பேரூரணியிலிருந்து திருச்செந்தூருக்கு ‘பூ’ கொண்டு சென்ற பேருந்து நிறுத்தம் – மீண்டும் இயக்க கோரிக்கை

0
90
tntc

திமுக அரசு பொறுப்பேற்றதும் ஏற்கனவே இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட பேருந்துகள் அனைத்தைம் மீண்டும் இயக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நிறுத்தப்பட்ட பல பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாயர்புரம் பகுதியில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வே.பா.மா.மச்சேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு அவர் எழுதிய மனுவில், ’’திருச்செந்தூர் – பேரூரணி இடையே பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த தடம் எண் 13 ஏ என்கிற பேருந்து நிறுத்தப்பட்டிருக்கிறது. நல்ல வசூலுடன் இயங்கி வந்த அந்த பேருந்தை எதற்காக நிறுத்தினார்கள் என்று தெரியவில்லை. இந்த பேருந்து மூலமாகவே மலர் விவசாயம் செய்யும் பேரூரணியில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு அதிக அளவில் மலர்(பூ) கொண்டு செல்லப்பட்டு வந்தது. முக்கியம் வாய்ந்த அந்த பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பேருந்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்கவும், கூடுதல் மக்கள் பயனடைவதற்கும் அதை செக்காரக்குடி வரை நீட்டித்து மீண்டும் இயக்க வேண்டும். அதன் மூலம் பேரூரணி – செக்காரக்குடி இடையில் உள்ள கிராம மக்களும் பயனடைவார்கள்.

இதேபோல் கோவில்பட்டி – ஓட்டப்பிடாரம் – புதியம்புத்தூர் – புதுக்கோட்டை – சாயர்புரம் – ஏரல் – திருச்செந்தூர் இடையே இயக்கப்பட்டு வந்த என் 349 என்கிற பேருந்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்து, புதியம்புத்தூர்,கைலாசபுரம்,ஓட்டப்பிடாரம் பகுதி மாணவர்கள் சாயர்புரம் கல்லூரியில் சென்று படிப்பதற்கு வசதியாக இருந்து வந்தது. தற்போது இந்த பேருந்து நிறுத்தப்பட்டிருப்பதால், மாணவ, மாணவியர் கஷ்டத்தை அனுபவித்து வருகிறார்கள்.

இதேபோல் உவரி – திசையன்விளை – சாத்தான்குளம் – நாசரேத் – வனதிருப்பதி – நாலுமாவடி – குரும்பூர் – ஏரல் – சாயர்புரம் – தூத்துக்குடி இடையே இயக்கப்பட்ட 145 எஸ்.எஸ்.எஸ் என்கிற பேருந்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் புளியம்பட்டி – வாகைகுளம் – சாயர்புரம் – ஏரல் இடையே இயக்கப்பட்ட பேருந்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ள இந்த பேருந்துகளை மீண்டும் இயக்கி, மக்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here