தூத்துக்குடி வட்டார போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை சார்பில் 31வது சாலை பாதுகாப்பு வார தலைக்கவச விழிப்புணர்வு பேரணி

0
109
tuty police news

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை சார்பில் 31வது சாலை பாதுகாப்பு வார தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் இன்று(20.01.2020) முதல் 27.01.2020 வரை சாலை பாதுகாப்பு வாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது, இருசக்கர வாகனம் ஓட்டும் அனைத்து ஆண்கள், பெண்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிவது, நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிவது போன்ற முக்கிய விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தி இன்று பேரணி நடந்தது.

தலைகவசம் அணிந்து பெண்கள், பெண் காவலர்கள் மற்றும் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து சுமார் 200 பேர் விழிப்புணர்வு பேரணியாக தூத்துக்குடி ஆயுதப்படை வளாகம் முன்பிருந்து புறப்பட்டு குரூஸ் பர்னாந்து சிலை, பாலவிநாயகர் தெரு வழியாக தென்பாகம் காவல் நிலையம் வந்து நிறைவடைந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தின் 31வது சாலை பாதுகாப்பு வாரத்தின் முதல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், கொடியசைத்து துவக்கி வைத்தார். அதற்கு முன்னதாக சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிளுக்கு வழங்கினார். தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமார், தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி வட்டார போக்குவரத்து துறை அதிகாரி மன்னர் மன்னன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் உலகநாதன், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து துறை அதிகாரி சந்திரசேகர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் நாகூர்கனி ஆகியோர் செய்திருந்தனர். தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார், மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் சிசில், உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here