தூத்துக்குடி காமராஜ் கல்லூரி பேராசிரியர் ஆ.தேவராஜிக்கு விருது : ஜனாதிபதி வழங்கினார்

0
73
devaraj

தூத்துக்குடி, செப்.24:

டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் என்.எஸ்.எஸ் -ல் சிறப்பாக பணியாற்றியதற்காக தூத்துக்குடி காமராஜ் கல்லூரி பேராசிரியர் ஆ. தேவராஜிக்கு ஜனாதிபதி விருது வழங்கி கெளரவித்தார்.

தேசிய நாட்டுநலப்பணித் திட்ட நாளாக ஆண்டுதோறும் செப்டம்பர் 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றையதினம் நாட்டில் சிறப்பாக சேவையாற்றிய 10 நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுவது வழக்கம்.

அதன்படி, 2019-20 ஆம் ஆண்டுக்கான சிறந்த நாட்டுநலப்பணித் திட்ட அணியாக தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் 54 ஆவது அணியும், சிறந்த அதிகாரியாக அந்த அணியின் திட்ட அலுவலரும், கல்லூரி வரலாற்றுத் துறை தலைவருமான ஆ.தேவராஜ் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். அப்போது, கல்லூரி முதல்வர் து. நாகராஜன் உடனிருந்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டிக் கொடுத்தது, 1000 யூனிட் ரத்ததானம் செய்தது, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்தது, மருத்துவ முகாம்கள், கொரோனா விழிப்புணர்வு முகாம்கள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியது, கேரள மாநிலத்தில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டபோது நிவாரண பொருள்கள் அளித்தது ஆகியவை குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வு செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்ததாக விருது வழங்கும் விழாவில் தெரிவிக்கப்பட்டது.

விருது பெற்ற பேராசிரியர் ஆ. தேவராஜ் கூறியது:

நாட்டின் முதல் குடிமகனான இந்திய குடியரசுத் தலைவரிடம் இருந்து விருதை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விருது பெற்றது மேலும் பல்வேறு சேவைகளை செய்ய ஊக்கம் அளித்துள்ளது. விருது பெறுவதற்கு உறுதுணையாக இருந்த கல்லூரி நிர்வாகம், நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட பிறகு அந்த பல்கலைக்கழகத்துக்குள்பட்ட கல்லூரி ஒன்றுக்கு ஜனாதிபதி விருது கிடைப்பது இதுவே முதல்முறை ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here