மாநகராட்சி தேர்தல் மல்யுத்தம் – தூத்துக்குடி அதிமுகவில் ஆரம்பம்

0
13
admk news

தமிழகத்தில் நடைபெறாமல் உள்ள உள்ளாட்சித்துறை தேர்தலுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.

திமுகவை பொறுத்தவரை குறிப்பிட்ட பதவிக்கென்றே ஒருவரை வளர்த்து கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் திமுக யோசித்து வைத்திருப்பவர் களத்தில் நிறுத்தப்படுவார். கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுப்பார்களா என்று சொல்லிவிட முடியாது. அதேபோல் அதிமுகவும் அப்படியொரு நோக்கத்தோடு சிலரை வளர்ப்பது வழக்கம். அப்படி வளர்ப்பவரில் யாரை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை கடையில்தான் பார்க்க முடியும்.

உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்கிற நிலையில் அவரவர் ஆதரவாளர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஒவ்வொரு கட்சிகளும் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இரண்டு பிரிவாக பிரிந்து நிற்கும் தூத்துக்குடி அதிமுக தங்களின் செல்வாக்கை மக்களுக்கும் மற்றவர்களுக்கும் காட்டுகிற வகையில் கூட்டத்தை சேர்க்கும் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்ட அதிமுகவை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜ், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வருகிறது. கடந்த சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்திருந்த சி.த.செல்லப்பாண்டியன், சீட் கிடைக்காமல் எதிர்ப்பு அரசியல் நிலை கொண்டார். தற்போதைய மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதனுக்கும் சி.த.செல்லப்பாண்டியனுக்கும் இடையே கோஷ்டி பூசல் இருந்து கொண்டே இருக்கிறது.

மாநகராட்சி தேர்தலில் போட்டியிட மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தயவு வேண்டும் என்கிற நிலையில் எதிரும் புதிருமாக இருந்து வரும் சினா.தானாவுக்கு பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிறது. இதனால் சி.த.வை ஆதரிக்கும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் ’அதிமுகவின் 50 வது பொன் விழாவை முன்னிட்டு உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்’ என்று கடந்த சில நாட்களுக்கு முன்பே அறிவித்தனர் சி.த ஆதரவாளர்கள்.

அதுவரை அமைதியாக இருந்துவந்த எஸ்.பி.சண்முகநாதன் ஆதரவாளர்கள், அதன்பிறகு சண்முகநாதனுக்கு பிறந்த நாள் கொண்டாடுவது முதல் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த தொடங்கிவிட்டனர். இப்போது அதிமுகவினர் அந்த நிகழ்ச்சிகளில் அங்கும் இங்குமாக கலந்து கொண்டு வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் அமோகமாக வெற்றி பெறுவோம் என்று மேடைக்கு மேடை பேச ஆரம்பித்துவிட்டனர் நிர்வாகிகள்.

அந்த வகையில் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் தூத்துக்குடியில் நடத்தபட்ட உள்ளாட்சி ஆலோசனை கூட்டம் நடத்தபட்டது. அதற்கு செயலாளர் ஏசாதுரை தலைமை வகித்தார். மாவட்ட எம்.ஜி,ஆர் மன்ற துணைச்செயலாளர் ஜோதிமணி, பகுதி எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சாமுவேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சேவியர், ஆகியோர் வரவேற்புரையாற்றினார்கள்.

அதில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேசினார், ’’வரும் உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மேயர் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும் அதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். தொண்டர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க நான் தயார். அதிமுக 50 ஆண்டு பொன்விழாவில் மாநகர் முழுவதும் கொண்டாடப்படும். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை எந்த தொண்டனும் மனநிறைவோடு ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் சில குறைபாடுகள் தான் இனி வரும் காலங்களில் அது நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் பனியாற்றி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் முழுமையாக வெற்றி பெற வேண்டும்’’ என்றார்.

மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் ஆறுமுகநயினார் பேசுகையில், ஆளும் கட்சியாக இருந்து தேர்தலை சந்தித்தும் எதிர்கட்சியாக வந்தது மிகவும் மன வேதனையை அளிக்கிறது. பல தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளோம். அதை சரிசெய்ய எடப்பாடி பழனிச்சாமி நல்ல முடிவை விரைவில் அறிவிப்பார். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சிலை அமைக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ நீலமேகவர்ணம், மாவட்ட பொருளாளர் அமலிராஜன், சிறுபான்மை பிரிவு துணைசெயலாளர் மைதீன், முன்னாள் ஓன்றிய செயலாளர் செங்கான், ஜெ பேரவை செயலாளர் காயல் அன்வர், தலைமை கழக பேச்சாளர்கள் கருணாநிதி, ராஜசேகர், முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் ரத்தினம், முன்னாள் நிர்வாகிகள் அரசகுரு, மேலூர் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர்கள் பொன்ராஜ், ஜெயக்குமார், சகாயராஜ், கோல்டன், சர்மிளாஅருள்தாஸ், முருகேசன், தமிழரசி, ஆனந்தகுமார், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ஞானபுஷ்பம், திருமணி, மேரி, முன்னாள் வட்டச்செயலாளர்கள் சகாயராஜ், திருமணி, கருப்பசாமி, கெய்னஸ், தமிழரசன், ரெங்கன், முன்னாள் அவைத்தலைவர் அந்தோணிசேவியர், வட்டப்பிரதிநிதிகள் டைமன்ராஜ், சுப்புராஜ், வட்டச்செயலாளர் பழனிச்சாமி பாண்டின், ஜெ பேரவை துணைச்செயலாளர் ஜீவாபாண்டியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக பொன்விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் மாவட்டம் முழுவதும் முழுமையான வெற்றிக்கு உழைப்பது ஜெயலலிதா பல்கலைக்கழகம் பெயர் மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும். தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் பூங்காவில் எம்.ஜி.ஆர் சிலை வைக்க வேண்டும். தூத்துக்குடி தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஓதுக்காமல் அதிமுகவிற்கு ஓதுக்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பகுதி செயலாளர் முருகன் நன்றியுரையாற்றினார். இதனால் தூத்துக்குடி அதிமுகவில் பரபரப்பு நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here