ஸ்டெர்லைட் ஆலை வேண்டும்..ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்.. – தூத்துக்குடியில் மீண்டும் கோரிக்கை போர்

0
12
sterlite news

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் நடத்திய எதிர்ப்பு போராட்டங்கள் கலவரமாகியதை தொடர்ந்து தமிழக அரசால் ஆலை மூடப்பட்டது. மீண்டும் ஆலையை திறந்து இயக்க அனுமதி கேட்டு சட்ட போராட்டம் நடத்தி வருகிறது ஸ்டெர்லை ஆலை நிர்வாகம்.

இந்நிலையில், கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை தாக்கத்தால் நோய் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் அதிக அளவில் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் தனது ஆலையில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து இலவசமாக வழங்குகிறோம். அதற்கு அனுமதி வேண்டும் என்று ஸ்டெர்லைட் தொழிற்சாலை உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. அதன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின்படி ஆக்சிஜனை உற்பத்தி செய்து தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம்.

இதுவரை சுமார் 2ஆயிரம் டன் அளவிற்கு மேல் ஆக்சிஜனை உற்பத்தி செய்து வழங்கியிருக்கிறது. அதற்கான நீதிமன்ற அனுமதி இந்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. கொரோனா மூன்றாவது அலை அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து சில காலம் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து வழங்க அனுமதி கேட்டு ஆலை நிர்வாகம் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறது.

மூன்றாவது அலை அச்சுறுத்தல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் ஆக்ஸிஜன் உற்பத்தி உள்ளிட்ட வசதி வாய்ப்புகளை பெருக்கி வைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றன. எனவே மத்திய மாநில அரசுகள் அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே இன்று, ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் பாத்திமாபாபு, கிருஷ்ணமூர்த்தி, அரிராகவன், அமமுக பிரைட்டர், நடிகர் காசிலிங்கம், மதிமுக மாவட்ட செயலாளர் ரமேஷ், நாம் தமிழர் கட்சி வேல்ராஜ் ஆகியோர் சார்பில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில், ஆக்ஜிசன் பற்றாக்குறையை காரணம்காட்டி அதனை உற்பத்தி செய்வதற்காக உச்சநீதிமன்ற அனுமதியுடன் ஸ்டெர்லைட் தொழிற்சாலை கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கப்பட்ட வரும் 31-ம்தேதியை கடந்து இந்த தொழிற்சாலை மீண்டும் தொடர்ந்து இயங்க அரசு அனுமதிக்ககூடாது.

இந்த தொழிற்சாலையை நிரந்தரமாக அகற்றிட சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்றவேண்டும். துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு நினைவுமண்டபம் அமைக்கவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளையில், தூத்துக்குடி இண்டஸ்டிரியல் சப்ளையர்ஸ் அசோசியேசன்ஸ், மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை, தமிழ்வளர்ச்சி இயக்கம், தூத்துக்குடி காண்ட்டிராக்டர்ஸ் அசோசியேசன்ஸ் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு மனு அனுப்பபட்டது. தொழில்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுக்களில், கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்க ஸ்டெர்லைட் ஆலையில் மேலும் ஆக்ஸிஜன் உற்பதி செய்ய அனுமதி வழங்க வேண்டும். அதேபோல் நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல் உள்ள ஆலையில் பராமரிப்பு பணியை மேற்கொள்ளவும், தொடர்ந்து ஆலையை இயக்கி, பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரமேம்பாட்டிற்கும் வழி வகை செய்ய வேண்டும் என்கிற அர்த்தத்தில் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஆக, ஸ்டெர்லைட் ஆலை திறந்து இயக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்று வரும் சூழ்நிலையில், அதனை மறுப்பவர்களும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனாலும் கொரோனாவின் கோர முகத்திலிருந்தும், வாழ்வாதார ஆபத்திலிருந்தும் மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பொதுவாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை என்பதை மறந்துவிட கூடாது என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here