இன்று கூடும் கவுன்சில் கூட்டத்தில் ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் வருமா ?

0
100
nirmala seetharaman

புதுடில்லி : உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில், இன்று (செப்.,17) ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இதில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டுவருவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டுமானால் அதை ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்’ என, பல்வேறு தரப்பினரும் நீண்ட நாட்களாகவே கோரிக்கை விடுத்துவருகின்றனர். இது தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுக்குமாறு, மத்திய அரசுக்கு கேரள உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் உ.பி., தலைநகர் லக்னோவில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘இந்த பரிந்துரை ஏற்கப்பட்டு, பெட்ரோல், டீசல் விலை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் வந்தால் அதன் விலை கணிசமாக குறையும். ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய்க்கும், டீசல் 68 ரூபாய்க்கும் விற்பனை செய்யும் நிலை ஏற்படக் கூடும்’ எனக் கூறப்படுகிறது.

அதேபோல், ஓட்டல்களிலிருந்து வீடுகளுக்கு உணவு ‘சப்ளை’ செய்யும், ‘ஸ்விக்கி, ஸொமேட்டோ’ போன்ற உணவு சேவை நிறுவனங்களை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி கொண்டு வந்தால், ‘ஆன்லைன்’ வாயிலாக நாம் வாங்கும் உணவுகளுக்கான ஜி.எஸ்.டி.,யை உணவகங்களிடம் இருந்து பெற்று, அதை உணவு சப்ளை செய்யும் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்தும். இதனால், தற்போதுள்ள விலை உயர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here