’’தண்ணீரை சேமித்து அட்வான்ஸ் கார் சாகுபடிக்கு அனுமதி வழங்கிட வேண்டும்’’ – காங்கிரஸார் கலெக்டரிடம் கோரிக்கை

0
173
congress news

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசிஅமிர்தராஜ் ஆலோசனையின்பேரில் தூத்துக்குடி தெற்குமாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு: ’’மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் மருதூர் அணை மேலக்கால்&கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் அணை வடகால்&தென்கால் பாசன வாய்க்கால்கள் மூலமாக 46ஆயிரத்து 107ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

தற்போது தாமிரபரணி பாசன பகுதிகளில் பிசான நெல்பயிர் சாகுபடி செய்யப்பட்டு நெல் பயிர்கள் அறுவடைக்கு வந்துள்ளது. சிலபகுதிகளில் இன்னும் நெல்பயிர் அறுவடை துவங்காத நிலையில், மற்ற பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் துவங்கி நடைபெற்றும் வருகிறது.

இத்தகையை சூழ்நிலையில், தாமிரபரணி ஆற்றில் தற்போது தேவையில்லாமல் அதிகப்படியான தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருகிறது. பிசான நெற்பயிர் சாகுபடி முடிந்தவுடன் ‘அட்வான்ஸ் கார்’ சாகுபடிக்கு அனுமதி கிடைக்கலாம், அதற்கேற்ப அணைகளில் தண்ணீர் இருப்பில் உள்ளது என்ற மகிழ்ச்சியில் விவசாயிகள் இருந்து வருகின்றனர்.

எனவே, தாமிரபரணி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை குறைத்து விவசாயம் மற்றும் குடிநீருக்கான தண்ணீர் வீணாகாமல் தடுத்திடவேண்டும். பிசான நெற்பயிர் அறுவடை பணிகள் முடிந்தவுடன் ‘அட்வான்ஸ் கார்’ சாகுபடிக்கு தாமதமின்றி அனுமதி கொடுத்து, சாகுபடி காலம் முடியும் வரை தட்டுப்பாடு இன்றி தண்ணீர் வழங்கிட உத்தரவாதம் அளித்திடவேண்டும்.

தாமிரபரணி பாசன குளங்கள், வாய்க்கால்களில் சேதமான நிலையிலுள்ள அனைத்து மடைகளையும் போர்க்கால அடிப்படையில் விரைந்து சரி செய்திடவேண்டும், பழுதான மடைகள் உள்ளிட்ட குறைகளை சரிசெய்ய முன்வராத நிலையில் பலவருட காலமாக ஒரே பகுதியில் பணியாற்றிவரும் பொதுப்பணித்துறையினரை தாமதமின்றி பணியிட மாறுதல் செய்திடவும் வேண்டும்.

சட்டமன்ற தொகுதியின் தலைமையிடமாக திகழும் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் கடந்த பல மாதங்களாக பொதுமக்கள் தெருநாய் தொல்லையால் தினம்தினம் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்திடவேண்டும்.

ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையத்தில் இருந்து கிராமங்களுக்கு இயக்கப்பட்டுவரும் டவுண்பஸ்களை சரியான முறையில் சரியான நேரத்திற்கு இயக்கிடுதல் வேண்டும். ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார கிராமங்களில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைத்திடவேண்டும்.

ஸ்ரீவைகுண்டம் புதிய பாலத்திலுள்ள விரிசல்களை எல்லாம் சரி செய்து, பாலத்தின் பக்கவாட்டுச்சுவர்களில் வளர்ந்துவரும் மரங்களை அழித்திடுதல் வேண்டும். தமிழக முதல்வர் அறிவித்துள்ளபடி ஸ்ரீவைகுண்டம் வாரச்சந்தையை தாமதமின்றி விரைந்து செயல்படுத்திடவேண்டும்’’ இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருக்கிறது.

மனு கொடுக்க, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஜெயசீலன், இசைசங்கர், தெற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீராமன், ஐஎன்டியுசி சந்திரன், ஸ்ரீவைகுண்டம் வட்டாரத் தலைவர் நல்லக்கண்ணு, நகர தலைவர்கள் ஸ்ரீவை சித்திரை, பாலசிங், ஒன்றிய கவுன்சிலர் பாரத், கிராம காங்கிரஸ் தலைவர் சிவகளைபிச்சையா, நிர்வாகிகள் தாசன், ஜேக்கப், மதிசேகரன், அந்தோணிகாந்தி உள்ளிட்டவர்கள் உடன் வந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here