தூத்துக்குடி – நாசரேத் சி.எஸ்.ஐ திருமண்டல அலுவலகம் முற்றுகை – தேர்தல் விவகாரத்தில் சபை மக்கள் ஆவேசம்

0
21
csi news

தூத்துக்குடி,ஜூலை.21:

தூத்துக்குடி – நாசரேத் சி.எஸ்.ஐ திருமண்டல தேர்தலில் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் தங்கள் பெயர்களை சேர்க்க கோரி தூத்துக்குடியிலுள்ள திருமண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தென்னிந்தய திருச்சபையின் தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலம் கடந்த 2003ம் ஆண்டு திருநெல்வேலி திருமண்டலத்திலிருந்து பிரிந்து தனி திருமண்டலமானது. இந்த திருமண்டலத்தில் ஆறு சபை மன்றங்களும்(கவுன்சில்), 110க்கும் மேற்பட்ட சேகரங்களும்(பாஸ்ட்ரேட்),நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் உள்ளன. இவைகளை நிர்வாகம் செய்வதற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சபை மக்களிடையே தேர்தல் நடத்துவது வழக்கம். அந்த வகையில் 2021 – 2024 ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகின்றன. தற்போது நிர்வாகத்தில் உள்ள எஸ்.டி.கே.ராஜன் அணியும், டி.எஸ்.எப் அணியும் எதிரெதிரே போட்டியிடுகின்றன.

தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் கடந்த ஜூன் 20ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தங்கம்மாள்புரம், நாசரேத், நடுவைகுறிச்சி, திரவியபுரம் உள்ளிட்ட சேகரங்களில் டி.எஸ்.எப் அணியை சேர்ந்த எஸ்.டி.ஆர் குடும்பத்தினர் மற்றும் சபையினர் என சுமார் 74 பேரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து தூக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். அவைகள் தேர்தலில் போட்டியிட கூடும் என கருதக்கூடியவர்கள் மற்றும் டி.எஸ்.எப் அணியை ஆதரிக்க கூடியவர்களின் பெயர்கள் என்று குற்றசாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து திருமண்டல விதிகளின் படி நீக்கப்பட்டவர்கள் சேகர தலைவரிடம் முறையிட்டனர். தீர்வு கிடைக்கவில்லை என்பதால் சபை மன்ற தலைவரிடம்(கவுன்சில் சேர்மன்) முறையிட்டனர். அதனைத் தொடர்ந்து புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 34 பெயர்கள் மட்டும் சேர்க்கப்பட்டிருந்தது. தேர்தல் விசாரணை குழுவிடம் புகார் சென்றது. தேர்தல் விசாரணை குழு சம்மந்தபட்டவர்களை அழைத்து விசாரிப்பதற்காக இன்று(21.07.2021) திருமண்டல அலுவலகத்தில் ஆஜராகும்படி அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி தங்கம்மாள்புரம், நடுவைகுறிச்சி சேகரங்களை சேர்ந்த சபை மக்கள் வந்திருந்தனர்.

ஆனால் அவர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படாது என்று சொல்லப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தங்கம்மாள்புரம் சேகர சபை மக்கள் எஸ்.டி.ஆர்.பொன்சீலன் தலைமையில் திருமண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வாக்குரிமை அளித்தால் மட்டுமே வெளியேறுவோம் என்று கூறி அலுவலக வாசலிலேயே அமர்ந்து விட்டனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற தூத்துக்குடி டவுண் டி.எஸ்.பி.கணேஷ், வடபாகம் இன்ஸ்பெக்டர் அருள் உள்ளிட்ட போலீசார், இரு தரப்பையும் அழைத்து பேசினார்கள். அப்போது ’வாக்குரிமைக்கான சந்தா செலுத்திய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்’ என்று எஸ்.டி.ஆர்.பொன்சீலன் கேட்டுக் கொண்டார்.

பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட திருமண்டல பொருளாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பொன்துரைராஜ், நீக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலான உறுப்பினர்களுக்கு மீண்டும் வாக்குரிமை அளிக்கப்படும் என்று உறுதியளித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தங்கம்மாள்புரம் சபைமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here