ஓட்டப்பிடாரம் தொகுதியில் கலைக்கல்லூரி, பஸ் டெப்போ நிச்சயம் வரும் – சண்முகையா எம்.எல்.ஏ உறுதி

0
163
ottapitaram mla

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு புறம் தாமிரபரணி ஆறு ஓடி கடலில் கலக்குகிறது என்றாலும் மாவட்டத்தில் இன்னொருபுறம் வறட்சியாகவும் வானம் பார்த்த பூமியாகவும்தான் இருக்கிறது. இதில் இரண்டுக்கும் நடுவில் அமைந்திருக்கிறது ஓட்டப்பிடாரம் தொகுதி. வளம் பாதி, வறட்சி பாதியான இத்தொகுதிக்கு எந்த ஒரு நலத்திட்டங்களும் அவ்வளவு எளிதில் வந்துவிடாது. அத்தொகுதி மக்கள் பிரதிநிதிகள் போராடி பார்ப்பதும், சோர்ந்து போவதும் வாடிக்கை. தற்போதைய அத்தொகுதியின் திமுக எம்.எல்.ஏ சண்முகையாவும் அப்படியே நம்பிக் கொண்டிருக்கிறார்.

தனித் தொகுதியான ஓட்டப்பிடாரத்தில் பெரிய அளவில் கல்வி நிலையங்கள் இல்லை. குறுக்குச்சாலையில் அமைச்சர் கீதாஜீவனுக்கு சொந்தமான ஒரு கல்லூரி மட்டும் இருக்கிறது. மற்றபடி குறிப்பிட்டு சொல்ல கூடிய அளவில் கல்லூரிகள் இல்லை. வடக்கே கோவில்பட்டி, கிழக்கே தூத்துக்குடி, மேற்கே திருநெல்வேலியை நோக்கிதான் போக வேண்டியது உள்ளது. அப்படி செல்வதற்கு பேருந்து வசதிகள் இருந்தும் அது தேவையான அளவில் இல்லை. ஓட்டப்பிடாரத்தில் தனியாக ஒரு பஸ் டெப்போ வேண்டும். அங்கிருந்து பஸ்களை இயக்கினால் அப்பகுதி மக்களுக்கு போக்குவரத்து தேவை பூர்த்தியாகும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியினரின் கோரிக்கை அனைத்தும் கிணற்றில் போட்ட கல் ஆக அசைவற்று போய்விடுகிறது.

இது குறித்து தற்போதைய எம்.எல்.ஏவான சண்முகையாவும் கோரிக்கை வைத்து வருகிறார். தற்போது சட்டமன்றத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே அப்பகுதியில் இருக்கும் கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் எனவே இப்போதைக்கு அங்கே கல்லூரி அமைக்க அவசியம் இல்லை என்கிற அர்த்தத்தில் பதில் கூறப்பட்டிருக்கிறது.

இது குறித்து எம்.எல்.ஏ சண்முகையாவிடம் பேசினோம், ’’ஓட்டப்பிடாரம் தொகுதியில் கலைக்கல்லூரியும், பஸ் டெப்போவும் கொண்டு வர கோரிக்கை வைத்து வருகிறேன். கல்லூரியை பொறுத்தவரை நிதியாதாரத்தை கருத்தில் கொண்டு கல்லூரி அமைக்கப்படும் என்று பதில் தந்திருக்கிறார்கள். கல்லூரி அமைக்க முடியாது என்று சொல்லவில்லை. மேலும் பஸ் டெப்போவுக்கு, முதல்வர், அமைச்சர், எம்.டி ஆகியோரிடம் மனு கொடுத்திருக்கிறேன். அதையும் பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறார்கள். எனவே இந்த இரண்டையும் எங்களின் திமுக அரசு நிச்சயமாக தொகுதி மக்களுக்கு தரும்’’ என்றார்.

பொதுவாக அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், அதே தொழிலில் இருக்க கூடிய தனியார் நிர்வாகங்கள் பாதிக்கப்படும். இதனால் அரசு திட்டங்களுக்கு எதாவது ஒரு வழியில் தனியார் முட்டுக்கட்டை போடலாம். அப்படித்தான் இந்த திட்டங்களும் இதுவரை செயல்படுத்த முடியாமல் போகிறதோ என்னவோ என்று அப்பகுதி மக்கள் சந்தேகிக்கிறார்கள். அதையெல்லாம் தாண்டி முயற்சி செய்தால்தான் எம்.எல்.ஏவின் கோரிக்கை நிறைவேறும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here