பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டத்திற்கு இந்தியாவில் எப்போதுமே எதிர்ப்புகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. எதிர்கட்சியினர் இப்போதுதான் அதை சொல்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
சுதந்திரம் பெற்றவுடன் இந்திய நாட்டில் தனியார் நிறுவனங்கள் பல அரசுடமையாக்கப்பட்டது. அது அன்றைய காலத்தின் கட்டாயம். அதுபோல் இப்போது தனியார் மயமாக்குவது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டில் பல துறைகள் தனியார் வசமே இருக்கிறது. தனியார் நிர்வாகத்தில் அனைத்தும் திறம்பட செயல்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களில் என்னதான் அரசும், அதிகாரிகளும் பாடுபட்டாலும் மிச்சம் இருப்பதில்லை. பொதுத்துறை என்று பார்த்தால் அது சேவை என்றாகிவிடும். தனியார் நோக்கம் லாபத்தில்தான் இருக்கும்.
லாபத்தில் நோக்கம் கொண்டவர், அதற்கு தகுந்தாற்போல் கட்டணங்களை நிர்ணயம் செய்துவிடுவார். பொதுத்துறை நிறுவனங்களில் அப்படி செய்தால் விலையேற்றம் என்று அரசியல் நடக்கும். அந்த சூழ்நிலையில் நஷ்டம் ஏற்பட்டாலும் தொடர்ந்து கடன் வாங்கி உள்ளே போட்டு வேலை நடக்கும் ஒரு கட்டத்திற்கு மேல் அது தோல்வியை தழுவும். அந்த வகையில்தான், பி.எஸ்.என். எல், அரசு போக்குவரத்து கழகம் போன்றவை நஷ்டத்தை சுமந்து கொண்டு நடைபோடுகிறது. அரசியல் காரணங்களுக்காக அதில் முதலீடு தொடரும் அது கடன் தொகையை அதிகப்படுத்திக் கொண்டே போகும்.
தனியாராக இருந்தால் நஷ்டம் அடையும் அளவிற்கு எந்த இயக்கத்தையும் தொடரமாட்டார்கள். அப்படியிருக்கும் போது கட்டுபடியாகும் கட்டணத்துடன் அது இயங்கும். மக்கள் அதற்கு பழகிவிடுவார்கள். ஆனால் ஓட்டுக்காக சலுகையை கட்டவிழ்த்துவிட்ட அரசியல் போக்கு, மக்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திவிட்டது. அப்படி பட்ட மக்களிடம் வேறு சிந்தனை இல்லாமல் போவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. இது தலைமுறை காலங்களில் பின்னடைவை ஏற்படுத்தும்.
எனவே நஷ்டம் அடையும் அளவிலான நிறுவனங்களை தனியார் மயமாக்கிவிட்டால் அவர்கள் அதை லாபத்தில் இயக்குவார்கள். அது அவர்களுக்கும் நல்லது, நாட்டிற்கும் நல்லது நாட்டு மக்களுக்கும் நல்லது. ஆளும் கட்சியாக இருக்கும்போது தனியாரை ஆதரிக்கும் சில கட்சிகள், எதிர்கட்சியாக இருக்கும்போது அந்த திட்டத்தை எதிர்க்கிறது. எப்போதும் ஆட்சிக்கு வரமுடியாத கட்சிகள் எப்போது தனியார் மயத்தை எதிர்க்கின்றன.
நாட்டில் ஓரிரு செல்வந்தர்கள் வளர்ந்து வருவதை பார்க்கும்போது சில அரசியல் கட்சிகளுக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. செல்வந்தர்களுக்கு எதிராக பிரசாரம் செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். நாட்டின் வளர்ச்சி என்பது ஒவ்வொருவரும் செல்வந்தர் ஆவதுதான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உள்நாட்டி தொழில் ஆரம்பித்தால் அதற்கு எதிராக போராட்டம் நடத்துவதையே கொள்கையாக கொண்டிருக்கிறது சில எதிர்கட்சிகள். அது நாட்டுக்கும், மக்கள் நலனுக்கும் நல்லது இல்லை.
எனவே அனைத்து கட்டமைப்புகளையும் உடைய நிறுவனங்களை உருவாக்க தனியார் இணைகிறார்கள் என்றால் அவர்களை ஆதரிப்பதில் தவறில்லை.