கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் நகர அதிமுக சார்பில் , நகர செயலாளர் விஜய பாண்டியன் ஏற்பாட்டின் பேரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியபோது, ’’2016 தேர்தலில் அதிமுக தனித்து தான் நிற்கும் என்று ஜெயலலிதா கூறிய போது சட்டசபையில் இருந்த முக ஸ்டாலின் அமைதி காத்தார்.மு.க ஸ்டாலின் என்றுமே கனவு முதல்வர் தான். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பல்வேறு சோதனைகள் ஆட்சி மற்றும் கட்சிக்கு வந்தாலும் அசைக்க முடியாத ஆட்சியாக அதிமுக ஆட்சி உள்ளது.
என்றும் , ஜெயலலிதாவின் கனவினை நனவாக்கி தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற 18 எம்.எல்.ஏக்கள், பதவிகளை இழந்து தெருவில் நிற்கிறார்கள், நீதிமன்றமே அவர்களை தகுதி இழப்பு செய்தது என்றால் அதற்கு ஜெயலலிதாவின் ஆன்மா தான் காரணம். ஜெயலலிதாவிற்கு தூரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. துணை முதல்வர் ஓ.பிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் அதிமுக எதிராக. வாக்கு அளித்தாலும், பின்னர் நம்முடன் இணைந்து இந்த ஆட்சியை காத்தனர்.
ஆகையால் தான் நீதிமன்றம் வரை சென்ற 11எம்.எல்ஏ வழக்கு இன்று பிரச்சினைகள் இல்லாமல் நீதிமன்றம் முடித்து வைத்து சபாநாயகர் முடிவு எடுப்பார் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு காரணம் ஜெயலலிதாவின் ஆன்மா தான் காரணம்’’ என்றார்.
கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த கயத்தாறு ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியை விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன் , ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், அதிமுக பேச்சாளரும், திரைப்பட நடிகையுமான விந்தியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.