தூத்துக்குடி, டிச. 20:
தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 5 உரக்கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ. முகைதீன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்தில் ஏறத்தாழ 1.60 லட்சம் எக்டேர் பரப்பளவில் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், சோளம், கம்பு, பருத்தி மற்றும் எண்ணெய்வித்து பயிர்களும் ஏறத்தாழ 20,000 எக்டேர் பரப்பில் நெல், வாழை போன்ற இரவை பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், மானாவாரி பயிர்களுக்கு தேவையான உரங்கள் தனியார் உரக்கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், இணை பொருள்களை உரங்களுடன் சேர்த்து வாங்க கட்டாயப்படுத்துவதாகவும் விவசாயிகள் புகார் அளித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, விவசாயிகளின் புகார்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு கோவில்பட்டி, எட்டையபுரம், விளாத்திக்குளம், பேய்க்குளம் மற்றும் சாத்தான்குளம் பகுதியில் விதிகளை மீறிய ஐந்து உரக்கடைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
மேலும், கலெக்டர் உத்தரவுபடி வேளாண்மைத்துறை, வருவாய்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களை கொண்டு ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து உரக்கடைகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்த உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.