பிரதமர் பணம் அனுப்பியதாக ரூ.5.5 லட்சத்தை சுருட்டியவர் கைது!

0
351
news

பாட்னா: வங்கி பரிவர்த்தனையில் ஏற்பட்ட பிழையால் பீகாரின் ககாரியா மாவட்டத்தைச் சேர்ந்தவரின் வங்கிக் கணக்கிற்கு தவறுதலாக ரூ.5.5 லட்சம் பணம் சென்றுவிட்டது.

அதனை வங்கி அதிகாரிகள் திரும்ப செலுத்த சொன்னதற்கு, இது பிரதமர் மோடி தருவதாக சொன்ன ரூ.15 லட்சத்தின் முதல் தவணை என கூறி தர மறுத்துள்ளார். அவரை கைது செய்திருக்கிறார்கள்.

கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி பிரதமர் வேட்பாளராக பா.ஜ.,வால் அறிவிக்கப்பட்டார். அப்போது காங்கிரஸ் ஆட்சியில் ஊழல், கருப்பு பண மோசடி, விலைவாசி உயர்வு போன்றவற்றால் மக்கள் அதிருப்தியில் இருந்தனர். அதனையே தனது தேர்தல் பிரசாரத்தில் அதிகம் பயன்படுத்தி காங்கிரஸை கடுமையாக தாக்கினார் மோடி.

நவம்பர் 7, 2013 அன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்தில், “இந்த மோசடிக்காரர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை திரும்ப கொண்டு வந்தால் கூட ஒவ்வொரு ஏழை இந்தியனின் வங்கிக் கணக்கில் ரூ.15 முதல் ரூ.20 லட்சம் வரை இலவசமாக கிடைக்கும்.” என பேசினார்.

எவ்வளவு கருப்பு பணம் வெளிநாட்டு வங்கிகளில் இருக்கின்றன என்பதை உணர்த்த மோடி கூறிய அவ்விஷயத்தை, ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக வாக்குறுதி தந்தார், நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தன.

இந்நிலையில் இதே சம்பவத்தை தனது திருட்டுக்கு காரணமாக பயன்படுத்தியுள்ளார் ஒருவர். பீகாரின் ககாரியாவில் உள்ள கிராம வங்கி பக்தியார்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் தாஸ் என்பவருக்கு தவறுதலாக ரூ.5.5 லட்சத்தை அனுப்பியது. பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பணத்தை திருப்பி தர மறுத்துவிட்டார்.

வங்கியின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் மான்சி காவலர்கள் ரஞ்சித் தாஸை கைது செய்தனர். அவர்களிடம், “இந்த ஆண்டு மார்ச் மாதம் பணம் கிடைத்ததும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வதாக உறுதியளித்ததால், அதன் முதல் தவணையாக இருக்கலாம் என்று நினைத்து பணத்தை செலவழிக்க தொடங்கினேன். இப்போது எனது வங்கிக் கணக்கில் பணம் இல்லை.” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here