தூத்துக்குடி – மதுரை இடையே கோர விபத்து : துணை சபாநாயகரின் உறவினர் உள்பட 4 பேர் பலி – லாரி ஓட்டுனர் கைது

0
271
crime

தூத்துக்குடி – மதுரை நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலையானது எப்பொழுதும் பரபரப்பாக காணப்படக்கூடிய சாலை. இந்த சாலையின் வழியே சரக்கு போக்குவரத்திற்காக பெரிய பெரிய கண்டெய்னர்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். இந்த நிலையில் நேற்று இரவு 11.30 தூத்துக்குடியில் இருந்து கன்டெய்னர்களில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இதைப்போல எதிர்திசையில் மதுரையிலிருந்து தூத்துக்குடி நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. காரில் 2 பெண்கள், 2 ஆண்கள் என 4 பேர் பயணம் செய்தனர்.

இந்த நிலையில், லாரி ஸ்டெர்லைட் ஆலை பகுதியின் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக லாரியும் – காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் காரில் வந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்தினால் தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விபத்து குறித்த தகவல் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விபத்தில் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்த 4 பேரும் தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் சகோதரர் சுபாஷ் சந்திபோஸின் பேரன் நீரேந்திரன், ரம்யா, ரம்யாவின் தோழி பார்கவி மற்றும் ஓட்டுனர் ஜோகன் ஆகியோர் என தெரியவந்துள்ளது. இவர்கள், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் வந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. விபத்து தொடர்பாக லாரி ஓட்டுனர் சந்திரசேகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here