காந்தி கதை – நடுநிலை.காம்

0
664
gandhi news

இந்த பூமிக்கு சூரிய வெளிச்சம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் எல்லோரையும் அன்பாகவும் சமமாகவும் பார்க்கும் சிந்தனை. பல்வேறு வகையான மக்கள் வாழ்கிற இந்த பூமியில் சமமாக பார்க்கும் பண்பு மிக அவசியம். இதை உணர்ந்த காந்தி உள்ளிட்ட பலர் போதித்த போதனையே இன்றும் நம்மை நடுநிலையாளனாக வாழ வைத்து வருகிறது.

கடவுளாக வணங்கப்பட வேண்டிய அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அவ்வப்போது புரட்டி பார்க்க வேண்டும். இளைய தலைமுறையினர் அவற்றை முழுமையாக உள்வாங்க வேண்டும். அதற்காகவே இந்த முயற்சி.

மஹாஆத்மாவின் கதை :-

அண்ணல் காந்தி, தேசபிதாகாந்தி, மகாத்மா காந்தி என இந்திய மக்களாலும் உலக மக்களாலும் அன்பொழுக அழைக்கப்படுகின்ற மோகந்தாஸ் கரம்சன் காந்தி 1869-ம் ஆண்டு அக் 2-ம் நாள் கந்தியவாரில் போர்பந்தர் என்னும் இடத்தில் பிறந்தார். பணியாஸ் இனத்தை சேர்ந்த கரம்சன் காந்தி என்பதே இவரது தந்தையின் பெயர் தாயின் பெயர் புத்லிபாய்.

போர்வ்பந்தரிலுள்ள ஆரம்ப பள்ளியில் காந்தி சேர்ந்தார். கல்வியில் காந்தி ஒரு சராசரி மாணவனாகத்தான் இருந்தாஎர். காந்தி 7 வயது இருக்கும் போது, அவரது தந்தையார் ராஜ்கோட் சமஸ்தானத்தின் திவானாக பொறுப்பேற்றார். ஆகையால் ராஜ்கோட் சமஸ்தானத்தின் பள்ளியில் காந்தியை சேர்த்தார்கள்.

அங்கும் படிப்பில் காந்தி சராசரி மாணவனாகத்தன் இருந்தார். மற்ற மாணவர்களுடன் சேரமாட்டார். துடுக்குத்தனம் சிறிதளவும் இல்லாத அச்சமுள்ள மாணவனாகவே காணப்பட்டார். பாடப்புத்தகம் படிப்பது காந்திக்கு பிடிக்காத ஒன்று.

வேறு புத்தகங்கள் கிடைத்தால் ஆர்வமாக படிப்பார். ஒரு நாள் அருகில் உள்ள நகரத்தில் நடைபெற்ற சத்திய அர்ச்சந்திரன் நாடகத்தை தந்தையின் அனுமதியோடு பார்த்தார். உண்மைக்காக அர்ச்சந்திரன் அடைந்த துன்பங்களை கண்ணுற்று கண்ணீர் வடித்தார் காந்தி.

வாழ்க்கையில் அர்ச்சந்திரனைப்போன்று உண்மையை பேசவேண்டும் என்கிற தாக்கம் இளம் வயதிலேயே முளைவிட்டு, அதுவே சத்திய வாழ்க்கை நெறியை அவருக்கு வழங்கியது என்றால் அது மிகையன்று.

காந்தியின் கையெழுத்து அழகாக இருக்காது. அழகான கையெழுத்து உள்ளவர்களை கண்டு அவ்வாறு தனது கையெழுத்து இல்லையே என்று வருந்துவார். காந்தி தனது 13-வது உயர்நிலை பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே கஸ்தூரிபாய் அம்மையாரை திருமணம் செய்து கொண்டார்.

கஸ்தூரிபாய் மிகவும் துணிச்சல் மிக்கவர் பாம்பை கண்டு அஞ்சாதவர்.காந்தி மெட்ரிகுலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். கல்லூரி படிப்பை தொடர கல்லூரியி சேர்ந்தார். ஆனால் அவரது உறவினர்கள் சட்டம் படிக்க வேண்டும் என்று கூறிவிட, அவர் கல்லூரி படிப்பை விட்டுவிட்டு லண்டன் சென்றார்.

கடல் கடந்து சென்றால் சாதியை விட்டு நீக்கிவிடுவோம் என்று குடும்ப சமயத்தலைவர் கூறியும் அஞ்சாமல் லண்டன் சென்றார். டாக்டர் பி.ஜே.மேத்தார், தளபத்ராம் சுக்லா என்ற இந்தியர்கள் காந்திக்கு லண்டனில் பல உதவிகளைச் செய்தார்கள்.

தனது நண்பகர்களின் ஆலோசனைப்படி லண்டன் மெட்ரிகுலேஷன் எழுதினார். இதற்காக லத்தீன் மொழியினைக் கற்றார். காந்தி லண்டனில் படித்தபோது, இரண்டு தேர்வுகளே சட்டபடிபிற்கு இருந்தன. ஒன்று ரோமன் சட்டம், மற்றொன்று பொதுச்சட்டம். ரோமானிய சட்டத்தை இலத்தீன் மொழியில் காந்தி கற்றார்.

சட்டக்கல்வி பயின்று 1891-ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி வழக்கறிஞராக உயர்நீதி மன்றத்தில் தனது பெயரை பதிவு செய்து கொண்டார். காந்தி தகுதி பெற்ற வழக்கறிஞரானார்.

இந்திய சட்டமும் முகமதிய சட்டமும் சிறிது கூட தெரியாமல் இந்தியாவில் எவ்வாறு தொழில் நடத்தப்போகிறோம் என்று கப்பலில் இந்தியாவுக்கு வரும்போது அஞ்சினார். இந்தியாவுக்கு வந்தபிறகு 1891ஆம் ஆண்டு முதல் பம்பாய் உயர் நீதி மன்றத்தில் வழக்குரைஞராக தொழில் நடத்தினார்.

இந்தநிலையில் 1893 ஆம் ஆண்டியில் தென் ஆப்பிரிக்காவில் டர்பனில் உள்ள நீதி மன்றத்தில் தங்களது வழக்கு ஒன்றினை நடத்தி தருமாறு போர்பந்தரில் இருந்த தாதா அப்துல்லா கம்பெனி காந்தியை கேட்டது. தென் ஆப்பிரிக்காவின் வணிகத் தொடர்பான சட்டங்களை காந்தி அறிந்திருந்ததால், மேற்படி வழக்கு சம்பந்தமாக தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றார்.

தென் ஆப்பிரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் இருந்தனர். அவர்கள் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு, அல்லல்ப்பட்டு கிடப்பதை கண்டு மனம் வருந்தினார் காந்தி. முதல் வகுப்பு டிக்கட் இருந்தும் கூட காந்தியை, இரயில் வண்டியில் இருந்து கீழே தள்ளி வெளியேற்றிய நிகழ்ச்சி, அவரது போராட்ட வாழ்க்கைக்கு முதல்படி என்று கூறலாம்.

நேடால் நகரத்தில் 1894-ம் ஆண்டில் இந்திய காங்கிரசை நிறுவினார். இந்தியர்களுக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவில் இருந்த சட்டங்களை எதிர்த்து சத்தியாக்கிரகப்போராட்டம் நடத்தினார். பல முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இறுதியில் தென் ஆப்பிரிக்க அரசு இந்தியர்களுக்கு எதிரான சட்டங்களை நீக்கியது.

தென் ஆப்பிரிகாவில் டிரான்வால் என்ற நகரத்தில், திருத்தப்பட்ட சட்டத்தின்படி அந்நகரில் நுழைவதற்கே மூன்று பவுன் ‘தலைவரி’ செலுத்த வேண்டும். அங்கு தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் இந்தியர்கள் வசிக்க வேண்டும். அதோடு வாக்குரிமையும் கிடையாது. பொது நடைபாதையில் இந்தியர்கள் நடக்க கூடாது. அனுமதி சீட்டு இல்லாமல் இரவு ஒன்பது மணிக்கு மேல் வீட்டைவிட்டு வெளியில் வரக் கூடாது.

இக்கொடுமைகளையெல்லாம் எப்படியாவது களைந்தாக வேண்டும் என காந்தி எண்ணினார். இந்தியர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தார். ‘நெட்டால் இந்திய காங்கிரஸ்’ என்கிற அமைப்பை ஏற்படுத்தி, தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களை ஒன்று திரட்டினார்.

பிறகு அந்த காங்கிரஸின் நோக்கங்களை எங்கும் பிரசாரம் செய்வதில் காந்திஜி ஈடுபட்டார். இதன் பயனாக தென்னாப்பிரிக்காவில் இருந்த இந்தியர்கள் காந்திஜியின் தலைமையில் திட்டவட்டமான நடவடிக்கையில் ஓர் அணியில் இறங்குவதற்கு வழி ஏற்பட்டது.

இதற்கிடையே ஒருநாள், பாலசுந்தரம் என்ற ஒப்பந்த தொழிலாளி, தமது முன்பற்கல் உடைந்த நிலையில், இரத்தம் வழிய கண்ணீரும் கம்பலையுமாக காந்திஜியின் அலுவலகத்தின் முன் வந்து நின்றார். பாலசுந்தரத்தை தாக்கிய அவரது ஐரோப்பிய எஜமானரை மாஜிஸ்டிரேட் முன் நிறுத்தி, அவரது குற்றத்திற்குண்டான தீர்ப்பை காந்தி வழங்கச்செய்தார். இவ்வாறு இந்தியர்களுக்கு உற்ற தோழனாகவும் பாதுகாவளராகவும் காந்திஜி விளங்கினார்.

தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களும், அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் கிறிஸ்தவ மத வழக்கப்படியேதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். என்ற சட்டத்தை கொண்டு வந்தார்கள் அரசாங்கத்தார்.

இந்த கொடுமையை எதிர்த்துச் சத்தியா கிரகத்திலிறங்குவதே சரியாது என காந்தி எண்ணினார். இப்புணித பெண்களையும் வரவேற்றார். காந்தியின் துணைவியார் கஸ்தூரிபாயும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டார். குறிப்பிட்ட நாளில் சத்தியாகிரகம் தொடங்கியது. அரசாங்கம் ஆண்களைப்போல் பெண்கள் மீதும் நடவடிக்கை எடுத்தது. டிரான்ஸ்வாலுக்கு வந்த பெண்கள் அனைவரையும் திரட்டிச் சிறையில் அடைத்தது.

ஆனால் நெட்டாலுக்குச்சென்ற பெண்களை கைது செய்யவில்லை. அப்பெண்கள், காந்திஜியின் உத்தரவுப்படி நியுகாசில் நகருக்கு சென்று அங்கிருந்து நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்து வந்த ஆயிரக் கணக்கான இந்தியத் தொழிலாளர்களை வேலை நிறுத்தன் செய்யும்படிக் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும்ஜ் மூன்று வவுன் தலைவரியினால் பாதிக்கப்பட்டவர்களாயிற்றே, ஆகவே வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர் இந்திய தொழிலாளர்கள். சுரங்கங்களில் வேலை ஸ்தம்பித்து நின்றுவிட்டது.

உடனே அரசாங்கம் பெண்கள் உள்பட அனைவரையும் கைது செய்து 1913-ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி சிறையில் அடைத்தது. சிறையில் பெண்களுக்கு கடுமையான வேலைகள் கொடுக்கப்பட்டன. கஸ்தூரிபாயும் சிறையில் இருந்தார். அவருடன் தமிழ்நாட்டை சேர்ந்த வள்ளியம்மை என்ற பெண்ணும் சிறையில் இருந்தார்.

விடுதலைபெற்றவர்கள் அனைவரும் எலும்பு கூடுபோன்றே வெளியில் வந்தார்கள். மோசமான உணவு கடுமையான வேலையும்தான் காரணம். வள்ளியம்மை கொடுமையான விஷக்காய்ச்சலுடன் விடுதலை ஆனார். சிறையில் இருந்து மீண்டப்பின்னர் படுக்கையில் கிடந்தார். காந்திஜி பார்த்து ஆறுதல் கூறினார்.

சிறையில் புகுந்ததற்காக வருத்தப்படுகிறாயா? என காந்திஜி வள்ளியம்மையிடம் கேட்டார். அதற்கு வள்ளியமை, ‘இல்லை, இந்நிலையில் கூட புனித போருக்கு தயாராக இருக்கிறேன்’ என்று தனது உறுதி தன்மையை காட்டினார். ஆனாலும் அந்த வீரப்பெண் சில நாள்களுக்கு பிறகு இறந்துவிட்டார். அவரின் வீரமரணம், காந்திஜியை மிகவும் வருந்த செய்தது.

காந்திஜின் கட்டளையை ஏற்று தென் ஆப்பிரிக்காவில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு தன்னை அர்ப்பணிக் கொண்ட தீயாக தீபம்தான் வள்ளியமை. அவர்தான் ‘தில்லையாடி வள்ளியம்மை’ என்று அழைக்கப்படுகிறார். அதன் பிறகு காந்திஜியின் போராட்டத்தை உலகம் உற்று நோக்கியது.

1893 ஆம் ஆண்டு முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு சென்ற காந்தி, இடையில் இந்தியாவுக்கு வந்து, மீண்டும் 1896 ஆம் ஆண்டு தமது மனைவி, குழந்தைகளுடன் மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றார். சுமார் 20 ஆண்டுகள் தென் ஆப்பிரிக்காவில் தங்கியிருந்து அங்கே குடியிருந்த இந்தியர்களின் உரிமைகளை நிலை நாட்டினார். காந்தியின் சத்தியாக்கிரகம் அற்புதமான ஆயுதம் என்பதை உலகமே அன்று உணர்ந்தது.

தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களீன் உரிமைகளுக்காக போராடி வெற்றி கண்ட காந்தி, 1915 ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி இந்தியா திரும்பினார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் புதிய அத்தியாயம் உதயம் ஆனது. பம்பாயில் (மும்பை)வந்திறங்கிய காந்தியை கோகலே தலைமையில் இந்திய மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி வரவேற்பளித்தனர்.

அப்போது கத்தியவாரில் வாழும் மக்கள் அணிவது போல் காந்தி, தலைப்பாகையும் வேட்டியும் சட்டையும் அணிந்திருந்தார். இவரா தென்னாப்பாரிக்காவில் இந்தகைய மகத்தான போராட்டங்கள் நடத்தி வெற்றி பெற்றார் என மக்கள் ஆச்சரியபட்டனர்.

குஜராத் மக்களும் தனியாக ஒரு வரவேற்பளித்தனர். முகமது அலி ஜின்னா குஜராத்தியர் ஆகையால் அவரும் அந்த விழாவில் கலந்து கொண்டு காந்தியை பாராட்டி ஆங்கிலத்தில் பேசினார். பாராட்டு விழாவில் கலந்து கொண்ட பலரும் ஆங்கிலத்திலேயே பேசினர். ஆனால் காந்தியோ குஜராத்தியில் நன்றி தெரிவித்து பேசினார்.

அந்த காலத்தில் அது மாபெரும் புரட்சியாக இருந்தது. கோபாலகிருஷ்ண கோகலே காந்தியின் நாட்டுப்பற்றையும் தாய்மொழிப்பற்றையும் மிகவும் பாராட்டி மகிழ்ந்தார். அதன் பிறகு காந்தி, பம்பாய் கவர்னர் லார்டு வில்லிங்டன் -யை சந்தித்தார். ’அரசாங்கம் சம்பந்தமாக எதாவது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் அதற்கு முன் தயவு செய்து என்னை வந்துப் பார்க்க வேண்டும்’ என கவர்னர் காந்தியிடம் கேட்டு கொண்டார். இந்தியாவிற்குத் திரும்பிய காந்திக்கு ’மகாத்மா’ என்ற பட்டத்தை தாகூர் வழங்கினார்.

தென்னாப்பிரிக்காவில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தி வெற்றி கண்ட காந்தி, அதனையே பின்பற்றி இந்தியாவில் சுதந்திரப்போராட்டத்தை வழி நடத்த எண்ணினார். பிரிட்டீஷ் அரசாங்கத்தை எதிர்த்து விவசாயிகள் நடத்திய இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பீகாரிலுள்ள சாம்ரான் என்னுமிடத்தில்தான், காந்தி இந்தியாவில் மேற்கொண்ட முதல் சத்தியாக்கிரகப்போராட்டம், பின்னர் குஜராத்தில் உள்ள கைரா மற்றும் அகமதாபாத்தில் ஏற்பட்ட தொழிலாளர் பிரச்னை ஆகியவற்றில் நேரடியாகத் தலைமை தாங்கி வெற்றி கண்டார்.

பீகாரில் அவுரி பயிரிடுதல் பிரச்னையிலும் குஜராத்தில் நிலவரி பிரச்னையிலும் அகமதாபாத்தில் தொழிலாளர் பிரச்னையிலும் காந்தி, சத்தியாக்கிரக போராட்டத் தத்துவங்களை விளக்கி, மக்களுக்கு ஆர்வத்தையும், விழிப்புணர்வையும் உண்டாக்கினார். உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். காந்தியின் தலைமையினை ஏற்பத்தில் மக்கள் ஆர்வமாக அணி வகுத்து நின்றனர்.

ஆசிரமம் ஒன்றை நிறுவி, அங்கு எளிய வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது காந்தியின் நெடுங்கால கனவு. அகமதாபாத்தில் ஆசிரமம் நடத்த காந்தி தீர்மானித்தார். கோசரப் என்ற இடத்தில் வீடு அமர்த்தப்பட்டது. ‘சத்தியாகிரக ஆசிரமம்’ என்று பெயர் சூட்டப்பட்டது. 1915 ம் ஆண்டு மே 25-ம் நாளில் ஆசிரமம் தனது பணியை துவங்கியது.

தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்தி, பூனாவுக்கு சென்று தனது குருவான கோபாலகிருஷ்ண கோகலேவை சந்தித்தார். பூனாவில் கோகலே பல சமூக சேவை சங்கங்கள் மூலம் நற்பணி ஆற்றி வந்தார். அவருடன் சேர்ந்து தானும் நற்பணி ஆற்றிட அங்கேயே தங்க இருந்த காந்தியை, ‘இந்திய மக்கள் மிகவும் பின்பட்ட நிலையில் இருக்கிறார்கள். அவர்களின் மிகவும் மோசமான பொருளாதார நிலையை, இந்தியா முழுவதும் பயணம் செய்து, ஓராண்டுக்குள் அறிந்து கொள். அதன் பிறகு அரசியலில் முழு ஆர்வம் காட்டு’ என கேட்டுக் கொண்டார்.

காந்தியும் அதன்படி, அரித்துவார் சென்று, கும்பமேளாவில் மக்கள் படும் கஷ்டத்தைக் கண்டார். அன்று முதல் இரவில் சாப்பிடுவதில்லை என்று விரதம் பூண்டார். மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியிலேயே பயணம் மேற்கொண்டார். தமிழ்நாட்டுக்கு வந்தபோது ஆடையின்றி அவல நிலையில் இருந்த இரு பெண்ணுக்கு தன் மேலாடையை அளித்துவிட்டு அன்றுமுதல் மேலாடை அணியாமல் வாழ்ந்தார்.

முதல் உலகப்போரின் முடிவில் இந்தியாவிற்கு பொறுப்பாட்சி அளிக்கப்படும் என அனைவரும் நம்பினர். 1919 ஆம் ஆண்டுன் மாண்டேகு – சேம்ஸ்போர்டு சட்டப்படி இந்தியர்களுக்கு சில சலுகைகள் அளித்தது பிரிட்டிஷ் அரசாங்கம். அதனால் 1919 ஆம் ஆண்டில் உறுதி அளிக்கப்பட்ட உரிமைகளைப் பெற காங்கிரஸ் தேர்தலைப் புறக்கணித்தது.

காங்கிரஸ் கட்சியின் போக்கை கண்டு, அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியது. ரெளலட் சட்டங்களின் மூலம் இந்தியர்களின் உரிமைகள் நசுக்கப்பட்டன. ரெளலட் சட்டங்களுக்கு உரிமை தரக் கூடாது என்று காந்தி அரசப்பிரதிநிதிக்கு கடிதம் எழுதினார். அது எந்த வித பயனும் அளிக்காததால், அதனை எதிர்க்க காந்தி திட்டங்கள் வகித்தார்.

1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தி, வேலை நிறுத்தம் செய்யவும், கடைகளை மூடவும் முடிவு செய்யப்பட்டது. நாடெங்கிலும் விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. கூட்டங்கள் நடத்த பிரிட்டிஷ் அரசு தடைவிதித்தது.

திட்டமிட்டபடி பஞ்சாப்பில், அமிர்தசரஸ் நகரில் 1919 ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதியும் ஏப்ரல் 6-ம் தேதியும் அமைதியான முறையில் கடையடைப்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்ட ஊர்வலமும் நடைபெற்றது. ஊர்வலத்தின் மீது பிரிட்டீஷ் அரசு துப்பாக்கி சூடு நடத்தியது. சிலர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் இறுதிச்சடங்கு ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற்றது.

1919 ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி ஜாலியன் வாலாபாக் என்கிற மைதானத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. மாலை 4 மணியளவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தார்கள். அந்த இடம் ஒரு சிறிய நுழைவாயிலை உடையது. நான் கு புறமும் உயரமான மதிற்சுவர்கலைக் கொண்டது.

கூட்டம் நடந்து கொண்டிருந்த இடத்திற்கு, இராணுவ பிரிகேடியர் ஜெனரல் டயர் தன் படையுடன் மைதானத்தின் நுழைவாயிலுக்குச் சென்றான். எந்த முன் அறிவிப்பும் எச்சரிக்கையும் அளிக்காமல், இரங்கல் கூட்டத்தில் கூடியிருந்தவர்கள் மேல் துப்பாக்கிச் சூடு நடத்தினான். எங்கும் கூச்சல் குழப்பம், நெரிசல், அலறல், ஒருவர் மீது ஒருவர் ஏறிச் சுவரைத் தாண்ட முயன்றனர்.

துப்பாக்கி குண்டுகள் வெடித்துக் கொண்டே இருந்தன. 379 மேர் மாண்டனர். 1208 பேர் படுகாயமுற்றனர். இதனைத் தொடர்ந்து அமிர்தசரசில் ’‘ஊரடங்குச் சட்டம்’’ அமுலாக்கப்பட்டது. ஜாலியன் வாலாபாக்கில் ஜெனரல் டயர் சுட ஆணையிட்டதும், ரெளலட் சட்டம் அமுலாக்கப்பட்டதும் நியாயமானவையே என்று விசாரணைக் குழுவின் அறிக்கை இருந்தது. காந்தி பெரும் ஏமாற்றம் அடைந்தார். இனி பிரிட்டிஷ் அரசுடன் எவ்வகையிலும் ஒத்துழைக்க கூடாது என முடிவு எடுத்தார்.

சாத்வீக ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி தொடங்கினார். மக்கள் பதவிகளைக் புறக்கணிக்க வேண்டும், மாணவர்கள் கல்லூரிகளை, பள்ளிளைத் தவிர்க்க வேண்டும், பட்டதாரிகள் தமது பட்டங்களை நீக்க வேண்டும். இதுவே காந்தியின் வேண்டுகோள்.

ஒத்துழையாமை இயக்கம் நாடு முழுவதும் தீவிரமடைந்தது. மோதிலால்நேரு, ஜவர்ஹர்லால்நேரு,சித்தரஞ்சந்தாஸ் உள்பட பல்லாயிரக்கணக்கில் காங்கிரஸ் தலைவர்களையும் தொண்டர்களையும் பிரிட்டிஷ் அரசு கைது செய்து சிறையில் அடைந்தது.

இந்தியா முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் வீறு கொண்டு எழுந்து நின்ற நேரம், பள்ளிக் கூடங்கள் கல்லூரிகள், அலுவலகங்களில் பணிக்கு வருவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. ஒத்துழையாமை இயக்கத்தை நாட்டின் எல்லா பாகங்களிலும் தொண்டர்கள் வழி நடத்தினர்.

மறியல்போராட்டம் நடப்பதும் ஆண்களும் பெண்களும் சிறையில் அடைக்கப்படுவதுமாக இருந்தது. இந்தநிலையில் (1921)இந்திய தேசிய காங்கிரஸ், அலகபாத்தில் கூடியது. காந்தி நடத்தி வரும் ஒத்துழையாமைன் இயக்கத்தின் மீது நம்பிக்கை தெரிவித்தது மட்டுமின்றி, காங்கிரஸ் இயக்கத்தின் முழுப்பொறுப்புள்ள ஒரே பிரதிநிதியாக காந்தியை அறிவித்தது இந்திய தேதிய காங்கிரஸ்.

காந்தி வரி கொடாமை இயக்கத்தை ஆரம்பித்தார். இந்திய மக்கள் அனைவரும் அணிவகுத்து நின்றனர். 1921 ம் ஆண்டு வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு வந்தார். காந்தி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அயல்நாட்டுத் துணகளை எரிக்கும் போராட்டத்தைத் தொடங்கினார். இந்தியாவில் பல இடங்களில் அயல்நாட்டுத் துணிகள் தெருக்களில் வீசப்பட்டு, எரிக்கப்பட்டன. சில இயங்களில் வன்முறைகள் நிகழ்ந்தன.

காந்தி பர்தோலில் நடைபெறவிருந்த ‘வரி கொடாமை இயக்கத்தில் பங்கு கொள்ள எண்ணிப் புறப்பட இருந்த நேரத்தில், பம்பாயில் பெரிய கலவரம் மூண்டதாக செய்தி கிடைத்தது. இதனைக் கண்டித்து, காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இந்தநிலையில் (1921) பிப்ரவரி 5-ம் தேதி, உத்திரபிரதேசத்தில், கோரக்பூர் அருகில் செளரி – செளரா என்னுமிடத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களால் போலீஸ் ஸ்டேசன் சூறையாடப்பட்டது. தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இருபது போலீஸ்காரர்களும் ஒரு சப்-இன்ஸ்பெக்டரும் கொல்லப்பட்டார்கள்.

காந்தி இந்த கொடுமையான செய்தியை கேட்டு மனம் வருந்தினார். ‘ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தை கைவிட்டதோடு மட்டுமல்லாது, மக்களை அமைதி காக்கவும் வேண்டினார். இந்தநிலையில் பிரிட்டிஷ் அரசு காந்தியை கைது செய்தது. ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. சிறையில் காந்தி சமய நூல்களைப் படித்தார்.

பைபிள், குரான் போன்ற வேத நூல்களைத் தெளிவாகக் கற்றார். குஜராத்தி மொழியில் ‘சத்திய சோதனை’ என்கிற தனது சுயரிதை நூலை எழுதினார்.

1929 ஆம் ஆண்டு இந்தியாவில் அரசியல் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்காணிக்க சர்ஜான் சைமன் தலைமையில் குழு ஒன்று வருவதை இந்தியர்கள் எதிர்த்தனர். இந்திய தேசிய காங்கிரஸ், இந்து மகா சபா, முஸ்லீம் லிக், லிபரல் பெட்டரேசன் ஆகிய கட்சிகள் எதிர்த்தன.

சைமன் குழு பம்பாய் வந்தபோது முழு கடையடைப்பு வெற்றிகரமாக நடைபெற்றது. அக்குழு எங்கு சென்றாலும் ‘சைமன் குழுவே வெளியே போய்’ என்கிற எதிர்ப்பு குரல் எழும்பியது. சைமன் குழுவின் வரவு, இரட்டை ஆட்சி ஒழிக்கப்படவும் மத்தியில் தலைமை ஆளுநர் அதிகாரங்கள் பெறவும் வழிவகுத்தது.

1929 ஆம் ஆண்டு ஜனவரி 26-ம் நாளை விடுதலை நாளாக கொண்டாட காங்கிர முடிவு செய்தது. அப்போது நடைப்பெற்ற மாநாட்டில், உப்பு வரியை எதிர்த்தும், நிலவரியைக் குறைக்கவும், மதுவிலக்கை செயல்படுத்தவும் காந்தி தீர்மானம் கொண்டு வந்தார். இதன்படி சட்ட மறுப்பு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

1930 ஆம் ஆண்டில் வட்ட மேஜை மாநாட்டிற்கு காந்தி செல்ல வில்லை. இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து அளிக்கப்படவில்லை என்பதே அதற்கு காரணம். மார்ச் 12-ம் தேதி, உப்பு சத்தியாகிரகம் செய்திட தண்டியாத்திரையைத் தொடங்கினார்.

ஏப்ரல் 6-ம் தேதி தண்டி கடற்கரையில் ஒரு கை உப்பு எடுத்தார். அந்த ஒரு கை பிடி உப்பு, ஆங்கில அரசாங்கத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவர எடுத்த மிகப் பயங்கரமான வெடி மருந்துக்கு சமமானது. இந்த உப்பு சத்தியாகிரகம் பெரும் இயக்கமாக உருவெடுத்தது.

1930-ம் ஆண்டு ஜூன் மாதம் இவ்வியக்கம் மிக தீவிரம் அடைந்தது. நூல் நூற்கும் ஆலைகளும் மதுக்கடைகளும் மூடப்பட்டன. காந்தி, நேரு உள்பட பல ஆயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சட்ட மறுப்பு இயக்கம்

2-வது வட்ட மேஜை மாநாடு, 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் – டிசம்பர் மாதங்கலில் லண்டனில் கூட்டப்பட்டது. இதில் காந்தி கலந்து கொண்டார். இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவது பற்றியும் சுயாட்சி வழங்குவது பற்றியும் எதுவும் பேசப்படாத நிலையில் காந்தி தாயகம் திரும்பினார்.

காந்தி இந்தியா வந்து சேரும் முன்னரே, இந்தியாவில் பெரும் கலவரம் ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கில் தொண்டர்களும் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தியாவில் அரசப் பிரதிநிதியாக இருந்த வெலிங்டன் பிரபுவிடம் காந்தி பேச்சு வார்த்தை நடத்த முயன்றார். ஆனால் வெலிங்டன் பிரபு மறுத்துவிட்டார்.

இதனால் 1939 ம் ஆண்டு ஜனவரி முதல்தேதியே காந்தி ‘சட்ட மறுப்பு’ இயக்கத்தை தொடங்கினார். கைது செய்யப்பட்ட காந்தி எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். காங்கிரஸ் தொண்டர்கள் லட்சக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆகஸ்ட் மாதத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகளை அமைத்திட இங்கிலாந்து பிரதம மந்திரி ராம்சே மாக்டொனால்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தாழ்த்தப்பட்டவர்களை இந்து சமூகத்திலிருந்து பிரிக்க வேண்டாம் என கூறி காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.

காந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் காந்தியின் உடல்நிலை மோசமானது. கவலைக்கிடமானது. தனது திட்டத்தை ராம்மே மாக்டொனால்டு கைவிட்டார். காந்தி விடுதலை செய்யப்பட்டார்.

1932 ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கரும் காந்தியும் பூனாவில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் விளைவாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு இரட்டி இடம் வழங்கப்பட்டது. அரசு நிறுவனங்களிலும் சட்ட மன்றத்திலும் குறிப்பிட்ட பிரிதிநிதித்துவம் தரப்பட்டது.

தீண்டாமையை ஒழிக்க காந்தி அயராதுபாடுபட்டார். தனது ஆசிரமத்தில் தாழ்த்தப்பட்டவர்களை சேர்ந்த்துக் கொண்டார். அவர்களை இறைவனின் மக்கள் என பொருள்பட ‘ஹரிசன்’ என்று அன்போடு அழைத்தார். அவர்களை நேசித்தார். அவர்களுக்காக நம்மை அர்ப்பணித்துக் கொண்டார்.

அகில இந்திய அளவில் 1933ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ‘ஹரிஜன சேவா தளம்’ என்ற அமைப்பை தொடங்கினார். அதோடு ‘ஹரிஜன்’ என்கிற பெயரில் ஒரு வார இதழையும் ஆரம்பித்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கும் நோக்கத்தோடு சட்ட மறுப்பு இயக்கத்தை காந்தியடிகள் ரத்து செய்துவிட்டார்.

இதன் ஒருபகுதியாக 1933 ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி காந்தி, சென்னை நகருக்கு வருகை புரிந்தார். வடசென்னை ஹரிஜன சேவா சங்கத்தின் சார்பில் இராயபுரத்தில் உள்ள இராபின்சன் பூங்காவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காந்தியடிகள் உரையாற்றினார்.

அவரது ஆங்கில உரையை, சென்னை நகரின் துணைமேயராக இருந்த, சிரப்பு வாய்ந்த சுதந்திரபோராட்ட வீரர் பி.எம்.ஆதிகேசவநாயக்கர் மொழிபெயர்த்தார். தொழிலாளர்கள் அதிகம் வாழும் பகுதிகளான பெரம்பூர், சூளை போன்ற பகுதிகளிலும் காந்தி பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டார்.

இந்தப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற சுதந்திரப்போராட்ட வீராங்கனை ருக்மினி இலட்சுமிபதி தான் அணிந்திருந்த அனைத்து தங்க நகைகளையும் கழற்றி ஹரிஜன மேம்பாட்டிற்காக தனது நிதியாக காந்தியடிகளிடம் அளித்தார்.

தீண்டாமையை இந்து மதத்துக்கே மாசாய் கருதியவர் காந்தி. அவருடைய ஆசிரமத்தில் ஹரிசனங்கள் மற்றவர்களுக்கு சம்மாக வாழ்ந்தனர். ஹரிஜன சேவை காந்திக்கு என்றைக்குமே மன நிறைவை தந்தது. காந்தியின் முயற்சியால், தீண்டாமை விலக்கு, காங்கிரஸ் கட்சியின் பணிகளில் ஒரு முக்கிய அம்சமாயிற்று.

1942 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி அன்று கிரிப்ஸ் என்கிற போர்க்கால அமைச்சர் இந்தியா வந்தார். புதிய அரசியல் அமைப்பை ஏற்படுத்திட அரசியல் நிர்ணய சபை அமைப்பது பற்றியும், உடனடி தேர்தல் பற்றியும் கூறினார். அவரின் உறுதி மொழியை காந்தி ஏற்க தயாராக இல்லை. மேலும் முகமதியர் அதிகம் வாழும் பகுதியை உடனடியாக பிரித்து தரவேண்டும் என்று ஜின்னா கூறியதாலும் ஆங்கிலேயர்களுடன் எந்த சமரசப் பேச்சும் ஏற்பட முடியவில்லை.

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு 8-ம் தேதி, பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ‘’வெள்ளையனே வெளியேறு’’ தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நாடுமுழுவதும் வெள்ளையனே வெளியேறு என்று கூறி ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்றன. காந்தி கைது செய்யப்பட்டார். அந்த ஆண்டு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது.

1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்தது. இங்கிலாந்தில் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தது. அட்லிபிரபு இங்கிலாந்தின் பிரதமர் ஆனார். இந்தியா முழுவதும் உடனடியாக பொதுத் தேர்தல் நடத்த உத்தரவிட்டார். பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. முஸ்லீம் லீக்கும் அதன் தொகுதிகளில் வெற்றி பெற்றது. நேருவின் தலைமையில் அமைச்சரவை அமைந்தது. ஆனால் அதற்கு முஸ்லீம் லீக் ஒத்துழைப்பு தரவில்லை. ‘நேரடி நடவடிக்கை நாள்’ என்று குறிப்பிட்டார் ஜின்னார்.

வங்காளத்தில் முஸ்லீம் லீக் மந்திரி சபை ஆட்சியில் இருந்தது. அங்கு நவகாளி என்னும் இடத்தில் பெரும் கலவரம் மூண்டது. அந்த வகுப்புக் கலவரத்தில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள் கொல்லப்பட்டனர். காந்தி கண்ணீர் விட்டு கலங்கினார். கால்நடையாகவே நவகாளிக்கு சென்றார். துன்பமுற்ற மக்களுக்கு ஆறுதல் கூறினார். நவகாளியில் தங்கியிருந்து துயர் துடைப்பு பணியில் ஈடுபட்டார்.

பின்னர் பிரிட்டிஷ் அரசு, ஜின்னாவின் பிரிவினை கோரிக்கையை ஏற்றது. ஆனால் காந்தி பிரிவினையை ஏற்கவில்லை. மனம் நொந்தார். ஆனாலும் பிரிவினை நடந்தது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் 15ம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் விடுதலை பெற்றன.

பிரிவினையை விரும்பாத காந்தி, சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. நவகாளியில் துயர் துடைப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் பீகாரிலும் பஞ்சாப்பிலும் வகுப்பு கலவரம் ஏற்பட்டது.

அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் காந்தி பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தி வந்தார். 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் மாலையில் காந்தியை சந்திக்க பிர்லா மாளிகைக்கு சர்தார் வல்லபாய்பட்டேல் வந்தார். அவரை சந்தித்து அனுப்பிவிட்டு பிரார்த்தனை கூட்டத்துக்கு புறப்பட்டார்.

பேத்திகளான ஆவா காந்தி, மனுகாந்தி, இருவரும் இருபுறமும் இருக்க, அவர்கள் தோல் மீது கைகளை போட்டுக் கொண்டு காந்தி பிரார்த்தனை மேடைக்கு போனார். எதிரே வந்து வணங்குவதுபோல் பாசாங்கு செய்த நாதுராம் கோட்சே என்பவன், காந்தியை துப்பாக்கியால் சுட்டான்.

‘’ஹரே ராம், ராம்’’ தரையில் சாய்ந்தார் காந்தி. தியாகப் பொன் மலர் தரையில் வீழ்ந்தது. நாட்டில் சுதந்திர மனம் வீசபாடுபட்ட சந்தன மலரின் சரிதம் முடிந்தது. இமயம் முதல் குமரிவரை குரல் கொடுத்த அகிம்சைக் குயிலின் குரல் ஓய்ந்தது. நடந்து நடந்தே நாடு முழுவதும் புதிய சகாப்தம் படைந்த அடிச்சுவடுகள் அடங்கின.

எங்கள் காந்தி, அண்ணல் காந்தி, தேசபிதா காந்தி என்று பாரத மக்களால் அன்பொழுக அழைக்கப்பட்ட காந்திஜி மறைந்தார். கைராட்டையை ஆயுதமாகவும், உண்ணாநோன்பையே போராட்டமாகவும் கொண்டு வாழ்ந்த அகிம்சா மூர்த்தியின் மூச்சு நின்றது. இந்த உலகத்தையே கட்டி ஆண்ட, பிரிட்டிஷ் அரசாங்கத்தை, அதன் இராணுவத்தை, அதன் தாக்குதலை சத்திய சோதனை மூலம் போராடி உலக சாதனையாக்கிய சத்திய சீலர் மறைந்தார்.

‘’காந்திய நெறி’’ எனும் புதிய போராட்ட நெறியை வழங்கிய அண்ணல் காந்தி இன்று இல்லை. ஆனாலும் அவரது தத்துவங்கள் புதிய உலக சகாப்தமாக நின்று நிலைத்துள்ளன. பிறருக்காக உழைக்கின்ற தியாகச்செம்மல்களை காந்தியின் பெயரிட்டு அழைப்பது இன்று உலக வழக்கமாகிவிட்டது.

கான் கபார்கான் அவர்களை ‘’எல்லை காந்தி’’ என்றும், தென்னாப்பிரிக்க விடுதலை வீரர்நெல்சன் மண்டேலாவை ‘’தென்னாப்பிரிக்க காந்தி’’ என்றும், பேரறிஞர் அண்ணா அவர்களை ‘’தென்னாட்டு காந்தி’’ என்றும் பாரத பெருந்தலைவர் காமராஜர் அவர்களை ‘’கருப்பு காந்தி’’ அல்லது ‘’காலா காந்தி’’ என்றும் அழைத்து புகழ்சேர்த்து பாராட்டுகின்றனர். நாமும் அண்ணல் காந்தியின் புகழ் வாழ்க என்று வாழ்த்தி வணங்குவோம் ! – நடுநிலை A.R.S.சரவணப்பெருமாள், www.nadunilai.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here