மழைநீர் அனைத்தும் கடலுக்குத்தான் செல்ல வேண்டுமா? குளம், குட்டையில் சேமித்து வைக்க கூடாதா?

0
108
agri news

வருடத்தில் சில நாட்கள் மட்டும் பெய்யும் மழைநீரைத்தான் நாம் வருடம் முழுவதும் வைத்து பயன்படுத்தியாக வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலை, தமிழகத்திற்கு கிடைத்த நல்ல கொடை. அங்கிருந்து பாய்ந்தோடும் தண்ணீர், தாமிரபரணி ஆற்றின் வழியாக தென் தமிழகத்தில் பல மாவட்ட மக்களின் தாகத்தை தீர்க்கிறது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளமாக்குகிறது. இதெல்லாம் வழக்கமான தகவல்தான்.

சமீபகாலமாக அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவதில் மாவட்ட மக்களிடையே வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கிறது என்றாலும் விவசாயிகள் ஏற்றுக் கொள்கிறார்கள். கடைமடைக்குதான் முதலில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்கிற நீரியியல் விதி இங்கே காற்றில் பறக்கவிடுவதை அவ்வப்போது பார்க்கலாம்.

இப்போது அது பிரச்னை இல்லை. பருவ மழை பெய்து வருகிறது. வடக்கு மாவட்டங்களை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டு, இப்போது கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களை கதிகலங்க செய்து வருகிறது. அப்பகுதி மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.தமிழக முதல்வர் மு.ஸ்டாலின் நாளை அங்கே நேரில் சென்று ஆய்வு செய்ய இருக்கிறார். அந்த அளவிற்கு அங்கே நிலமை மோசமாக இருந்து வருகிறது. வீடுகள், தெருக்கள், கிராமங்களில் தேங்கிய தண்ணீரை அகற்றுங்கள் என்று அங்குள்ளவர்கள் கதறிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தநிலையில் மேலும் மழையின் தாக்கம் அதிகமாகும் வாய்ப்பு இருக்கிறது என்று வாணிலை ஆய்வு மையம் அறிவித்ததை தொடர்ந்து அணையில் தண்ணீரை திறந்துவிட போகிறோம் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

நேற்று(13.11.21) மாலை 5.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவசர அறிவிப்பு வெளியிட்டார். அதில், ‘’திருநெல்வேலியில் உள்ள தாமிரபரணி நதி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பது எங்களுக்குத் தெரியவந்துள்ளது. சேர்வலாறு-பாபநாசம் நீர் திறப்பு 15 ஆயிரத்தை தொட்டுள்ளது. இது மணிமுத்தாறு மற்றும் கடனா நீருடன் நாளை காலை தூத்துக்குடி மாவட்டம் மருதூரில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நமது மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு மருதூர், அகரம், ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், முக்காணி வழியாக புன்னக்காயலில் கடலில் கலக்கிறது.

தாமிரபரணி ஆற்றில் தற்போதுள்ள 2500 கனஅடியில் (13.11.21) நாளை (14.11.21) 15,000 கனஅடி நீர் திறக்கப்படும். எனவே தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்கும், நீந்துவதற்கும், மீன்பிடிப்பதற்கும் அல்லது வேறு எந்த வேலைக்கும் செல்ல வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் தாமிரபரணியில் பொழுது போக்கிற்காக மக்கள் அதிக அளவில் கூடுவார்கள். இதற்கு கண்டிப்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் நாளை ஆற்றின் அருகே கூடி பார்க்க கூட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

வருவாய், காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் உள்ளூர் அளவில் தகுந்த எச்சரிக்கை விடுக்க வேண்டும். பொதுமக்கள் ஆற்றில் இறங்குவதைத் தடுக்க வேண்டும், மக்கள் ஆற்றில் நுழைவதைத் தடுக்க அனைத்து வழிமுறைகளையும் செயல்படுத்த வேண்டும். தாமிரபரணி ஆற்றின் தாழ்வான பகுதிக்கு அருகில் அடையாளம் காணப்பட்ட குடியிருப்புகளில் நீர் அதிகரிப்பு குறித்து கண்காணிக்கப்படும். அவர்கள் நாளை காலை முன்முயற்சி நடவடிக்கையாக அடையாளம் காணப்பட்ட நிவாரண முகாம்களுக்கு மாற்றப்படுவார்கள்’’ என்று அறிக்கையை வெளியிட்டார்.

அவரது அறிக்கையின்படி மழை நீர் அனைத்தும் ஆற்றில் திறந்துவிடப்படும் என்றே தெரிகிறது. அது சரியான நடவடிக்கையாக இருக்க முடியாது. பக்கத்து மாவட்டங்களில் கனத்த மழை பெய்தாலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரிய அளவில் மழை பெய்ததாக தெரியவில்லை. அதாவது சேமித்து வைக்கும் அளவிற்கு பெய்யவில்லை என்றே தெரிகிறது. இனிவரும் காலங்களில் பெய்தால் நல்லதுதான். ஆனால் அந்த அளவிற்கு மழை பெய்யாமல் போய்விட்டால், தாமிரபரணி ஆற்றின் வழியாக அனைத்து மழைநீரும் கடலுக்கு போய்விட்டால், ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து பிரிய கூடிய வடகால், தென்கால், அதற்கு முன்பாக பிரியக்கூடிய மருதூர், மேலக்கால், கீழக்கால் பகுதிகளில் தேக்கி வைக்க தண்ணீர் இல்லாமல் போய்விட வாய்ப்பு இருக்கிறது.

இந்த இடத்தில் அதிகாரிகள் சொல்லலாம், ‘அதனால்தான் ஏற்கனவே பெய்த மழையின் மூலம் வந்த தண்ணீரை குளங்களில் சேமித்து வைத்திருக்கிறோம். அவற்றை திறந்துவிடவில்லை’ என்று சொல்லலாம். அதுதான் தவறு என்கிறோம். நீண்டகாலமாக குளம் குட்டையில் கிடந்த தண்ணீர் நிறம் மாறிப்போய் கிடக்கிறது. அதிலும், வெங்காயத்தாமரை உள்ளிட்ட நீர் தாவரங்கள் முழுவதுமாக குளங்களை ஆக்கிரமித்து வைத்திருக்கின்றன.

புதிய தண்ணீரை அதில் பாய்ச்சாமல் கடலுக்கு அனுப்பிவிட்டால், குளத்தில் கிடக்கும் பழைய தண்ணீர் மூலம் மக்கள், மற்றும் கால்நடைகளுக்கு நோய் பரவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே கடலுக்காக திறந்துவிடப்பட்டும் தண்ணீரில் சிறிய அளவிலாவது கிளை கால்வாய்களுக்கு திறந்துவிட வேண்டும். அது வேகமாக பாய்ந்தோடும்போது, தேவையில்லாத அசுத்தங்கள், தாவரங்கள் அதுவாகவே கடலுக்கு சென்றுவிடும் வாய்ப்பு அமைகிறது.

ஸ்ரீவைகுண்டம் வடகாலை பொறுத்தவரையில் பேய்க்குளம், பொட்டல்குளம், கோரம்பள்ளம் போன்ற குளங்களில் முற்றிலும் வெங்காயதாமரை வளர்ந்திருக்கிறது. பழைய தண்ணீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டிருக்கிறது. கோரம்பள்ளம் குளம் அருகில் 24 மடை கண்மாய் இருக்கிறது. அது தற்போது அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது. தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. அதாவது இதில் பெரும்பாலும் பழைய தண்ணீரே இருக்கிறது.

இப்போது இதில் சொல்ல வருவது என்னவென்றால், ஆற்றில் திறந்து கடலுக்கு அனுப்பபடும் தண்ணீரில் ஒரு பகுதியை இதுபோன்று வடகால் உள்ளிட்ட கிளைகால்களுக்கு திறந்து விட வேண்டும். அதுபோல் 24 மடை கண்மாயையும் திறந்துவிட வேண்டும். அப்படி செய்யும் போது, குளத்தில் தேங்கியிருக்கும் பழைய தண்ணீர் மற்றும் ஆக்கிரமித்துள்ள தாவரங்கள் அனைத்தும் கடலுக்கு இழுத்து செல்லப்படும். அப்படி செய்யும் போது குளம் முழுக்க புதிய தண்ணீரால் நிரப்பப்படும்.

கிளை கால்களுக்கு தண்ணீர் திறந்துவிட்டால் அங்குள்ள கரை உடைந்துபோகும் என்று அச்சப்படுவதை பார்க்க முடிகிறது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிமே தவிர, குளத்திற்கு புதிய தண்ணீர் அனுப்புவதை தடுக்கும் நடவடிக்கையாக இருந்துவிட கூடாது.அதுபோல் குளத்தில் தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று கேட்டால், அதற்கு பழைய தண்ணீரை சேமித்து வைத்து கணக்கு காட்ட கூடாது. விவசாயிகளில் சிலர் தண்ணீரை திறந்துவிட்டால், இருப்பதும் போய்விடுமே என்று அச்சம்தெரிவிப்பர். அவர்களின் அச்சத்திலும் நியாயம் இருக்கிறது. என்றாலும், அதிகப்படியான தண்ணீரை கடலுக்கு அனுப்ப தயாராகி வரும்போது அதை சேமிக்கலாம். தற்போதுள்ள பழைய தண்ணீர், அசுத்தங்கள், தாவரங்களை அகற்றுவதற்கு புதிய தண்ணீரை திறந்துவிடுவதால் மட்டுமே முடியும்.

எனவே தாமிரபரணி ஆற்றில் பாய்ந்து வரும் தண்ணீரின் ஒருபகுதியை ஸ்ரீவை வடகால் உள்ளிட்ட கிளை கால்களுக்கு அனுப்ப வேண்டும். மாறாக அனைத்து தண்ணீரையும் கடலுக்கு அனுப்பி பாவம் செய்துவிட கூடாது என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here