கில் குச்சியால் அடித்து துரத்தியுள்ளார். இச்சம்பவத்தில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மஹாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது. அந்த வனப்பகுதி வழியாக ஜூனோனா என்னும் கிராமத்தை சேர்ந்த அர்ச்சனா மெஸ்ரம் என்பவர் தனது 5 வயது மகளுடன் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது சிறுத்தை ஒன்று திடீரென சிறுமியை தாக்க முயற்சித்தது. அதிர்ச்சியடைந்த அர்ச்சனா, முதலில் பயமடைந்தாலும், மகளை காப்பாற்ற வேண்டும் என்ற துணிச்சலுடன் அங்கிருந்த மூங்கில் குச்சியை எடுத்து சிறுத்தையை தாக்கியுள்ளார். இதனால், சிறுமி மீதான தாக்குதலை விடுத்து அர்ச்சனாவின் பக்கம் சிறுத்தை திரும்பியது. இருந்தும் விடாமல் மூங்கிலால் சிறுத்தையை அடித்து துரத்தினார்.

சிறுத்தை தாக்கியதில் சிறுமியின் தாடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சிறுமியை நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் வனத்துறையினர் அனுமதித்தனர். கடந்த ஜூன் 30ம் தேதி நடந்த இச்சம்பவம், இப்போது வெளிவந்துள்ளது. சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்காக வனத்துறை சார்பில் இழப்பீடாக குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து நாளை (ஜூலை 19) சிறுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here