திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ.150 கோடி செலவில் அடிப்படை வசதிகள் – அமைச்சர் சேகர் பாபு தகவல்

0
4
news

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.150 கோடி செலவில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் எளிதாக சுவாமி தரிசனம் செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் விரைவில் செய்யப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகள், அன்னதானகூடம், சமையல் அறை, பஞ்சாமிர்தம் தயார் செய்யும் அறை மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான பணிகள் ஆகியவற்றினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, மீன் வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இன்று (14.09.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

ஆய்வின்போது, திருக்கோயிலில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தொடர்பான பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். பின்னர் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார்.

’’தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனையின்பேரில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின்போது, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வரைவுத்திட்டம் தயாரிக்கப்பட்டு ரூ.150 கோடி செலவில் தனியார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் நிதியோடு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கும் மற்றும் எளிதாக சுவாமி தரிசனம் செய்வதற்கும் அனைத்து ஏற்பாடுகளும் விரைவில் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்திருக்கும் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியிலேயே சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று பலமுறை என்னிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.

முதலமைச்சர் உத்தரவின் பேரில் திருக்கோவிலில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கடந்த மாதம் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் ஆலோசனை செய்து வரைவு திட்டத்தை தயாரித்துள்ளோம். இதுதொடர்பாக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகிய நான் மற்றும் அமைச்சர் பெருமக்கள், துறை செயலாளர் துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆலோசனையின் பேரில் அந்த வரைவு திட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டு புதிய வரைவு திட்டம் தயார் செய்யும் பணியில் திருக்கோயில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் குழு ஈடுபட்டு வருகிறது.

வரைவு திட்ட அறிக்கை இறுதியானவுடன் முதலமைச்சரை சந்தித்து அவர்களின் ஆலோசனையின் பேரில் வெகு விரைவில் திருக்கோயில் திருப்பணிகள் துவங்கப்படும்.

திருக்கோயிலுக்கு ஆய்வுக்கு வந்தபோது, மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் மற்றும் பக்தர்களின் கோரிக்கையான, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை துறை செயலாளருடன் ஆலோசித்து விரைவில் நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்யப்படும்.

மேலும், திருக்கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், தரிசனத்திற்கு பக்தர்கள் அதிக நேரம் காத்திருப்பதாகவும், வி.ஐ.பி.க்கள் என்று வருபவர்களை முன்கூட்டியே தரிசனத்திற்கு அனுமதிப்பதால் பக்தர்கள் அதிக நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்கு காத்திருப்பதாக புகார் தெரிவித்தனர். வி.ஐ.பி. தரிசன முறையை கட்டுப்படுத்த மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சிததலைவர் ஆகியோர் தலைமையில் நாளை (15.09.2021) ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

மேலும் ஒரே நேரத்தில் சுமார் 200 அர்ச்சகர்கள் பணியில் கூட்டமாக இருப்பதால் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு கால தாமதம் ஏற்படுவதாகவும் புகார்கள் தெரிவிக்கின்றனர். எனவே போதிய அளவு அர்ச்சகர்கள் இருப்பதால் சுழற்சி முறையில் அவர்களுக்கு பணிகள் வழங்குவது தொடர்பாகவும் நாளை நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். கூட்டத்தில் முடிவில் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பாக கலந்தாலோசித்து பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும்’’ என்றார். .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here