திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய வருபவர்களிடம் செக்யூரிட்டிகள் அத்துமீறுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டு

0
9
thiruchendur murugan

நாசரேத், ஜூலை 22-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய வருபவர்களிடம் செக்யூரிட்டிகள் அத்துமீறுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொரோனா ஊரடங்கிற்கு பின் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் பக்தர்களின் கூட்டத்தால் கோயில் நிரம்பி வழிகிறது. இந்த கூட்டத்தை பயன்படுத்தி கோயில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தனியார் செக்யூரிட்டிகள் பக்தர்களிடம் தங்கள் கைவரிசையை காட்டுகின்றனர். வாகனங்களை உள்ளே அனுமதிப்பது முதல் பக்தர்களை தரிசனம் செய்ய உள்ளே விடுவது இப்படி எதற்காடுத்தாலும் பக்தர்களிடம் காசை வசூல் செய்கின்றனர். இதற்கு உடந்தையாக கோயில் பணியாளர்களும் இருப்பதால் வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து சாமியை தரிசனம் செய்கின்றனர்.

இந்த கோயிலில் மட்டும் ஒரு செக்யூரிட்டி எந்த இடத்தில் பணியில் இருந்தாலும் நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் முதல் 3 வரை சம்பாதிக்கின்றனர். இதில் கோயில் பணியாளர்களுக்கும் சொர்ப்ப பணம் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று வெளியூரிலிருந்து ஒரு குடும்பத்தினர் கை குழந்தையுடன் காலை 7.30 மணியளவில் தரிசனம் செய்ய கோயிலுக்குள் சென்றனர். ஏற்கனவே அபிஷேகம், அலங்காரத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கை குழந்தையுடன் ரூ.250 தரிசன வரிசையில் நின்ற அந்த குடும்பத்தை சேர்ந்த பெண், உள்ளே மூலஸ்தான பகுதிக்குள் சென்றதும் அங்கும் கூட்டம் அசையாமல் நின்றது. இதற்கெல்லாம் காரணம் செக்யூரிட்டிகள் மற்றும் கோயில் பணியாளர்கள் விஐபிகளை சுவாமி முன் பல மணி நேரம் நிறுத்தி அவர்கள் திருப்தியடையும் வரை நிற்க வைத்து காசு பார்ப்பதுதான் காரணம்.

கூட்டத்தை பார்த்து கை குழந்தையுடன் நின்ற அந்த பெண் பொது தரிசனத்துக்கு முன்னதாக மயில் சிலை இருக்கும் வரிசையில் சென்றுவிட்டு பின்னர் பிரசாரம் வாங்குவதற்கு சண்முகர் இருக்கு பகுதிக்கு செல்ல முயன்றார். அப்போது கொடிமரத்தில் பணியில் இருந்த செக்யூரிட்டி ஒருவர் அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து செல்வதற்கு தடைவிதித்தார். நிம்மதி கிடைக்கும் என்பதற்காகத்தான் கோயிலுக்கு வருகிறோம். இதுபோன்றவர்களால் எங்கள் நிம்மதியே போய்விடுகிறது என்று வருத்தத்துடன் கூறி சென்றனர். எனவே அறநிலையத்துறை அதிகாரிகள் இதுபோன்ற செயல்களில் செக்யூரிட்டிகள் மீதும், இதை பார்த்து கண்டும் காணததுபோல் இருக்கும் கோயில் பணியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here