நீட் எதிர்ப்பு அரசியல் தவறு – கட்சிகள் மாணவர்களுக்கு துரோகம் செய்ய பார்க்கிறது?

0
17
neet news

உலகில் எந்த ஒரு நாட்டிலும் குறிப்பிட்ட அளவில் படித்தவர் என்றால், அவர் படித்து முடித்து தேர்வு எழுதி, அதில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அவர் எதாவது தனித்துவ துறையில் வேலைக்கு படிக்க வேண்டும் என்றாலோ, அதில் வேலைக்கு சேர வேண்டும் என்றாலோ அதற்கான நுழைவு தேர்வை அவர் எதிர்கொள்ள வேண்டும். இதுதான் உலக நியதி. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் விநோத அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். மாணவர்களுக்கு உதவுகிறோம் என்கிற பெயரில் அவர்களின் வாழ்க்கையை பாழ்படுத்துகிறார்கள். திட்டத்தில் குறையிருந்தால் அதை அகற்ற கோரிக்கை வைக்கலாம். ஆனால் இவர்கள், ஒட்டுமொத்த திட்டத்தையே எதிர்க்கும் வித்தியாசமான அரசியல்வாதிகள்.

நுழைவுத்தேர்வே வேண்டாம் என்று அபூர்வ புத்தி கொண்டிருக்கும் இவர்கள், சாமான்ய மாணவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று காரணம் சொல்கிறார்கள். குறிப்பிட்ட துறை மட்டுமல்லாது ஏனைய விசயங்களும் தெரிந்து கொள்ள செய்ய வேண்டும் என்பதற்குதான் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெறமுடியாது அந்த அளவிற்கு அறிவில்லாதவர்கள் நமது மாணவர்கள் என்று தமிழக மாணவர்களை அசிங்கப்படுத்தி வருகிறார்கள் நம்மூர் அரசியல்வாதிகள்.

விட்டால் உலகத்திற்கே அறிவை கொடுப்பவர்கள் தமிழர்கள் என்று வாதிட்டு வரும் தமிழக அரசியல்வாதிகள், தமிழக மாணவச்செல்வங்களை கொச்சைப்படுத்துகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அவர்களை அச்சமடைய செய்து தற்கொலைக்கும் தூண்டுகிறார்கள்.

தேசிய அளவில் கல்வி பொதுவுடமை பெற்றால், குறிப்பிட்ட வெளிநாட்டினரின் உதவி அவசியமில்லாமல் போகும். அவசியமில்லாதவர்களின் மூலம் மொழியும் தேவைப்படாது, மதமும் தேவைப்படாது. எனவே அவர்கள் புறக்கணிக்கபடுவார்கள். அதனால் தேசிய அளவிலான கல்வி திட்டத்தை அந்நிய ஆதரவு இயக்கங்கள் ஆதரிப்பதில்லை. அந்த வகையில்தான் நீட் தேர்வையும் சில இயக்கங்கள் ஆதரிக்க போறதில்லை. இப்போது இந்த சந்தேகம் பேசப்பட்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல், சட்ட மன்ற தேர்தலுக்கு பயன்படுமே என்று நீட் தேர்விற்கு எதிராக போராட்டம் நடத்திய அரசியல் கட்சிகள், இப்போது தடுமாறுகின்றன. அவர்களின் கொள்கையை, நோக்கத்தை ஆதரிக்கும் சில இயக்கங்களும் நீட் தேர்வை எதிர்த்து வருகின்றன. இந்த ஊரில் இப்படித்தான் அரசியல் செய்ய வேண்டும் என்று அதிமுகவும் நீட் தேர்வுக்கு எதிராகவே பேசி வருகின்றன. பாஜக போன்ற சில இயக்கங்கள் நீட் தேர்வை ஆதரித்து வருகின்றனர்.

சட்ட ரீதியாக நீட் தேர்வு விவகாரங்களில் மாநில அரசு இதற்கு மேல் ஒன்றும் செய்துவிட முடியாது. வேண்டுமானால் நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்யலாம். இதை தமிழக அரசியல் கட்சிகள் அறிந்திருக்கின்றன. ஆனாலும் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு என்று அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் கேட்டு கேட்டு திமுகவை நிலைகுலைய செய்யலாம் என்று நினைக்கிறது. இப்போதைக்கு அது தவறான வேலை என்பதை அக்கட்சிகள் உணர வேண்டும்.

எதாவது செய்தாக வேண்டுமே என்று திமுக ஏதேதோ செய்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வு நடத்தப்படாத காலங்களில் சாமான்ய மாணவரால் எளிதில் சீட் வாங்க முடியாமல் தவித்தது எல்லோருக்கும் தெரியும். நீட் தேர்வுக்கு பிறகு தமிழகத்தில் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள் என்பதையும் பாஜக போன்ற கட்சிகள் சொல்லி வருகிறது. அப்படியிருக்கும் போது, எதிர்ப்பாளர்களே அமைதியாக இருக்கும் போது அதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்கிற நோக்கில் அவர்களை சும்மா இருக்கவிடாமல் தூண்டிக் கொண்டே இருந்து அவர்களை எதிர்ப்பாக செயல்பட வைப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.

இந்தாண்டு மருத்துவ கல்லூரியில் சேர 9000 இடத்திற்கு 40,288 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் செல்வந்தர் வீட்டு பிள்ளைகள் மட்டுமே படிக்க முடியும் என்றிருந்த மருத்துவ படிப்பிற்கு இப்போது ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள் என்றால், நீட் தேர்வு மூலம் ஏற்பட்டிற்கும் நம்பிக்கைதான் அதற்கு காரணம் என்பதை தமிழக அரசியல் கட்சியினர் உணரவேண்டும்.

நீங்கள் ஒன்று சேர்ந்து நீட் தேர்வை எதிர்ப்பது, தமிழக மாணவர்களுக்கு செய்யும் துரோகம் என்பதை உணருங்கள். அதை தடுத்தால், எதிர்கால சந்ததி உங்களை நிச்சயம் மன்னிக்காது.

நடுநிலை ஏ.ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here