நமது பாரத தேசம் இப்போது இல்லை, எப்போதுமே ஜனநாயகத்தை மட்டும் ஆதரிக்க கூடிய நாடு. இந்த நாட்டின் வரலாறுகள் அதை உணர்த்துகின்றன. விடுதலை பெற்ற பிறகு 1954 ம் ஆண்டில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை உள்ளடக்கி 29 நாடுகளை கொண்ட ஒரு கூட்டமை உருவாக்கினார் அப்போதைய பிரதமர் நேரு. அதன் மூலம் அனைத்து நாடுகளையும் நன்மை பெற செய்ய முயன்றார்.
ஒருங்கிணைக்கப்பட்ட நாடுகளை கூட்டி ஒரு மாநாடு நடத்தினார். அந்த மாநாட்டிற்கு பேட்டன் மாநாடு என்று பெயர். அந்த மாநாட்டில்தான் ஐந்து வகையான வளர்ச்சி திட்டங்களை அறிவித்தார். அந்த திட்டத்திற்கு பஞ்சசீல கொள்கை என்று பெயர்.
இந்திய நாடு அனைத்து நாட்டையும் சேர்த்து ஆள வேண்டும் என்று முயற்சிக்க வில்லை. அனைத்தையும் இணைத்து வளர்க்க வேண்டும் என்றுதான் நினைத்தது. ஆனால் பக்கத்து நாடான சீனாவோ தனது பக்கத்தில் உள்ள ஐந்து பகுதிகளை தனதாக்கி கொள்ளும் கொள்கை கொண்டதாகவே அன்று முதல் இன்று வரை இருக்கிறது.
நமது நாடு இதுவரை அந்நிய தேசத்தை அடைய விரும்பவில்லை. அந்நிய தேசத்தோடு நட்புறவு வைத்துக் கொண்டு அதன் மூலம் அனைத்து நாடுகளும் பயனடைய வேண்டும் என்று விரும்புகிறது. எங்கெல்லாம் ஜனநாயகம் தேவைப்படுகிறதோ அங்கே அதனை நிலைநாட்ட உதவி வருகிறது அவ்வளவுதான்.
அந்த வகையில்தான் ஆப்கானிஸ்தானுக்கும் இந்தியா உதவி வந்திருக்கிறது. அங்கே தன்னுடைய ராணூவ சக்தியை வெளிப்படுத்தி சீர் செய்ய முயன்றது அமெரிக்கா. சுமார் 20 ஆண்டுகள் அதற்காக போராடியிருக்கிறது. அமெரிக்கா வெளியேறிய மறுகனமே தாலிபான் கைவசமானது ஆப்கானிஸ்தான். அங்கே போதிக்கப்பட்ட ஜனநாயகபாடம் அத்தனையும் வீணாக போனது என்று வருத்தப்படுகிறது பல நாடுகள். நாட்டை கைப்பற்றிய தாலிபான் எப்படி ஆட்சி செய்ய போகிறது என்று அத்தனை நாடுகளும் கூர்ந்து கவனித்து வருகிறது.
ஆப்கானிஸ்தானுக்கு நன்மை மட்டுமே செய்திருக்கும் நாடு இந்தியா. ஆனாலும் நாம் தற்போது அதிரடியாக எதையும் அறிவித்துவிடவில்லை. நிலமையை பொருத்து கருத்து சொல்ல காத்திருக்கிறோம். தாலிபான் ஆட்சி நமக்கு சாதகமா..? பாதகமா..? என்கிற கேள்வி பல திசைகளிலிருந்து கேட்கப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது.
ஆப்கானிஸ்தான், இந்தியாவுடன் இணக்கமாக இருக்கிறது என்பது உலகறிந்தது. அது தாலிபான் கட்டுப்பாட்டிற்குள் சென்ற பிறகு முதல் ஆளா ஆதரித்து தன் விசுவாச நாடாக மாற்ற முயற்சிக்கிறது சீனாவும், பாகிஸ்தானும். தேவையான உதவிகளை செய்து தனது ஆதரவு நாடாக ஆக்குவது சீனாவின் வழக்கம். அந்த வகையில்தான் இலங்கையை சீனா, தவிர்க்க முடியாத தனது ஆதரவு நாடாக ஆக்கி வைத்திருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் அப்படி அல்ல. சித்தாந்த வகையில் அது பலருக்கும் பதில் சொல்ல வேண்டியது உள்ளது.
தாலிபானில் பட்டாணிங்ஸ் என்கிற பட்டாணியர் இன குழுக்கள் அதிகம் இருக்கிறார்கள். பாகிஸ்தானில் உள்ள தாரிக் கே தாலிபான் பாகிஸ்தான் என்கிற குழுவும் அதே வகையை சேர்ந்தவையே. மேலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே துரந்த் என்கிற இடத்தில் எல்லை பிரச்னை இருந்து வருகிறது. எல்லை பிரச்னையில் தாலிபான்கள், பாகிஸ்தானுடன் ஒத்துப்போவதில்லை. அதற்கு பல சம்பவங்கள் உதாரணமாக நடந்திருக்கிறது.
எனவே பாகிஸ்தானை பொருத்தவரை தாலிபான்கள் ஆட்சியை ஆதரித்துதான் ஆக வேண்டும். அப்படி ஆதரிப்பதன் மூலம் தனக்கான பிரச்னையை தவிர்க்கலாம். இந்தியா – ஆப்கானிஸ்தான் உறவில் விரிசலை ஏற்படுத்தலாம் என்று எண்ணுவதாகவே தெரிகிறது. சீனாவும் முந்திக் கொண்டு தாலிபானுக்கு ஆதரவு தெரிவிப்பதன் நோக்கமும் அதுதான்.
ஆனாலும் எந்த காலத்திலும் ஜனநாயகத்தை மட்டுமே விரும்பும் இந்தியா, ஜனநாயக முறையில் ஜனநாய ஆட்சி நடந்தால் அதை ஆதரிக்குமே தவிர, அதற்கு மாறான ஆட்சியை எப்போதுமே ஆதரித்தது இல்லை. தற்போது தலிபான்கள் ஜனநாயக ஆட்சியை தருவோம் என்று பேசி வருகிறார்கள். ஒரு சமயம், அப்படியொரு ஆட்சி அங்கே அமைந்தால், அதனை ஆதரிக்க இந்தியா தயங்காது என்றே தெரிகிறது. ஆனாலும் அதற்கெல்லாம் முன்பு உலக மக்களின் நன்மதிப்பை பெறவேண்டிய பொறுப்பு தாலிபான்(ஆப்கானிஸ்தான்)ஆட்சியாளருக்கு இருக்கிறது..!