சாதி,மத,மொழி,இன வேறுபாட்டை மறப்போம்.. தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாப்போம்..

0
105
indian news

உலகமே வியக்கும் வண்ணம் இயற்கை வளம் மிக்கது இந்த பாராத தேசம். பல்வேறு பிரிவுகளாக பிரிந்திருந்தாலும் பாரதம் என்கிற ஒற்றை காலாச்சாரத்தில் இணைந்திருக்கிறது இந்த தேசம். மலை,கடல்,பாலைவனம்,குளிர்பிரதேசம், வெப்பபிரதேசம் என உலகில் உள்ள அத்துனை தட்பவெப்ப நிலைகளையும் இந்த தேசம் ஒருங்கே பெற்றிருக்கிறது. இங்குள்ள மக்கள் பிழைப்பிற்காக வெளியே போக வேண்டியதில்லை. இங்கே உற்பத்தியாகும் வளங்களை வியாபாரம் செய்ய வெளிநாடுகளை நோக்கி சென்றார்கள். அதுமட்டுமில்லாமல் தனது வீரத்தை உலகிற்கு காட்டி ஆளுகையை நிரூபிக்கவே அந்நிய தேசம் வரை சென்றார்கள் நம்மவர்கள்.

ஆனால் பிழைப்பிற்காக நாடோடியாக அலையும் வெள்ளையன், வியாபாரம் செய்ய வருகிறோம் என்று சொல்லி உள்ளே புகுந்து சூழ்ச்சி செய்து நம்மை அடிமையாக்கினான். சூழ்ச்சியறியா நம் மக்கள் அவர்களிடம் அடிமை ஆனார்கள். பல்வேறு கூறுகளாக இருந்த மன்னர்களை விழ்த்த பல்வேறு சூழ்ச்சியை கையாண்டான் வெள்ளைக்காரன். நல்லவர் போல் நடித்து படிப்படியாக அடிமையாக்குவதுதான் அவனுடைய தந்திர வேலை. அதை செய்து நம் மன்னர்களுக்குள் சண்டையை ஏற்படுத்துவதும் அவன்,அவர்களுக்கிடையே மத்தியஸ்தம் செய்வதும் அவன். அப்படியாக நம்மை அவனுக்கு அடிமையாக்கினான்.

மேலும் நம்மிடமிருந்த ஒற்றுமையின்மையை பயன்படுத்தி அவன் நம்மை வீழ்த்தி அடியாக்கினான். நம்மிடம் இருக்கும் வேறுபாடுகள் அவனுக்கு வசதியாக இருந்தது. அதை பெரிதாக காட்டி நம்மிடையே விரோதத்தை வளர்த்து, நம்மை வீழ்த்தினான். அதை புரிந்து கொண்ட நாம் எந்தவித வேறுபாடுகளையும் கருத்தில் கொள்ளாமல் இணைந்து போராடி வெள்ளையனை வீழ்த்தினோம்.

நம் நிலத்தில் விளையும் தானியங்களை அவன் நாட்டிற்கு கொண்டு சென்றுவிட்டு நம் மக்களை பட்டினி போட்டான். பட்டினியால் லட்சக்கணக்கான மக்கள் செத்துமடிந்தார்கள். அதன் தொடர்ச்சியாக வந்தது விடுலைபோராட்டங்கள். ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு தேசபக்தர்கள் உருவாகி இந்த தேச விடுதலைகாக பாடுபட்டார்கள். அதன் பயனாக நாம் இன்று சுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக வாழ்கிறோம்.

அதற்கு அந்த தியாகிகளின் தியாகம்தான் காரணம். அப்படிப்பட்ட தியாகிகள், வேறுபாடுகளை மறந்து போராடாவிட்டால் இத்தகைய சுதந்திரம் அமைந்திருக்காது. எனவே விடுதலைக்காக போராடிய அத்தனை தியாக உள்ளங்களையும் இந்த நல்ல நாளில் நினைவு கூர்ந்து அவர்களுக்கு பெருமை சேர்ப்போம்.

மேலும் இயல்பாகவே இந்த பாரத தேசம் இயற்கை வளம் மிக்க நாடு என்பதையும், இந்த நாட்டை அந்நியர்கள் எப்படியெல்லாம் சூழ்ச்சி செய்து அடிமையாக்கினார்கள் என்பதையும், அவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து எந்தமாதிரியான வழிகளில் எல்லாம் நம் மக்கள் போராடினார்கள் என்றும், போராட்டத்தில் ஈடுபட்டது யார் யாரெல்லாம் என்றும் அடுத்தடுத்து வரும் இளைய தலைமுறை அறியும்படி செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த தேசம் மீது அவர்களுக்கு பாசம் வரும்.

ஒருவரை வீழ்த்த வேண்டும் என்றால், அவருக்கு தேவையான உதவியை செய்யும் சாக்கில் அவருடன் ஒட்டிக் கொள்ள வேண்டும். படிப்படியாக அவர் நம்மை மட்டுமே நம்பும்படியாக ஆக்க வேண்டும். அவரால் நம்மை தவிர்க்க முடியாத நிலையை உருவாக்க வேண்டும். அடுத்ததாக அவரை அடிமையாக நடத்தவேண்டும் என்பதுதான் வெள்ளைக்காரனின் தந்திர யுக்தி.

அந்த வகையில் விரோதம் கொண்டிருக்கும் மன்னர்களிடையே புகுந்து பஞ்சாயத்து செய்து, பின்னர் அவர்களை அடிமையாக்கும் யுக்தியைத்தான் வெள்ளைக்காரன் கையாண்டான். அவன் செய்யும் சில நன்மைகள் அடுத்தவர்களுக்கு பயன்பட்டிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அது அடுத்தவர்களை எதோ ஒரு வகையில் அடிமையாக்கியிருக்கும் என்பதை உணரவேண்டும்.

ஆங்கிலேயனின் அத்தனை சூழ்ச்சிகளையும் அனைத்து வேறுபாடுகளை மறந்து நாம் போராடியதால்தான் அவனிடமிருந்து விடுதலைபெற்றோம். அதுபோல் நாம் இப்போதும் நம்மிடமுள்ள சாதி,மத,மொழி,இன வேறுபாடுகளை மறந்து இந்தியன் என்று ஒன்றுபட்டு வாழவேண்டும். ஆங்கிலேயன் சென்றுவிட்டான். ஆனால் அவன் விட்டு சென்ற சில இன்னும் இந்த மண்ணில் இருக்கத்தான் செய்கிறது.

அவர்கள் நம்மிடையே பல்வேறு விதர்ப்பங்களை விதைப்பார்கள். நம்மவர்களில் சிலரை அவர்களுக்கு ஆதரவாக செயல்பட வைப்பார்கள்.வெள்ளையர்கள் நம்நாட்டை ஆண்டபிறகுதான் நமக்கு அத்தனை வசதி வாய்ப்புகளும் கிடைத்தது என்பதுபோல் தோற்றத்தை உருவாக்குவார்கள். நமது செய்தி ஊடகங்களை நமது ஆட்களை வைத்தே மிரட்டி அவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்ள செய்வார்கள்.

இந்திய தேசம் முழுவதும் ஒற்ற கருத்து மேம்பட்டுவிட்டால் அவர்கள் கைவிடப்படுவார்கள் என்கிற எண்ணத்தில் நமது தேசத்தை ஒரே தேசமாக பாவிக்க விடமாட்டார்கள். நமக்குள் பிரிவினையை வளரச்செய்வார்கள். நாம்பிரிந்து இருக்கும் வரையில்தான் அவர்களின் மறைமுக ஆதிக்கம் இந்த தேசத்தில் இருக்க முடியும். அதனால் நம்மை பிரித்தாளும் சூழ்ச்சியை எப்போதும் யார் மூலமாவது கையாண்டே வந்திருக்கிறார்கள். அதனை நாம் புரிந்து கொண்டு செயல்படவேண்டிய கட்டம் இது.

எனவே நமக்குள் உள்ள சாதி,மத,மொழி,இன வேறுபாடுகளை மறந்து இந்திய தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும். 75வது சுதந்திர தின நாளான இன்று தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாக்க நாம் அனைவரும் சபதம் ஏற்போம்.. ஜெய்ஹிந்த்..!

-நடுநிலை.காம் ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here