ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்தியுள்ளது – மேலும் உற்பத்தி செய்ய அனுமதிக்காக காத்திருக்கிறது

0
246
sterlite news

தூத்துக்குடி,ஜூலை30:

உலகம் முழுவதிலும் ஒரே நேரத்தில் கொரோனாவின் 2வது அலையும் ஆட்டிப்படைத்ததால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மூச்சு திணறல் காரணமாக ஏராளமானோர் பலியானார்கள். இந்த நிலையில் தாமாக முன்வந்து ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாக தருகிறோம் என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் அறிவித்தது. உச்சநீதிமன்ற அனுமதியுடன் ஆக்சிஜனை உற்பத்தி செய்து கடந்த மூன்று மாதமாக இலவசமாக விநியோகித்து வந்தது.

ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 2,132 டன் திரவ ஆக்சிஜனும், 11.19 டன் வாயு நிலையிலான ஆக்சிஜனும் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அளித்த அனுமதி நாளை(31.07.2021)யுடன் முடிவடைகிறது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் மேலும் 6 மாதம் ஆலை இயங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அளித்த அனுமதி நாளையுடன் முடிவடைவதால், ஸ்டெர்லைட் நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்தியை இன்றுடன் நிறுத்தியுள்ளது.

இது குறித்து ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி அளித்த அனுமதி நாளை (சனிக்கிழமை) முடிவடைகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுபடி ஆலையின் அனைத்து இயக்கங்களும் 31-ந் தேதியுடன் முழுமையாக முடிவுக்கு வரும் வகையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 132 மெட்ரிக் டன் மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜனை தமிழகத்தின் 32 மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

மேலும் எங்கள் ஆலை வளாகத்தில் 134 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் இருப்பில் உள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்கான அனுமதியை மேலும் 6 மாதம் நீட்டிக்கக் கோரி நாங்கள் தாக்கல் செய்த மனு வரும் 6-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியை தொடர உச்சநீதிமன்றத்தில் உத்தரவை எதிர்நோக்கி உள்ளோம்.

ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை தயார் நிலையில் வைத்திருக்கவும், இருப்பில் உள்ள திரவ ஆக்சிஜனை அனுப்பி வைக்கவும் மின்சாரம் தேவை. எனவே, 2 மெகாவாட் மின்சாரத்தை தொடர்ந்து ஆலைக்கு வழங்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். நாட்டின் இக்கட்டான நிலையில் மக்களுக்கு உதவி செய்ய எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்த உச்சநீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உச்சநீதிமன்றம் எந்த நேரத்தில் உத்தரவிட்டாலும் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்’’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனாவின் 3வது அலை அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில் மேலும் ஆக்சிஜன் உற்பத்தி அவசியமாக கருதப்படுகிறது. ஆனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என்று தமிழக அரசு இன்று நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. இது எந்த வகை அரசியல் என்று தெரியவில்லை..?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here