சென்னை அருகே சித்த மருத்துவ பல்கலை: மா.சுப்பிரமணியன்

0
18
dmk news

சென்னை: ‛‛சென்னை அருகே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும்,” என சட்டசபையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இது தொடர்பாக சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டு அவர் பேசியதாவது: தமிழகத்தின் பழமையான மருத்துவ முறைகளான சித்த மருத்துவத்தை போற்றும் வகையில் தனிப்பல்கலைகழகம் உருவாக்கப்படும். இந்தியாவிலேயே முதல்முறையாக சித்த மருத்துவத்திற்கு பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகில் அமைக்கப்படும். சித்த பல்கலையில் இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி மற்றும் யோகாவும் இடம்பெறும். தமிழகத்தில் 1,583 ஆக்ஸிஜன் படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப்பிரிவுகள் ரூ.266.73 கோடியில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சட்டசபையில் சுகாதாரத்துறை சார்பில், வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள்:
* மக்களை தேடி மருத்துவம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்.
*25 அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளில் தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்படும்.
*கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் மருத்துவ குழு வாகனங்கள் இயக்கப்படும்.
*சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ரத்த சிவப்பணுக்கள் உறைநிலை சேமிப்பு அலகு ஏற்படுத்தப்படும்.
*‛சற்றே குறைப்போம்’ திட்டத்தின் கீழ் சர்க்கரை உப்பு, எண்ணெய் பயன்பாட்டை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
*டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து அறிய ரூ.4 கோடியில் சென்னையில் மரபணு பகுப்பாய்வு கூடம் அமைக்கப்படும்.

முன்னதாக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: மருத்துவ கல்வி சேர்க்கையின் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை புறந்தள்ள புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என தலைமை செயலர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு தெரிவித்து உள்ளது. இதற்காக புதிய சட்டம் இயற்றி ஜனாதிபதி ஒப்புதல் பெறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here