நீட் தேர்வு நடந்து முடிந்தது : திமுக தேர்தல் வாக்குறுதி குறித்து வாரியெடுக்கும் எதிர்கட்சிகள்

0
14
dmk news

சென்னை: “தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், அதனை எப்படி ரத்து செய்வது என்பது எங்களுக்கு தெரியும்?” என சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி தொடர்ந்து பேசி வந்த நிலையில், தி.மு.க., ஆட்சியில் இன்று நீட் தேர்வு திட்டமிட்டப்படி நடப்பதால், #உதாருவிட்டஉதய் என்ற ஹாஷ்டேக் மூலம் டுவிட்டரில் உதயநிதியை எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர 2013-ல் காங்கிரஸ் ஆட்சியில் மருத்துவ கவுன்சில் மற்றும் சி.பி.எஸ்.இ., இணைந்து ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் நீட் தேர்வை அறிவித்தன. அதில் பல்வேறு குழப்பங்கள் இருந்ததால் அத்தேர்வை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் உச்ச நீதிமன்ற தடை விலகியதால் 2017-ல் பா.ஜ.க., ஆட்சியில் மீண்டும் தேர்வு கொண்டு வரப்பட்டது. தமிழ், கன்னடம், குஜராத்தி உள்ளிட்ட மாநில மொழிகளிலும் வினாத்தாள்கள் இடம்பெற்றன. கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்வது சிரமம் என கூறி அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட முதன்மையான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனாலும் நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற முடியவில்லை. நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமலும், நீட் தேர்வு பயத்தினாலும் அனிதா உள்ளிட்ட பல்வேறு தமிழக மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதால் இத்தேர்வுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அதன் பின்னர் கடந்த 2020-ல் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றினார். அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். அதன் மூலம் சமூக, பொருளாதார நிலையில் நலிவடைந்த சுமார் 405 மாணவர்களுக்கு மருத்து சீட் கிடைத்தது.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க., தலைவர்கள் நீட் தேர்வை முக்கிய பிரச்னையாக முன் வைத்தனர். ‘ஸ்டாலின் தான் வராரு’ என்ற பிரசார பாடலில் கூட நீட்டால் உயிரிழந்த அனிதாவின் படம் மற்றும் நீட் தேர்வுக்கு எதிரான வரிகள் இடம்பெற்றிருந்தன. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு கூட்டத்திலும் நீட் தேர்வுக்காக பா.ஜ.க., மற்றும் அ.தி.மு.க., அரசை கடுமையாக விமர்சித்தார்.

“நீட் தேர்வுக்கு பயந்து தமிழகத்தில் இதுவரை 14 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு தி.மு.க., ஆட்சியில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். நீட் தேர்வை எப்படி ரத்து செய்ய வேண்டும் என எங்களுக்குத் தெரியும், தலைவருக்குத் தெரியும். அந்த ஆளுமை திறன் தி.மு.க., தலைவருக்குத் தான் இருக்கிறது,” என பேசினார் உதயநிதி.

அவரது பேச்சே இன்றைக்கு அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. தி.மு.க., ஆட்சியில் இன்று தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். தி.மு.க.,வால் நீட் தேர்வை தடுக்க முடியவில்லை என அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க.,வினர் விமர்சிக்கின்றனர். “ஆட்சிக்கு வர தி.மு.க., சொன்ன பொய்யான வாக்குறுதி என்பதை மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்” என ஒருவர் கூறியுள்ளார். ”பொய்யான வாக்குறுதிகளால் நீட் தேர்வில் ஆர்வமுள்ள மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்,” என மற்றொருவர் கூறியுள்ளார். “தி.மு.க.,வை நம்பாதே” என மற்றொருவர் மீம் போட்டுள்ளார். இந்திய டிரெண்டிங்கில் இந்த ஹாஷ்டேக் 19-வது இடத்தை பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here