செல்போன் தகவலை நம்பி ஏமாறுகிறவர்கள் ஏமாந்து கொண்டேதான் இருப்பார்கள் போல..

0
90
tuty s.pnews

எத்தனை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினாலும் செல்போன் தகவலை நம்பி ஏமாறுகிறவர்கள் ஏமாந்து கொண்டேதான் இருப்பார்கள். ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டேதான் இருப்பார்கள் போல. அந்த வகையில் கல்லூரி இணை பேராசிரியர் ஒருவர் ஏமாந்ததும், ஏமாற்றியவர்களை காவல்த்துறையினர் சுற்றிவலைத்ததையும் பார்ப்போம்..!

தூத்துக்குடி ராஜகோபால் நகர் கீரீன்ஸ்வே காலனியைச் சேர்ந்தவர் பீட்டர் அமலதாஸ். கல்லூரி இணை பேராசிரியர். இவரது மனைவி அமலா அருளரசியும் தூத்துக்குடியிலுள்ள ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 12.7.2020 அன்று அமலாஅருளரசி செல்போன் எண்ணுக்கு ஒரு வெளிநாட்டு வாட்ஸ் அப் எண்ணிலிருந்து அமேசான் பே ஈ கிப்ட் கார்டு வாங்கி அனுப்புமாறு அவரது கல்லூரி முதல்வர் புகைப்படத்துடன் ஒரு லிங்க்குடன் கூடிய குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்தக் குறுஞ்செய்தியை பார்த்துவிட்டு அவர் உடனே, தனது கல்லூரி முதல்வரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார், ஆனால், அப்போது முதல்வரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனையடுத்து வாட்ஸ் அப் செய்தி வந்த அதே எண்ணிற்கு தொடர்புகொண்டு கேட்டபோது, அந்த நபர், தான் மருத்துவமனையில் உள்ளதாகவும், தற்போது அவரை தொடர்பு கொள்ளவேண்டாம் என தகவல் அனுப்பியுள்ளார். மேலும் அமேசான் பே ஈ கிப்ட் கார்டை உடனடியாக வாங்கி, தான் கொடுத்துள்ள மெயில் ஐ.டிக்கு அனுப்புமாறு செய்தி அனுப்பி அவசரப்படுத்தியுள்ளார்.

இதனால் கல்லூரி முதல்வருக்கு அவசரமாக தேவைப்படுகிறது என நினைத்த அமலா அருளரசி, மேற்படி வாட்ஸ் அப்பில் வந்த தகவலின்படி ரூ-.50ஆயிரத்திற்கு அமேசான் பே ஈ கிப்ட் கார்டு வாங்கி, அவர் அனுப்பிய லிங்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து அதே நபர், அதே செல் எண்ணிலிருந்து மேலும் ரூ.45ஆயிரத்திற்கு கூகுள் பே கிப்ட் கார்டு வாங்கி இன்னொரு மின் அஞ்சலுக்கு அனுப்புமாறு அமலா அருளரசியிடம் கேட்டுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அமலா அருளரசி, தனது கல்லூரி முதல்வருக்கு மீண்டும் போன் செய்தபோது போனை முதல்வர் எடுத்து பேசியுள்ளார். அப்போது அமலா அருளரசி மேற்படி நடந்த விபரங்களை கூறியதற்கு, அவர் நான் அப்படி எதுவும் வாங்கி தர சொல்லவில்லை, அது போன்று நான் யாருக்கும் எந்த செய்தியும், எந்த லிங்க்கும் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அவரது கணவர் பீட்டர் அமலதாஸ் தூத்துக்குடி எஸ்.பி.ஜெயக்குமாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி.இளங்கோவனுக்கு அவர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, ஏ.டி.எஸ்.பி மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில் சப் – இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில், ஈரோடு மாவட்டம், குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகளான முருகையன் மகன் மோகன்பாபு(வயது26) மற்றும் பழனிச்சாமி மகன் சங்கர் (27) ஆகிய இருவரும், அமலா அருளரசிக்கு செல்போனில் செய்தி அனுப்பி ரூ.50ஆயிரத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோகன்பாபு, சங்கர் இருவரையும் கைது செய்தனர். இந்த புகாரில் குற்றவாளிகளை கைது செய்த சைபர் குற்றப்பிரிவு போலீசாரை எஸ்.பி.,ஜெயக்குமார் பாராட்டினார். இதுகுறித்து, அவர் கூறியதாவது, இதுபோன்று வேண்டிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயரை பயன்படுத்தி பேஸ்புக், வாட்ஸ் ஆப் செய்தி, இணைதள இணைப்புகள் போன்றவற்றின் மூலம் அவசரமாக பணம் தேவைப்படுகிறது, உடனே அனுப்புங்கள் என உண்மைபோன்று பல்வேறு காரணங்களை கூறி பொதுமக்களிடம் பணத்தை மோசடி செய்வதில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, பொதுமக்கள் யாருக்காவது பண உதவி செய்வதாக இருந்தால், சம்மந்தப்பட்டவருக்கு தான் பணத்தை அனுப்புகிறோமா? என்று உறுதி செய்த பின்னரே அவர்களுக்கு அனுப்பவேண்டும். ஆன் லைன் மூலம் ஏதாவது மோசடி நடைபெற்றால் உடனடியாக 155260 என்ற சைபர் குற்றப்பிரிவு கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here