விபத்து ஏற்படுத்திய லாரியை பிடிக்காமல் விட்ட இன்ஸ்பெக்டர் – சீத்தார்க்குளம் கிராம மக்கள் போராட்டம்

0
324
crime news

தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரம் அருகே சீத்தார்குளத்தை சேர்ந்தவர் காசி. இவரது மகன் மனுவேல்(வயது45). இவர் லாரி டிரைவராக இருந்து வந்தார்.

நேற்று இரவு இவர் தூத்துக்குடியில் இருந்து தனது வீட்டிற்கு பைக்கில் சென்றார். அப்போது, வாகைக்குளம் கல்லூரி அருகே மனுவேல் பைக் மீது லாரி மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அங்கு வந்த புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ், மனுவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய லாரியை பிடித்து வைக்காமல் அனுப்பிவிட்டாராம்.

இந்நிலையில், இன்று காலையில் இறந்து போன மனுவேலின் உறவினர்கள் மற்றும் அவரது ஊரை சேர்ந்தவர்கள், புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து தெய்வச்செயல்புரம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்ய முயன்றனர். ’விபத்து ஏற்படுத்திய லாரியை பிடித்து வைக்காமல் விட்டுவிட்ட புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கல் கோரிக்கை வைத்தனர். இதனால் தூத்துக்குடி – நெல்லை நான்குவழிச்சாலை தெய்வச்செயல்புரம் மெயின் ரோட்டில் பரபரப்பு நிலவியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி ரூரல் ஏ.எஸ்.பி., சந்தீஷ், ஏ.டி.எஸ்.பி.,கார்த்திகேயன், வருவாய்த்துறை சார்பில் வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், மற்றும் போலீசார் மறியல் செய்ய முயன்ற முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சடகோபன், நாம்தமிழர் கட்சி பொறுப்பாளர் வைகுண்டமாரி, பாஜக வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் பிரபு மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விபத்து ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுப்பது மற்றும் அரசு தரப்பில் தேவையான உதவிகள் செய்வது என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். விபத்து குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனுவேல் பைக்கில் வந்த போது வாகைக்குளம் அருகில் தண்ணீர் லாரி ஒன்று இடது புறத்திலிருந்து சாலைக்கு வந்திருக்கிறது. அதில் மோதாமல் இருக்க, மனுவேல் பைக்கை செலுத்தியபோது அதில் லேசாக தட்டி கீழே விழுந்திருக்கிறார். அப்போது தூத்துக்குடியிலிருந்து தாழையூத்திற்கு அனல்மின்நிலையத்தில் இருந்து சாம்பல் ஏற்றி சென்ற லாரி மனுவேல் மீது மோதி விபத்துக்குள்ளானது என்றும் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர், விபத்துக்குள்ளாக்கிய நெல்லை லாரியை செல்ல அனுமதித்துவிட்டார் என்றும் குற்றம் சொல்கிறார்கள் கிராம மக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here