`மேடையில் அனுமதிக்க முடியாது!’ – மம்தா விழாவில் நிராகரிக்கப்பட்டாரா கனிமொழி? தி.மு.க. பதில்!

0
21
stalin vs kanimozhi

நாடாளுமன்றத்தில் முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றும் நேரத்தில் கனிமொழி இருக்க வேண்டும் என்ற ஸ்டாலின் வாதத்தை ஏற்றுக் கொண்டாலும், நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருக்கும் டி.ஆர்.பாலு தானே டெல்லியில் இருந்திருக்க வேண்டும்.

கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் கனிமொழிக்கு நேர்ந்த சம்பவங்களால் கொதிப்பில் இருக்கின்றனர் உடன்பிறப்புகள். ` மேடையில் முக்கியத் தலைவர்களுக்கு மட்டும்தான் அனுமதி, உங்களுக்கு இல்லை’ எனக் கனிமொழியிடம் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்த கருத்துகளால் தகிக்கின்றனர் சீனியர்கள் சிலர்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் நேற்று முன்தினம் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதுவை முதல்வர் நாராயணசாமி, தி.க தலைவர் வீரமணி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேடையின் இரண்டாவது வரிசையில் டி.ஆர்.பாலு, துரைமுருகன், தயாநிதி மாறன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். மேடையின் கீழ் அமைக்கப்பட்டிருந்த வரிசையில் கனிமொழி எம்.பி, கருணாநிதியின் மூத்த மகள் செல்வி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.

இந்த நிகழ்வில், கனிமொழிக்கு சால்வை கொடுப்பதற்காக அவரை அழைத்தார் மம்தா. இதை விரும்பாத ஸ்டாலின், செல்வியை அறிமுகப்படுத்தி அவருக்கும் சால்வை கொடுக்க வைத்தார். மேடையில் மம்தாவை அமர வைப்பதற்காக உடன் வந்தார் கனிமொழி. அவரைத் தடுத்து நிறுத்திய தி.மு.க வழக்கறிஞர் அணியின் மாநிலச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முக்கிய தலைவர்களுக்கு மட்டுமே அனுமதி, உங்களை அனுமதிப்பதற்கு இடம் இல்லை' எனக் கூற, நான் அமர்வதற்காக வரவில்லை. அவரை உட்கார வைப்பதற்காகத்தான் வந்தேன்’ எனக் கூறிவிட்டுத் தன்னுடைய இடத்துக்குத் திரும்பிவிட்டார்.

ஆர்.எஸ்.பாரதியின் செயல்பாடு குறித்து நம்மிடன் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், ‘’சிலைத் திறப்பு விழாவில், தான் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என விரும்பினார் ஸ்டாலின். சிறப்பு விருந்தினராக வந்திருப்பவர் ஒரு பெண்மணி, மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக இருக்கிறார். அவருடன் மேடையில் அமர்ந்து பேசுவதற்கு நாடாளுமன்றத்தின் தி.மு.க துணைத் தலைவராக இருக்கும் கனிமொழிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கருணாநிதியின் மகளான அவரையே மேடையில் அனுமதிக்க முடியாது என்கிறார் ஆர்.எஸ்.பாரதி. யார் சொல்லி இவையெல்லாம் நடந்தது என யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. கனிமொழியை அமர வைப்பதில் என்ன சிக்கல் வந்துவிட போகிறது. மேடையில் இடம் இல்லையா.. அல்லது ஸ்டாலின் மனதில் இடமில்லையா எனத் தெரியவில்லை’’ என கொந்தளித்தவர்கள்,

‘’கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சீர் குலைந்தபோது பல ஆயிரம் டன் அளவில் அரிசி,பருப்பு,எண்ணெய் வகைகளை வாரிக் கொடுத்தார் கனிமொழி. அது குறித்து அவர் எந்த விளம்பரமும் செய்து கொள்ளவில்லை. அவரால் பலனடந்த டெல்டா மக்கள், எங்களைப் பார்க்கவாவது நீங்கள் வர வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்தனர். ஆனால், கஜா பாதித்த பகுதிகளுக்கு அவர் செல்வதை ஸ்டாலின் விரும்பவில்லை. அவருக்கு உரிய அனுமதியும் வழங்கப்பட வில்லை. அதேநேரம், உதயநிதிஸ்டாலின் காஜா நிவாரணப் பணிகளுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்தது அறிவாலயம்.

நாடாளுமன்றத் தேர்தலின் போதும் உதயநிதியே முன்னிறுத்தப்பட்டார். ‘தேர்தல் வெற்றிக்கும் அவரே காரணம்’ எனக் கூறி இளைஞர் அணியின் மாநிலச் செயலாளர் பதிவியையும் கொடுத்தனர். தற்போது நடந்து முடிந்த வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்கும் கனிமொழி வருவதற்கு அனுமதி வழங்ப்படவில்லை. இத்தனைக்கும், ’ஜூலை 30,31 ஆகிய தேதிகளில் கனிமொழி பிரசாரம் செய்வார்’ என முரசொலி நாளேட்டில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

அவரும் பிரசாரத்துக்குச் செல்ல தயாராகத்தான் இருந்தார். துரைமுருகனும், ‘பிரசாரத்துக்கு வாருங்கள் கனி’ என மூன்று முறை அழைத்தார். ஆனால், ‘எங்கே தேர்தல் வெற்றியில் கனிமொழிக்கும் பங்கு வந்துவிடுமோ?’ என அச்சப்பட்டவர்கள், ’நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் இருப்பதால் நீங்கள் டெல்லியிலேயே இருங்கள்’ என கூறிவிட்டர். இதைக் கனிமொழியும் ஏற்றுக் கொண்டார்’’ என விவரித்தவர்கள்,

“ நாடாளுமன்றத்தில் முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றும் நேரத்தில் கனிமொழி இருக்க வேண்டும் என்ற ஸ்டாலின் வாதத்தை ஏற்றுக்கொண்டாலும், நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருக்கும் டி.ஆர்.பாலு தானே டெல்லியில் இருந்திருக்க வேண்டும். அவர் ஏன் வேலூரில் பிரசாரம் செய்தார். நாடாளுமன்றக் குழுத் தலைவராக டி.ஆர்.பாலு சரியாகச் செயல்படவில்லை எனக் கருதுகிறாரா ஸ்டாலின். என்.ஐ.ஏ மசோதாவில் சொதப்பியதுபோல மற்ற மசோதாக்களிலும் அவர் சொதப்பிவிடுவார் என அச்சப்பட்டதுதான் காரணமா? அப்படியானால், அவரை ஏன் நாடாளுமன்றக் குழுத் தலைவராக ஸ்டாலின் நியமிக்க வேண்டும்?” எனக் கொந்தளித்தனர்.

இந்த மோதல்களைவிட உச்சக்கட்டமாக கருணாநிதி நினைவுநாளில் நடந்த ஒரு விஷயத்தை மேற்கோள் காட்டுகின்றனர் உடன்பிறப்புகள். வாலாஜா சாலையிலிருந்து கருணாநிதி சமாதி வரையில் அமைதிப் பேரணியை நடத்தினார் ஸ்டாலின். இந்தப் பேரணியில் கனிமொழி உட்பட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

பேரணியின் ஓர் அங்கமாக மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கனிமொழி முன்னிறுத்தப்பட்டார். பேரணியின் பின்வரிசையில் வந்துகொண்டிருந்ததால் உதயநிதியால் பங்கேற்க முடியவில்லை. இதனால் கோபப்பட்ட குடும்ப உறவுகள் சிலர், கனிமொழியை ஏன் முன்னிறுத்த வேண்டும்?' எனக் கோபப்பட்டுள்ளனர். ஐந்து முறை முதல்வராக இருந்தவரின் மகளுக்கே, இப்படிப்பட்ட சூழல்கள் ஏற்படுவதை ஏற்க முடியவில்லை’ எனவும் நம்மிடம் வேதனையோடு சுட்டிக் காட்டுகின்றனர்.

கனிமொழியைத் தடுத்தது குறித்து ஆர்.எஸ்.பாரதியிடம் விளக்கம் கேட்டோம். “ அப்படியொன்றும் நடக்கவில்லை. யார் யார் பெயருக்கு சீட் ஒதுக்கப்பட்டிருந்ததோ அவர்கள் மட்டுமே மேடையில் அமர்ந்தனர். அவரை நான் தடுத்ததாகக் கூறுவது தவறான தகவல். மேடை அருகில் கனிமொழி வருவதற்கும் போதிய இடம் இல்லாமல் இருந்தது. எனவே, அவர் அங்கிருந்து அப்படியே கீழே சென்று துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அருகில் அமர்ந்து கொண்டார். மேடையில் யாருக்கெல்லாம் இடம் என்ற விவரம் கனிமொழிக்கும் தெரியும்” என்றார் இயல்பாக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here