பாரலிம்பிக் நிறைவு விழா : 19 பதக்கங்களை பெற்றது இந்தியா

0
15
sports news

டோக்கியோ: கோவிட்டை சமாளித்து டோக்கியோ பாராலிம்பிக் போட்டி வெற்றிகரமாக முடிந்தது. அடுத்த பாராலிம்பிக் நடக்கவுள்ள பாரிஸ் நகரை வரவேற்றனர். நிறைவு விழா கண்கவர் வாணவேடிக்கையுடன் எளிமையாக நடந்தது. இதில் 5 தங்கம் உட்பட இந்தியா 19 பதக்கங்களை தட்டிச் சென்றது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற 16வது பாராலிம்பிக் போட்டி, கொரோனா காரணமாக ஒரு ஆண்டு தாமதத்திற்கு பின், கடந்த ஆக. 24ல் துவங்கியது. மொத்தம் 13 நாட்கள் நடந்த இப்போட்டியில் அகதிகள் அணி உட்பட 162 நாடுகளை சேர்ந்த 4403 நட்சத்திரங்கள், 22 போட்டிகளில், 539 பிரிவுகளில் பங்கேற்றனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக 54 பேர், 9 விளையாட்டுகளில் பங்கேற்றனர்.

பதக்கப்பட்டியலில் 78 நாடுகள் இடம் பிடித்தன. இதில், 94 தங்கம், 60 வெள்ளி, 51 வெண்கலம் உட்பட 207 பதக்கங்களை அள்ளிய சீனா முதலிடம் பிடித்தது. போட்டியை நடத்திய ஜப்பானுக்கு (13 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம்) 11வது இடம் கிடைத்தது. இப்பட்டியலில் 19 பதக்கங்களை (5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம்) அள்ளிய இந்தியா, 24வது இடத்தை கைப்பற்றியது.

கடைசி நாளில் மாரத்தான், பாட்மின்டன், துப்பாக்கி சுடுதல், சிட்டிங் வாலிபால், வீல்சேர் கூடைப்பந்து போட்டிகள் நடந்தன. அதன்பின் ஜப்பான் தேசிய மைதானத்தில் நிறைவு விழா நிகழ்ச்சி நடந்தது. முதலில், கடந்த 13 நாட்கள் நடந்த சுவாரஸ்ய நிகழ்ச்சிகளின் வீடியோ காண்பிக்கப்பட்டது. இசை, நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஜப்பான் நாட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன்பின், வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடந்தது. இதில் இந்திய மூவர்ணக் கொடியை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெஹரா வீல்சேரில் அமர்ந்தபடி ஏந்தி வந்தார். இவர், பாராலிம்பிக்கில் இரு பதக்கம் (ஒரு தங்கம், ஒரு வெண்கலம்) வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.

நடன கலைஞர்கள் உற்சாகமாக நடனமாடினர். போட்டியை வெற்றிகரமாக நடத்திய ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நடன கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது. பின், பாராலிம்பிக் கொடி இறக்கப்பட்டு, வரும் 2024ல் நடக்கவுள்ள பாரிஸ் நகர நிர்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டது.

டோக்கியோ பாராலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சீகோ ஹஷிமோடோ, போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள், போட்டியை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். சிறப்புரையாற்றிய சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி (ஐ.பி.சி.,) தலைவர் ஆன்ட்ரூ பார்சன்ஸ், ஜப்பான் நகர மக்கள், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், போட்டியில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின், டோக்கியோ பாராலிம்பிக் நிறைவு பெற்றதாக முறைப்படி அறிவித்தார். அடுத்த பாராலிம்பிக் பாரிசில் நடக்கும் என்று தெரிவித்தார். அதன்பின் பாராலிம்பிக் ஜோதி அணைக்கப்பட்டது. முடிவில் கண்கவர் வாணவேடிக்கையுடன் நிறைவு விழா நிகழ்ச்சி முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here