திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர் பிரதிஷ்டா தின வருஷாபிஷேகம்

0
123
thiruchendur murugan

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர் பிரதிஷ்டா தின வருஷாபிஷேகம் நடந்தது. இதையொட்டி மூலவர், சண்முகர் உள்ளிட்ட விமான கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மூலவர் பிரதிஷ்டை தினம் மற்றும் கும்பாபிஷேக தினம் ஆகிய இரு முறை வருஷாபிஷேக விழா நடக்கிறது. தை உத்திர நட்சத்திரத்தன்று மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினமாகும். இதையொட்டி வருஷாபிஷேக விழா நடந்தது. அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. அதிகாலை 5 உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து உதயமாரத்தாண்ட தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து கோயில் மகா மண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை பிரதான கும்பங்களும், குமரவிடங்கப்பெருமான் சன்னதியில் சுவாமி சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதி முன்பு பெருமாள் கும்பத்திற்கும் பூஜைகள் நடந்தது. காலை 9 மணிக்கு பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்கு எடுத்துவரப்பட்டன. காலை 9.10 மணிக்கு மூலவர் விமானத்திற்கு போத்திகளால் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சண்முகர் விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்களாலும் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வள்ளி தெய்வானை மற்றும் பெருமாள் விமான கலசத்திற்கு பட்டாச்சாரியார்களாலும் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து விமானங்களுக்கு தீபாராதனையும் அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் அம்ரித், தக்கார் பிரதிநிதி ஓய்வு பெற்ற கால்நடை டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர் செல்வராஜ், உள்துறை கண்காணிப்பாளர்கள் மாரிமுத்து, ஆனந்தன், செயல் அலுவலர் நேர்முக உதவியாளர் கார்த்தியேன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மூலவர் மற்றும் சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் சன்னதிகளில் கும்ப கலசங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மற்ற கால பூஜைகள் நடந்தது. மாலையில் சுவாமிக்கு சாயரட்சை தீபாராதனை ஆனதும் சுவாமி குமரவிடங்கபெருமாள், தெய்வானை அம்மன் தனித்தனி மயல்வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது.

இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here