விளாத்திகுளம் கோயில் குளியலறையில் ரகசிய கேமரா விவகாரம் – பூசாரி உள்பட 10 பேரிடம் விசாரணை

0
66
camara news

எங்கெல்லாம் ஒழுக்கம் இருக்கும், இருக்க வேண்டும் என நினைக்கிறோமோ, அங்கெல்லாம் சில அநியாயங்களும் நடக்கத்தான் செய்கிறது. மிகவும் புனிதமாக கருதக் கூடிய கோயிலுக்குள்ளும் சில நேரங்களில் அபத்தங்கள் நடப்பதை அறிகிறோம். விளாத்திகுளம் கோயில் குளியலறைக்குள் ரகசிய கேமரா வைக்கப்படுகிறது என்றால் இது, பெரிய அநியாயம்தானே?

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே சித்தவ நாயக்கன்பட்டியில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் மாதந்தோறும் பெளர்ணமி பூஜை நடைபெறுவது வழக்கம். இதில் பங்கேற்க உள்ளூர் மட்டுமின்றி வெளியூரிலிருந்தும் பக்தர்கள் வருவர். அதேபோல், இந்தக் கோயிலில் மாசிக் கொடை விழாவும் விமரிசையாக நடைபெறும். அப்படிப்பட்ட பிரபலமான கோயில் குளியலறையில் பெண்கள் குளியலறையில் ரகசியமாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதை பெண் ஒருவர் கண்டுபிடித்து தகவல் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, விளாத்திகுளம் காவல் ஆய்வாளா் இளவரசு தலைமையில் போலீசார் கோயிலுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பெண்கள் குளியலறை உள்ளிட்ட 3 இடங்களில் மறைவாக 3 சிசிடிவி கேமராக்கள் இருப்பதை கண்டுபிடித்தனா். 3 கேமராக்களையும் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து கோயில் பூசாரி முருகன் அளித்த புகாரின் பேரில், விளாத்திகுளம் போலீசார் வழக்குப் பதிந்து, கோயில் நிர்வாகத்தினரால் பணிநீக்கம் செய்யப்பட்ட பழைய பூசாரி பூபதி உள்ளிட்ட 10 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

கேமராக்களை ஆய்வு செய்ததில் எந்தவிதமான பதிவுகளும் இல்லை. மேலும் அந்த கேமராக்களில் இணைப்புகள் எதுவும் கொடுக்காமல் வைக்கப்பட்டுள்ளது. எனவே கழிப்பறை மற்றும் குளியலறையில் கேமராக்கள் இருந்தது குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. இதில் சம்பந்தப்பட்டவா்கள் யாராக இருந்தாலும் விரைவில் கண்டு பிடிக்கப்பட்டு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விளாத்திகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரகாஷ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here