குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 25ம்தேதி தூத்துக்குடியில் மாபெரும் பேரணி

0
38
srivaikundam

குடியுரிமை சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி வரும் 25ம் தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி நடத்தப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் காயல்பட்டணம் மர்கஸில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அஸாருதீன், பொருளாளர் நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச்செயலாளர் ஹஸன் சைபுதீன் வரவேற்றார்.

கூட்டத்தில், மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு, ‘இந்தியாவில் முஸ்லிம்கள் சந்திக்கும் சோதனைகளும், அதை எதிர்கொள்ள வேண்டிய முறைகளும்’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, மத்தியில் ஆளுகின்ற மோடி அரசானது தொடர்ந்து சிறுபான்மையின மக்களை திட்டமிட்டே வஞ்சித்து வருகிறது.

குறிப்பாக முஸ்லிம் மக்களை வேண்டுமென்றே பல்வேறு வகைகளில் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இந்தவகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் நாங்கள் மட்டுமல்ல பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் தமிழகம் முழுவதும் வரும் 25ம் தேதி(சனிக்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று மாவட்ட கலெக்டரிடம் ‘குடியுரிமை சட்டத்தை ரத்து செய்திட வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிடல் வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கை மனு கொடுக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வரும் 25ம் தேதி காலை 10மணிக்கு தூத்துக்குடி&மதுரை நான்குவழிச்சாலை பைபாஸ் சந்திப்பில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி நடக்கிறது. பேரணியின் முடிவில், மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்படவுள்ளது. இந்த பேரணியில், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் மட்டுமல்லாமல் குடியுரிமை சட்டத்திற்கு எதிரானவர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்றிடவேண்டும் என்றார்.

மாவட்ட துணைத்தலைவர் தமீம் அன்சாரி, தூத்துக்குடியில் நடைபெறும் இந்த மாபெரும் பேரணியில், மாவட்டத்திலுள்ள அனைத்து கிளையினரும் தவறாமல் அதிகளவிலான மக்களை அழைத்து வந்து பங்கேற்றிடவேண்டும் என்றார்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட அளவிலான மாமறை குர்ஆன் மனனப்போட்டியில் வெற்றிபெற்று மண்டல அளவில் தேர்வான மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இதில், மருத்துவஅணி செயலாளர் ரஷீத்காமில், மாணவரணி செயலாளர் அப்ரிடி, கிளை நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மாவட்ட துணை செயலாளர் இமாம்பரீது நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை காயல்பட்டணம் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here